Pages

Monday, 28 October 2013

போலியோ என்னும் இளம்பிள்ளைவாதம்...!

போலியோ என்பது சிறு குழந்தைகளை தாக்கும் ஒருவகை வாத நோய் ஆகும். போலியோமைலிட்டிஸ் எனப்படும் இந்த இளம்பிள்ளைவாத நோய் மிக கடுமையான தொற்றுநோய் ஆகும். இது “போலியோ வைரஸ்” எனப்படும் வைரஸினால் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு வாய் வழியாக பரப்பப்படுகிறது. குறிப்பாக இந்த வைரஸ், பாதிக்கப்பட்டவரின் மலம் மூலமாக வெளியேறி, மாசுபடுத்தப்பட்ட நீர்நிலைகள், சுகாதாரமற்ற வாழ்வாதார இடங்களில் கலந்து பின் மற்றொருவரை தாக்குகிறது. 

போலியோ எவ்வாறு நம் உடலை பாதிக்கிறது?

சுகாதாரமற்ற உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் குழந்தைகள் அவ்விடத்தில் புழங்கும் முறைகளினால் மிக சுலபமாக இந்த வைரஸ் அவர்களின் குடல் பகுதியை சென்றடைந்து விடுகிறது. குடல் பகுதியில் இந்த வைரஸ் பல்லாயிரக்கணக்கில் பல்கி பெருகுகிறது. பின் படிப்படியாக இரத்த ஓட்டத்தில் கலக்க ஆரம்பிக்கிறது.

இந்த போலியோ வைரஸ் நம் உடலின் எந்த பாகத்தை தாக்குகிறது? அல்லது எத்தகைய அறிகுறிகளை உருவாக்குகிறது?

அறிகுறிகள்:

பெரும்பான்மையான போலியோ வைரஸ் தாக்குதலில் அறிகுறிகள் சுலபமாக வெளிப்படுவதில்லை. ஆனாலும் சிறிய அளவுகளிலிருந்து பெரிய அளவிலான பல்வேறு அறிகுறிகளை இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படுத்துகிறது.

1. பெரும்பாலும் குடற்பகுதியில் பெருகும் தருணங்களில் தொண்டை கரகரப்பு, காய்ச்சல், வாந்தி, வயிற்று வலி, மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கை உண்டாகுகிறது.

2. இந்த வைரஸ், மத்திய நரம்பு மண்டலத்துக்குள் நுழைந்து விட்டால் தலைவலி, கழுத்து மற்றும் முதுகுவலி, வயிற்று வலி, காய்ச்சல், எரிச்சல், வாந்தி ஆகிய அறிகுறிகள் தோன்றுகின்றன.

இதன் தாக்கம் தான் என்ன?

இதில் பாதிக்கப்படும் நரம்புகள் பொறுத்து தாக்கங்கள் மாறுபடுகின்றன.

1. சுமார் ஒரு சதவித மக்களிடையில், இந்த வைரஸ், மத்திய நரம்பு தொகுதியை (Central Nervous System - CNS) தாக்கி, இயக்குத்தசைகளை பாதித்து, பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது.

2. இந்த வைரஸ்கள் தண்டுவடத்தை பாதித்து உறுப்புகளை செயலிழக்கச் செய்கின்றன. குறிப்பாக இவை ஒருவரின் கால்களை முடக்குகின்றன.

3. அல்லது சதைப்பகுதிகளில் ஊடுருவி, அவற்றை மிருதுவாக்கி சதைப்பகுதியை சீரழிக்கின்றன.

4. மிகவும் அரிதாக, இவை மூளை செல்களை தாக்கி தலைவலி, மனநிலை பாதிப்பு, மற்றும் மூளை வாதத்தை ஏற்படுத்துகிறது.

இவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்று பார்த்தால் உடல்நிலை சார்ந்த பாதிப்புகள் மற்றும் மனநிலை சார்ந்த பாதிப்புகளோடு சமுதாய பாதிப்புகள் அதிக அளவில் இருக்கும்.

1. நரம்பியல் இயக்க பாதிப்பினால் நடப்பதில் சிரமம்
2. மூளை செல்கள் பாதிப்பினால் சுய சிந்தனை இழத்தல்
3. தசை நார்களின் பாதிப்பினால் உடல் நிலை தளர்வு
என இவர்கள் வளர வளர பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகுகிறார்கள்.

இத்தகைய போலியோ வைரஸ் தாக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்வியல் முறை முற்றிலுமாக மாறி விடுகிறது.

1. இவர்கள் சராசரி வாழ்க்கை முறையை இழக்கிறார்கள்.
2. மற்றவர்களின் கேலி கிண்டல்களுக்கு ஆளாகிறார்கள்.
3. ஒரே இடத்தில் முடக்கப்பட்டு தன்னம்பிக்கையை தொலைக்கிறார்கள்.
4. சுய இரக்கம், சுய பச்சாதாபம் கொண்டு அடுத்தவர்களை நம்பி வாழ்கையை நகர்த்தும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.


சரி, இவர்களுக்கான தீர்வு தான் என்ன?

இந்த நோயை முற்றிலும் குணப்படுத்த முடியுமா என்று கேட்டால் முடியாது என்பது தான் பெரும்பாலான பதிலாக இருக்கிறது. நோயின் வீரியத்தை வேண்டுமென்றால் மிகவும் சிரமப்பட்டு குறைத்துக்கொள்ள முடியும்.

எவ்வாறு அதன் வீரியத்தை குறைக்கலாம்?

இது பாதிப்பின் தன்மையை பொறுத்தது.

1. வலுவிழந்த தசைகளில் நோய் தொற்றை தடுக்க மருந்து/ ஆன்டிபையாட்டிக்ஸ் (antibiotics) கொடுப்பது.
2. மிகுதியான வலிகளுக்கு வலி நிவாரணி கொடுத்தல்.
3. மிதமான உடற்பயிற்சி.
4. சத்தான உணவு பழக்க வழக்கங்கள்.
5. செயற்கை உறுப்பு மாட்டுதல்.
6. தேவைபட்டால் அறுவைசிகிச்சை.

இவற்றின் ஏதாவது ஒன்றின் மூலமாகவோ, இல்லை தேவைக்கேற்ற சிகிட்சை மூலமாகவோ குறைந்தபட்ச மீட்சியை காணலாம்.

இத்தனை சிரமங்கள் கொடுக்கும் இந்த இளம்பிள்ளை வாதத்தை வராமலே தடுத்து விட்டால் தான் என்ன? அப்படி நம்மால் தடுக்க முடியுமா?

ஆம், கண்டிப்பாக நம்மால் தடுக்க முடியும். எப்படி?

1. சுகாதாரம் பேணுதல் – நம்மை சுற்றி இருக்கும் சூழலை சுகாதாரமாக வைத்துக்கொள்வோம்.

2. ஆரோக்கியம் காத்தல் – நல்ல சத்தான உணவுகள் கொடுத்து குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம்.

3. நோய் தடுப்பு முறை – தடுப்பூசி அல்லது தடுப்பு சொட்டு மருந்து போடுவது.

நோய் தடுப்பு முறை:

இந்த நோய் தடுப்பு முறை பற்றி நாம் கொஞ்சம் விரிவாக காணலாம்.

வருமுன் காப்பதே இதன் தாரகமந்திரமாகும். போலியோ பற்றி இங்கு குறிப்பிடுவோமானால் நம் குழந்தைகளை இந்த கொடிய வைரஸ் தாக்கும் முன்பே அதே வைரஸ் கொண்டு தற்காத்துக்கொள்ளலாம்.

எப்படி?

இளம்பிள்ளைவாதம் உருவாக்கும் இந்த போலியோ வைரஸின், நோய் உருவாகும் காரணியை நீக்கி விட்டு அதன் எதிரான எதிர்பாற்றலை அதிகபடுத்தும் முறையே இந்த நோய் தடுப்பு முறை. இதனை ஊசி மூலமாகவோ இல்லை சொட்டு மருந்து மூலமாகவோ குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

வகைகள்:
1. பலகீனப்படுத்தப்பட்ட வைரஸ்
2. செயலிக்க செய்யப்பட்ட வைரஸ்

இப்படி நோயினை உருவாக்க முடியாத வைரஸை குழந்தைகளின் உடலுக்குள் செலுத்தி, அவற்றிக்கு எதிரான நோய் தடுப்பாற்றலை தூண்டுவதன் மூலம் வீரியமிக்க போலியோ வைரஸ்கள் அவர்களை அணுக விடாது தடுத்து விடலாம்.

இப்பொழுது மிகவும் பிரபலமான முறையாக Oral Polio Vaccine (OPV) அதாவது வாய்வழி சொட்டு மருந்து உள்ளது.

1. இதனை அறிமுகபடுத்தியவர் யார்?
2. இதனை எப்படி கொடுக்க வேண்டும்?
3. யாருக்கு கொடுக்க வேண்டும்?

1961-ம் ஆண்டு இந்த போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் முறையை முதன்முதலில் அறிமுகபடுத்தியவர் ஆல்பர்ட் சாபின் (Albert Sabin). இதில் போலியோவை ஏற்படுத்தும் மூன்று வகையான வைரஸ்களும் சரியான விகிதத்தில் பலகீனப்படுத்தப்பட்டு குழந்தைகளுக்கு வாய் வழி சொட்டு மருந்தாக கொடுக்கப்படுகிறது.

இதில் அப்படி என்ன விசேசம்?

இப்படி கொடுக்கப்படும் இந்த பலகீனப்படுத்தபட்ட வைரஸ், குழந்தைகளின் வாய்வழியாக குடல் பகுதியை சென்றடைகிறது. அங்கு இது நான்கில் இருந்து ஆறு வாரம் வரை உயிர்த்திருந்து குழந்தைகளின் நோய் எதிர்ப்பாற்றலை தூண்டுகிறது. இதனால் மூன்று விதமான போலியோ வைரஸ்களுக்கு எதிரான பிறப்பொருள் எதிரியை (antibodies) நோய் தடுப்பு மண்டலம் (immune system) உற்பத்தி செய்கிறது. இதனால் போலியோவிற்கு எதிரான நோய்தடுப்பாற்றல் வலுபடுத்தப்படுகிறது. அதன் பின் வீரியமிக்க வைரசுகள் உடலில் நுழைந்தால் அவை நுழைந்த வேகத்திலேயே அழிக்கப்படுகின்றன. போலியோ வராமல் மனித உயிர்களும் பாதுகாக்கப்படுகின்றன.

இவற்றின் மற்றைய விசேஷமாக:

1. கொடுப்பது சுலபம் – வாய் வழியாக சுலபமாக கொடுக்கலாம்
2. திறமையான மருத்துவர் துணை தேவையில்லை – செவிலி தாயோ இல்லை சுகாதாரத்துறை பணியாளரோ போதும்.
3. சுத்திகரிக்கப்பட்ட ஊசிகளின் தேவைகள் இல்லை
4. வலிகள் இல்லாத உட்புகுத்தல் முறை
5. மிக மிக மலிவானது.
6. பாதுகாப்பானது
7. நீண்ட நாள் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்க வல்லது.
8. மிக மிக பாதுகாப்பானது என்று உலக சுகாதார மையத்தால் சான்று அளிக்கப் பட்டது.

போலியோ சொட்டு மருந்து முகாம்:

இந்தியாவில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ நோய் வராமல் தடுப்பதற்கான சொட்டு மருந்து அளிக்கும் திட்டம் அனைத்து மாநிலங்களிலும், இந்திய ஆட்சிப்பகுதிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இலவச சொட்டு மருந்து அளிக்கும் திட்டத்தை குறிப்பிட்ட நாளில் மாநில அரசுகள் அல்லது ஆட்சிப் பகுதி நிர்வாகங்கள் செயல்படுத்துகின்றன. மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், பேருந்து நிலையம், தொடருந்து நிலையம், விமான நிலையம், வழிபாட்டுத் தலம், பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்கள் போன்ற பகுதிகளில் இதற்கான சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து அளிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்தப் போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழ்நாட்டில் 40 ஆயிரத்து 399 மையங்களில், சுமார் 2 லட்சம் ஊழியர் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. இந்த மையங்கள் மற்றும் பணியாளர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் மாறுபடக்கூடும்.

இதனை எத்தனை தடவை யாருக்கு கொடுக்கலாம்?

பெரும்பாலும் இதனால் பக்க விளைவுகள் இல்லையென்பதால் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் யாருக்கு வேண்டுமென்றாலும் (சில மருத்துவ ஆலோசனைகள் தவிர்த்து) எத்தனை தடவை வேண்டுமென்றாலும் கொடுக்கலாம்.

கிளம்பி விட்டீர்களா?

போலியோவை பற்றி இத்தனை தெரிந்து கொண்டோம். இதனை நீங்கள் மட்டும் அறிந்து கொண்டால் போதுமா? முடிந்தவரை மற்றவர்களுக்கும் இதனை சொல்லிக் கொடுங்கள். உங்கள் குழந்தைகளை அருகில் உள்ள போலியோ தடுப்பு முகாமுக்கு எடுத்து சென்று சொட்டு மருந்து கொடுத்து அவர்களின் ஆரோக்கியமான பிரகாசமான வாழ்க்கைக்கு வழி செய்யுங்கள்.

ஒரு நிமிடம் கவனியுங்கள்:

ஏற்கனவே இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களை ஒரு நோயாளியாக பார்க்காமல் சக மனிதராக பார்க்கும் பக்குவம் நம் அனைவருக்கும் வேண்டும். இதன் மூலம் போலியோ என்னும் கொடிய நோயை இந்த உலகத்தை விட்டு விரட்டுவோம் என்று உறுதி எடுப்போம். வாழ்க மனிதம்.

Friday, 18 October 2013

வேண்டாமே விபரீதம்...!


இன்றைய காலகட்டத்தில், குடும்பம் என்றால் ஒரு தந்தை, ஒரு தாய், அவர்களின் குழந்தை என மூன்று பேர் என்று சொல்லும் அளவு மிகவும் சுருங்கி விட்டது. ஒரு குழந்தையை பெற்று வளர்த்து அவனை/ அவளை ஆளாக்கி அவர்கள் நல்ல நிலையில் உயர்வதை பார்த்து பூரித்து போவதற்குள் பெற்றோர் எத்தனையோ தடைகளை தாண்டி வர வேண்டி இருக்கிறது.

அந்த தடைகள் எளிதான தடைகளாக இருப்பதில்லை. நான் இங்கு கல்விமுறை பற்றி எதுவும் குறிப்பிட போவதாகவும் இல்லை. என்னுடைய இன்றைய அலசல் அவர்கள் ஆரோக்கியம் சம்மந்தப் பட்டது. அன்றைய காலக்கட்டங்களில் பெற்றோர் என்றால் அவர்களுக்கு கிட்டத்தட்ட ஆறில் இருந்து பனிரெண்டு குழந்தைகள் வரையோ அதற்கும் மேற்பட்டோ இருக்கும். என் தாத்தா பாட்டிக்கு பனிரெண்டு குழந்தைகள். எனவே ஒரு பயம் இல்லாமல் குழந்தைகளை அவர்கள் போக்கில் விட்டு பிடித்து வளர்க்க முடிந்தது. கொள்ளை நோய்களினாலும் இயற்கை சீற்றங்களாலும் பெரும்பான்மையான மக்கள் தொகை குறைக்கப்பட்டு கொண்டிருந்தாலும் மக்கள் பேரில்லாத வீடுகள் மிக குறைவாகவே இருக்கும்.


ஆனால் இன்றோ கொள்ளை நோய்களின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டு விட்டாலும் எமன் வேறு பல ரூபங்களின் கொத்துக்கொத்தாக உயிர்களை பறித்துக்கொண்டு தான் இருக்கிறான், வீட்டுக்கு ஓன்று அல்லது இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு அவர்களை வெளியே அனுப்பி விட்டு இங்கு பெற்றோர் வயிற்றில் நெருப்பை கட்டி வைத்த நிலையில் தவித்துக் கொண்டிருக்கின்றனர். பார்த்து பார்த்து வளர்த்த குழந்தையை எமனுக்கு வாரி கொடுக்க யாருக்கு தான் மனம் வரும்?

பூகம்பம், எரிமலை, நிலநடுக்கம், கடல் கொந்தளிப்பு, சூறாவளி என்று இயற்கை சீற்றங்களை தடுக்க முடியாது போனாலும் நம்மால் தடுக்க முடிந்த விபத்து உண்டு. அவை தான் சாலை விபத்துகள்.

ஆம், இங்கு காலை நேரங்களில் வீட்டை விட்டு வெளி வந்து சாலையை கொஞ்ச நேரம் உற்று நோக்குங்கள். அனைவரும் எதோ ஒரு பரபரப்பில் தான் விரைந்து கொண்டிருப்பார். அது பரவாயில்லை, மற்றவர் செல்லும் வழி தடங்களை தடுத்துக்கொண்டும், இடையில் புகுந்துக் கொண்டும் விரைந்து கொண்டிருப்பார்கள். அதிலும் வயது வந்த குழந்தைகள் மூன்று நான்கு பேர் ஒரே மோட்டார் வாகனத்தில் சர் சர் என்று பேருந்துகள் இடையிலும் மற்ற வாகனங்கள் இடையிலும் வலமும் இடமுமாக வளைந்தும் நெளிந்தும் சென்றுக் கொண்டிருப்பார்கள். ஒரு நொடி அவர்கள் கணிப்பில் தவறு நேர்ந்து விட்டால் மொத்தமாய் பறிகுடுக்கவும் நேர்ந்து விடுகிறது.

நான் பணிபுரியும் கல்லூரியில் இணைந்து ஏழு வருடங்கள் ஆகிறது. இந்த ஏழு வருடங்களில் எத்தனை எத்தனையோ விதமான விபத்துக்களால் உயிரிழந்த மாணவர்கள் ஏராளம். அதிலும் மிக கோரமான விபத்து இரண்டு வருடங்களுக்கு முன் எங்கள் கல்லூரி வரும் வழியில் நடந்தது. அது காலை எட்டே முக்கால் மணி. கல்லூரிக்கு வரும் அனைவரும் வேக வேகமாக கல்லூரி நோக்கி விரையும் நேரம். கல்லூரி வகுப்பு செல்ல பிடிக்காமல் மாணவன் ஒருவன் அவன் நண்பனோடு கல்லூரி எதிர் சாலையில் விரைந்து கொண்டிருந்தான். அது மிகவும் உயரமான பகுதி. கிட்டத்தட்ட ஒரு மலை மேல் ஏறுவதை போல் தான் ஏற வேண்டும். அதில் மிகவும் கஷ்டப்பட்டு ஏறிக் கொண்டிருந்தது மணல் லாரி ஓன்று. மாணவர்களோ தங்களை ஆசிரியர்கள் யாரும் பார்த்து விட கூடாது என வேகமாக மேலேறிக் கொண்டிருந்தனர். திடீரென மணல் லாரி அருகில் வந்ததும் எதிரே வந்த வாகனத்தில் மோதாமல் இருக்க திடீரென வண்டியை திருப்ப, வண்டி நிலைதடுமாறி மணல் லாரியின் சக்கரங்கள் அடியில் சிக்கியது. அதே வேகத்தில் மணல் லாரி இருவரின் தலை மேல் ஏற, அருகில் சென்று விரைந்து கொண்டிருந்த அத்தனை வாகனங்களிலும் இவர்களின் சதை துணுக்குகள். எத்தகைய கோரம் அது. முகங்கள் சிதைக்கப்பட்ட நிலையில் என்று சொல்வதை விட வெறும் சதைகூழ் கண்டு அன்று பதறி துடித்தனர் பலர். அவர்களின் பெற்றோர் நிலைமையை யோசித்துப் பாருங்கள். இதற்காகவா தங்கள் தூக்கம் மறந்து, அன்பை பொழிந்து உழைப்பை கொட்டி இவர்களை வளர்த்தார்கள்?

கல்லூரிக்கு நான் எனது காரில் தான் பயணம் செய்வேன். எங்கள் கல்லூரி வளாகம் எனபது பல்வேறு வகை கல்லூரிகளை உள்ளடக்கியது. ஒரே இடத்தில், கலை மற்றும் இலக்கியம், ஒரு இஞ்சினியரிங், இரண்டு பாலிடெக்னிக், ஒரு ஆசிரியர் பயிற்சி பள்ளியென அத்தனையும் உள்ளடக்கியது. இதில் இரண்டு மாணவர்கள் ஒன்றாக பயணம் செய்தனர். இருசக்கர வாகனத்தில் வேகமாக செல்லும் அவர்கள் எப்பொழுது கார், பேருந்து, பைக் என்று எந்த வாகனம் முன் சென்றுக் கொண்டிருந்தாலும் அவர்களின் வலப்புறமாக சென்று திடீரென குறுக்கே பாய்ந்து இடப்புறம் செல்பவர்கள். அவர்களால் ரோட்டில் செல்லும் அத்தனை வாகன ஒட்டிகளுக்கும் சிரமம் தான். அவர்களை எச்சரிக்க நினைத்தாலும் கண்ணிமைக்கும் நேரத்துக்குள் பறந்து விடுவர். பின் அவர்கள் கல்லூரியில் முறையிடலாம் என்று நினைத்த போது ஏற்கனவே அவர்கள் கல்லூரி நிர்வாகத்தினரால் கண்டிக்கப்பட்டிருந்தனர். இந்த இளம் ரெத்தங்களுக்கு ஏன் தெரிவதில்லை, தங்கள் உயிரின் அருமையும், பெற்றவர்களின் பதபதைப்பும்?

மற்றுமொரு சம்பவம். சமீபத்தில் சில அரசியல்வாதிகள் தொடர்ந்து கொலை செய்யப்படுவதால் தமிழகமெங்கும் பந்த் நடைபெற்றது. அன்று கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும், விடுமுறை இல்லை என்றும் பல்வேறு குழப்ப நிலை. பேருந்துகள் வழக்கமாக ஓடும் என்று அறிவிக்கபட்டிருந்ததால் சில கல்லூரிகள் மாணவர்களை அரசு பேருந்தில் கல்லூரி வருமாறு வலியுறுத்தி இருந்தனர். எங்கள் கல்லூரியிலும் எங்களை வர சொல்லி விட்டதால் நான் காரில் கொஞ்சம் தாமதமாகவே கிளம்பினேன். வரும் வழியில் தான் பார்த்தேன், ஒரு இளைஞன், தலை நசுங்கி அங்கேயே மாண்டு கிடந்தான். வழக்கமாக கல்லூரி பஸ்ஸில் செல்லும் தங்கையை அன்று கட்டாயத்தின் பெயரால் பைக்கில் விட சென்றவன் ஒரு மினி பஸ் மீது மோதி கீழே விழுந்து மற்றொரு மினி பஸ் அவன் தலையில் ஏறி இருக்கிறது. நேரில் பார்த்தவர்கள் எல்லாம், அவன் வேகமாக வந்தான் என்றே சொல்லிக் கொண்டிருந்தனர். என்ன சொல்லி என்ன பலன்? போன உயிரை திரும்ப பெற முடியுமா?

தினமும் வேகமாக கண்மண் தெரியாமல் விரைந்து கொண்டிருக்கும் சின்னஞ்சிறுசுகளை பார்க்கும் போதெல்லாம் என் மனம் பதைக்கிறது. உயிரின் மதிப்பே தெரியாமல் எப்படி இவர்கள் இவ்வாறு தற்கொலை விபத்துகளை வரவேற்றுக் கொள்கின்றனர்?

விபத்துகள் தவிர்க்கமுடியாதது அல்லவே. நாம் எச்சரிக்கையாக இருந்தால் பாதியளவு விபத்துக்களை கண்டிப்பாக தடுத்து விடலாம். இந்த கட்டுரையை எழுதி கொண்டிருக்கும் சமயம், குடி போதையில் மூன்று இளைஞர்கள் என் வீட்டு வாசலை வேகமாக கடக்கிறார்கள். ஒருவன் மயங்கிய நிலையிலும், மற்றொருவன் பாதி மயக்க நிலையிலும், ஓட்டுபவன் தடுமாறி வண்டி ஓட்டியும் செல்கின்றனர்.

இளைஞர்கள் கொஞ்சமாவது சிந்திக்கலாம். பெற்றோரின் நிலைமைகளை கொஞ்சமாவது புரிந்து கொள்ள முயற்சிக்கலாமே...


Monday, 30 September 2013

கருப்பை வீக்கமும் (எண்டோமெட்ரோசிஸ்) மாதவிடாய் கோளாறுகளும்...

பெண்ணாய் பிறந்து விட்டாலே அவள் வாழ்வில் ஒருகட்டத்தில் அவளோடு இணைந்து பின் குறிப்பிட்ட காலம் வரை அவள் சந்திக்கும் ஒரு மாதாந்திர நிகழ்வு என்றால் அது மாதவிடாய் தான். எல்லா பெண்கள் வாழ்விலும் இதற்கான காலகட்டங்கள் உண்டு என்றாலும் இன்று பெரும்பான்மையானோர் இதனால் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.

சரி, முதலில் மாதவிடாய் என்றால் என்னவென்று பார்ப்போம்

ஒரு பெண் பூப்பெய்திய நாளிலிருந்து அவளின் மாதாந்திர சுழற்சியில் மூன்றிலிருந்து ஏழு நாட்கள் வரை உதிரப்போக்கு இருந்தால் அது முறையான அல்லது ஒழுங்கான மாதவிடாய் எனப்படுகிறது. ஒரு பெண் கருத்தரிக்க அவசியமாக அவள் இனபெருக்க சுழற்சியின் ஒரு அங்கமாகவே இந்த மாதவிடாய் நிகழ்கிறது.

பொதுவாக மாதவிடாய் காலமாக 24-29 நாட்களை சொன்னாலும் 23-35 நாட்களுக்குள் வரும் மாதவிடாயை சாதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.

உதிரப்போக்கை பொருத்தவரை அது பெண்களுக்கு பெண்கள் மாறுபடுகிறது. இதில் வலிகளும் உதிரப்போக்கும் தாங்கிக்கொள்ளத்தக்க வகையில் இருந்தால் அதில் பிரச்சனை இல்லை.

ஆனால் இன்றோ பெரும்பாலான பெண்கள் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்னையை சந்திக்கின்றனர். அவர்களுக்கு ஒரு மாதத்திற்குள்ளாகவே இரண்டிலிருந்து மூன்று முறை மாதவிடாய் வருகிறது. அல்லது வருடத்திற்கு நான்கு அல்லது ஐந்து மாதவிடாய் சுழற்சியை மட்டுமே சந்திக்கின்றனர்.

இதற்கான காரணங்கள் என்னவாய் இருக்கின்றன? 
 1. அதிகபடியான உடல் பருமன் / உடல் இளைப்பு 
 2. நீண்ட நேர உடற்பயிற்சி 
 3. சத்துணவு குறைவு (அல்லது) மாவு சத்து அதிகமுள்ள உணவு உட்கொள்ளுதல் 
 4. மது பழக்கம் 
 5. புகைப் பழக்கம் 
 6. போதை மருந்து பழக்கம் 
 7. அதிகப்படியான மன அழுத்தம் 
 8. சீதோசன நிலை மாற்றங்கள் 
 9. ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரோஜெஸ்ட்டிரான் ஹார்மோன்களின் அளவு மாறுபடுதல் 
 10. ஒன்றுக்கும் மேற்பட்ட சூலக கட்டிகள் (பாலி சிஸ்ரானிக் ஓவரி) 
 11. கர்ப்பப்பை கோளாறுகள் (கர்ப்பப்பை கட்டிகள் (fibroids/cysts/polyps), கருப்பை வீக்கம் (endometriosis) 
 12. பிற நோய்களுக்கான மருந்துண்ணல் 
 13. புற்றுநோயாளிகளுக்கான கீமோதெரபி 
 14. குழந்தை பெற்ற சில மாதங்கள், கருகலைப்பு, தவறான இடத்தில் கருத்தங்கல் 
 15. குழந்தைகளுக்கு பாலூட்டல் 
இவற்றில் ஏதாவது ஒரு காரணத்தால் இந்த ஒழுங்கற்ற மாதவிடாய் வருகிறது. இவற்றில் கர்ப்பம் சார்ந்த காரணங்களால் மாதவிடாய் தள்ளிப்போனாலோ இல்லை ஒழுங்கற்று இருந்தாலோ சில மாதங்களில் சரி ஆகி விடும், அதே போலத்தான் பிற நோய்களுக்காக மருந்து உட்கொள்வதால் வரும் ஒழுங்கீன்மை சில மாதங்களில் சரியாகி விடும்.

மன அழுத்தம் ஒரு பெண்ணின் உடலின் ஹார்மோன் சுரத்தலை ஓன்று அதிகரிக்கிறது இல்லை மட்டுப்படுத்துகிறது. மேலும் கார்டிசால் என்னும் ஹார்மோன் அதிகம் சுரக்கிறது. இந்த கார்டிசால் செக்ஸ் ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜனையும் ப்ரோஜெஸ்ட்டிரானையும் சரி விகிதத்தில் சுரக்க விடாமல் தடுக்கிறது. எனவே தான் ஒழுங்கற்ற மாதவிடாய் வருகிறது.

அடுத்து பெண்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது பாலி சிஸ்ரானிக் ஓவரி (Polycystic ovary syndrome ) எனப்படும் சூலக கட்டிகள். இவை ஒரு பெண்ணின் கருமுட்டை உருவாவதில் பிரச்னையை உண்டு பண்ணுகின்றன. இதனால் அவளின் சராசரி மாதவிடாய் சுழற்சி பாதிக்கப்படுகிறது. இதனால் அப்பெண் பொடுகு, அதிகபட்ச உடல் பருமன், முகம் மற்றும் உடலில் அதிக முடி வளர்த்தல், மற்றும் மலட்டுதன்மையால் பாதிக்கப்படுகிறாள். மேலும் இந்நிலை நீடிக்கும் போது கர்ப்பப்பை வீக்கம், கர்பப்பை புற்றுநோய், இதய நோய் போன்றவையும் ஏற்பட வாய்ப்புள்ளது.

சில பெண்களுக்கு இந்த பாலி சிஸ்ரானிக் ஓவரி எனப்படும் சூலக கட்டிகள் தோன்றாமலே கர்ப்பபை வீக்கம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனை நாம் இடமகல் கருப்பை அல்லது எண்டோமெட்ரோசிஸ் (endometriosis) என்கிறோம்.

பொதுவாக எண்டோமெட்ரோசிஸ் இருந்தால் அறிகுறிகள் எதைவும் தோன்றுவதில்லை. மாதவிடாய் நேரங்களில் வலிகளும் வருவதில்லை. அதிகபடியான உதிரப்போக்கே இதன் அறிகுறியாக உள்ளது. அதையும் தாண்டி சிலருக்கு இது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.

இந்த எண்டோமெட்ரோசிஸ் என்றால் என்ன?

எண்டோமெட்ரியம் (endometrium) எனபது கர்ப்பப்பையின் உள்ளே வளரும் ஜவ்வு போன்ற தசை செல்களாகும். இது மாதாந்திர சுழற்சியின் போது கருவுறும்
வாய்ப்புற்றால் கருவை தாங்கி பிடிக்கும் சக்திக்காக கர்ப்பப்பையின் உட்புறம் உருவாகுகின்றன. அவ்வாறு உருவாகும் போது கர்ப்பப்பையின் சுவர் திண்ணமாகிறது. கரு உருவாகாது போகும் பட்சத்தில் இவை சிதைந்து உதிரப்போக்கோடு வெளியேறுகின்றன. இந்த எண்டோமெட்ரியம் சில நேரங்களில் எதிர்பாராவிதமாக கருப்பையின் வெளிசுவரிலும் வளரத் துவங்குகின்றன. இத்தகைய நிலையை தான் நாம் எண்டோமெட்ரோசிஸ் என்கிறோம்.

இந்த எண்டோமெட்ரோசிஸ் ஏற்பட என்ன காரணமாக இருக்கும்? 

எண்டோமெட்ரியம் கருப்பையின் வெளிச்சுவர்களிலும் இடுப்பு மற்றும் அடிவயிற்றிலும் சில சமயங்களில் மூளையை சுற்றியும் வளர்வதற்கு இது தான் காரணம் என்று இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனாலும் சில காரணங்களை கூறலாம்
 1. மாதவிடாய் நேரங்களில் வெளிப்படும் உதிரம், கருக்குழாய் வழியாக பின்னோக்கி பாய்வதால் எண்டோமெட்ரியம் செல்கள் கர்ப்பப்பை விட்டு வெளித்தள்ளப்படுகின்றன. அப்படி வெளியேற்றப்பட்ட செல்கள் கர்ப்பப்பையின் வெளியே வளர்கின்றன. 
 2. இடுப்பை சுற்றியுள்ள மரபியல் செல்கள் (primitive cells) ஒரு கட்டத்தில் எண்டோமெட்ரியம் செல்களாக வளர்ச்சியடைகின்றன 
 3. அறுவை சிகிச்சை செய்யும் போது எண்டோமெட்ரியம் செல்கள் வெளியாகி அறுவை சிகிச்சை நடந்த இடத்தை சுற்றி வளரலாம் 
 4. எலும்பு மஜ்ஜையிலிருந்தும் வெளியேறி இவை தனியாக வளரலாம் 
இறுதியாக இந்த எண்டோமெட்ரியம் செல்கள் பெண்களின் நோய் எதிர்ப்பு சக்தியினையே மாற்றி அமைக்கவும் செய்யலாம். இதனால் தவறுதலாய் இடமாறி வெளித்தங்கும் எண்டோமெட்ரியம் செல்கள் அழிக்கப்படாமல் உறைந்து போகவும் வாய்ப்புள்ளது.

கருப்பை வீக்கம் இருக்கும் பெண்களுக்கு வரும் பிரச்சனைகள்: 
 1. அதிகப்படியான வயிற்றுப்போக்கு 
 2. முதுகு வலி 
 3. சிறுநீரில் ரெத்தம் 
 4. கருமுட்டை வெளிப்படும் போதும் மாதவிடாய் நாட்களிலும் தாங்க முடியாத வயிற்று வலி (இதில் பலருக்கு மாதாந்திர வலியின் வீரியம் மாதத்திற்கு மாதம் வேறுபடவும் செய்யும்) 
 5. ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி 
 6. அதிக உதிரப்போக்கு 
 7. அவ்வபோது அடி வயிற்றில் வலி (கை பட்டாலே சிலருக்கு அதிக வலி இருக்கும்) 
 8. குழந்தையின்மை 
 9. அபூர்வமாக நெஞ்சு வலி, இருமும் போது ரத்தம், தலைவலி, உடல் சோர்வு போன்றவையும் ஏற்படும் 
சில பெண்களுக்கு மாதவிடாய் நேரம் நடக்கவே இயலாமல் கால்கள் இழுத்து வைத்துக் கொள்ளுவதும், இன்ன இடத்தில் தான் வலிக்கிறது என்றே சொல்ல முடியாத படி உடல் முழுவதுமாக அதிகபட்ச வலியும் வந்து துடித்துடித்து போவார்கள். இன்னும் சிலருக்கோ மேற்புற கருப்பை புற்றுநோய் அல்லது கருக்குழாய் புற்றுநோய் வரவும் வாய்ப்புள்ளது.

இந்த எண்டோமெட்ரோசிஸ்சை கண்டறியும் வழி என்ன?

பெரும்பாலான நேரங்களின் அதிகப்படியான உதிரப்போக்கும், தாங்க முடியாத வயிற்று வலியும் இருந்தால் மருத்துவருக்கு எண்டோமெட்ரோசிஸ் கருப்பை இருக்குமோ என்ற சந்தேகத்தை கொடுக்கிறது. அல்ட்ராசவுண்ட் இமேஜிங் ஆய்வுகள் மூலம் இதனை கண்டறிந்தாலும் இடுப்பு மற்றும் வயிற்று பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திசு ஆய்வு செய்து எண்டோமெட்ரியம் செல்கள் இருக்கிறதா என்று பார்கின்றனர். ஆனாலும் லாப்ரோஸ்கோப்பி மூலம் நேரடி ஆய்வு செய்தே இதனை உறுதி செய்ய முடியும்.

எண்டோமெட்ரோசிஸ் கருப்பைக்கான சிகிச்சை முறைகள் 

பொதுவாக எண்டோமெட்ரோசிஸ் முற்றிலும் குணப்படுத்த முடியாதென்றாலும் மருந்துக்கள் மூலமாக சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். இந்த சிகிச்சை நோயாளியின் தேவை பொருத்து மாறுபடுகிறது. அதாவது வலி மட்டும் குறைய வேறு விதமாகவும் கருவுற்றல் நிகழ வேறு முறையிலும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பலதரப்பட்ட சிகிச்சை முறைகள் இருந்தாலும் முக்கியமானவற்றை மட்டும் இங்கு காண்போம்

1. வீக்கத்துக்கு எதிரான ஸ்டீராய்டு அல்லாத மருந்துகள் (Nonsteroidal anti-inflammatory drugs) 

பொதுவாக இவை எண்டோமெட்ரியம் செல்கள் மேலான எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. மாறாக ப்ராஸ்டாகிளான்ட்டின் (prostaglandin) உற்பத்தியை மட்டுபடுத்தி வலியின் வீரியத்தை குறைக்கின்றன. வலிகளை தூண்டி விடுவதில் இந்த ப்ராஸ்டாகிளான்ட்டினுக்கு பெரும்பங்கு உண்டு. பொதுவாக நாப்ரோசென் அல்லது இபுப்ரோபன் (naproxen or ibuprofen) வலிநிவாரணியாக அளிக்கப்படுகிறது.

2. கோனாடோட்ரோபின் வெளியீட்டு நொதி ஒப்புமைகள் (Gonadotropin-releasing hormone analogs (GnRH analogs))
இவை நிவாரணியாக மட்டும் செயல் படாமல் எண்டோமெட்ரியம் செல்களை கட்டுபடுத்தவும் செய்கின்றன. இவை ஈஸ்ட்ரோஜன் சுரப்பை நிறுத்தி மாதவிடாயை தடுக்கிறது. இதனை உட்கொள்வதால் சிலருக்கு பக்க விளைவுகளாக ஒழுங்கற்ற ரெத்தப்போக்கு, மனநிலை மாற்றங்கள், சோர்வு போன்றவை ஏற்படலாம். ஆனாலும் சிறிதளவு ஈஸ்ட்ரோஜன், ப்ரோஜெஸ்டிரோன் கலவைகளை மாத்திரையாக உட்கொண்டால் இந்த பக்க விளைவுகள் சரி செய்யப்படும்.

3. வாய்வழி கருத்தடை மாத்திரைகள் (ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன்)

இவை மாதவிடாய் சுழற்சியை கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்ட கருத்தடை மாத்திரைகளாகும். இவற்றை குறிப்பிட்ட கால அளவு (21 நாட்கள்) எடுத்து சிறிது இடைவெளி விட்டால், நான்காம் நாளிலிருந்து மாதவிடாய் வரும். பின் மாதவிடாய் வந்த ஐந்தாம் நாளிலிருந்து மீண்டும் தொடர்ச்சியாக 21 நாட்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். எண்டோமெட்ரோசிஸ்க்கான மிக சிறந்த சிகிச்சையாக இது இருக்கிறது. ஆனால் இது கருத்தரித்தலை தடுக்கும். சிலருக்கு இதனால் உடல் பருமன், உடல் சோர்வு, தலைசுற்றல், வாந்தி போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

4. அறுவை சிகிச்சை

எண்டோமெட்ரோசிஸ்க்கான மருந்து சிகிச்சைகள் பலனளிக்காமல் போனாலோ அல்லது அதன் பாதிப்பின் தாக்கம் அதிகமாக இருந்தாலோ கர்ப்பப்பையில் அறுவை சிட்சை செய்யலாம். இது இரண்டு விதமானது. ஒன்று, கருப்பையையும் அது சார்ந்த சூல் பைகளையும் எந்தவிதத்திலும் பாதித்து விடாமல் எண்டோமெட்ரியம் செல்களை நீக்குவது. இரண்டாவது, சூல் பைகளோடவோ அல்லாமலோ கருப்பையை முற்றிலுமாக அகற்றுவது. குழந்தை பேறு வேண்டும் பெண்களுக்கு முதலில் குறிப்பிட்ட அறுவை சிகிச்சை சாலச் சிறந்தது.


எது எப்படியாக இருந்தாலும் எண்டோமெட்ரியம் செல்கள் ஒரு பெண்ணின் தாய்மை பேறு நிறைவேற மிகப்பெரிய உதவியாக இருகின்றன. அவை இருக்கும் இடத்துக்குள் இருந்து விட்டால் எப்பொழுதும் கவலையில்லை. அப்படியே எண்டோமெட்ரோசிஸ் கருப்பை வந்துவிட்டாலும் சிகிச்சை முறைகளும் நிறையவே வந்துவிட்டன. இளம் வயதிலேயே இதனால் அவதியுறும் பெண்கள் முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் தாய்மை அடைவதிலும் வெற்றிபெற முடியும்.

Saturday, 24 August 2013

தங்கத்தை உருவாக்கும் பாக்டீரியா


பாக்டீரியாக்களால் தங்கம் உருவாக்க முடியுமா???? இது நமக்கு வேண்டுமென்றால் புதுமையான கேள்வியாக இருக்கலாம், ஆனால் மேக்குயரி பல்கலைகழகத்தின் (Macquarie University) விஞ்ஞானிகள் வெனின்சுலாவில் காணப்படும் தங்க படிமானங்கள் பெரும்பாலும் பாக்டீரியாக்களால் உருவாக்கப்பட்டவை என்கின்றனர்... அதுமட்டுமில்லை இதற்கான ஆதாரத்தை ஜான்.ஆர்.வாட்டர்சன் தலைமையிலான அமெரிக்க நில ஆய்வு குழு (US Geological Survey) அலாஸ்கா மாநிலத்தில் உறுதிப் படுத்தியுள்ளது. ஜான்.ஆர்.வாட்டர்சன் அலாஸ்க்காவில் கிடைத்த தங்க துகள்களை நுண்ணோக்கியில் (scanning electron microscope) பார்க்கும் போது அது தட்டையான உருளை வடிவத்தை கொண்டிருந்தது. இத்தகைய வடிவம் பிடோமைக்ரோப்பியம் பாக்டீரியாவை (Pedomicrobium bacteria ) ஒத்திருந்தது.


அறிவியல் கூற்றின் படி தங்கம் பாக்டீரியாவின் செல் சுவரில் உள்ள நுண்துளைகளை அடைத்து அதன் உணவு சுழற்சியையும் கழிவு வெளியேறுதலையும் தடுத்து அதனை மரணமடைய செய்கிறது. பெரும்பாலான பாக்டீரியாக்கள் இரண்டாக பிரிந்தே தன் இனத்தை விருத்தி செய்கின்றன.

ஆனால் பிடோமைக்ரோப்பியம் அரும்புதல் (budding ) முறையில் இனவிருத்தி செய்கிறது. அது தன் செல்லில் இருந்து ஒரு நெடிய காம்பை உருவாக்கி, தாய் பாக்டீரியாவிலிருந்து தொலைவில் தனது புதிய பாக்டீரியாவை உருவாக்குகிறது. இந்த புதிய உயிர், இறந்து போன தாய் பாக்டீரியாவிற்கு வெளியே புதிதாக உதிக்கிறது. இத்தகைய வளர்ச்சி மிக மெதுவாகவே நடை பெறுகிறது. நமது தலைமுடியின் திண்ணம் அளவு ( சராசரி 0.1 mm) தங்கம் வளர வேண்டுமென்றால் ஒரு வருடம் ஆகிறது. (இத்தகைய வளர்ச்சியை ஜெனிடிக் இஞ்சிநியரிங் மூலம் துரித படுத்த இயலும்).

கனடாவை சார்ந்த அறிவியலாளர்கள் சிலர் உலோக தங்கத்தை உருவாக்கும் பாக்டீரியாவை கண்டுப்பிடித்துள்ளனர். அவர்களின் கூற்றுப்படி அவை தங்க அணுக்களை துகள்களாய் உறைய வைத்து தங்க பாளமாக மாற்றுகின்றன. டெல்ப்டியாஅசிடோவோரன்ஸ் (Delftia acidovorans) விஷத்தன்மை வாய்ந்த கரையும் தங்கத்திடம் (soluble gold) இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள தன்னை சுற்றி உலோக தங்கத்தை உருவாக்கி கொள்கிறதாம். உலோகத் தங்கம் பொதுவாக ஒப்பீட்டளவில் மந்த தன்மை வாய்ந்தது. அவற்றை நாம் ஆபரணமாக அணிந்து கொள்ளலாம். அவற்றை உரசி பருகியும் கொள்ளலாம். அதே நேரம் தங்க அயனிகள் விஷத்தன்மை ஆனவை.  தங்க அயனிகளை உலோகமாக மாற்ற காரணமான டெல்ப்ட்டிபேக்டின் (delftibactin) ஜீன்களை
  கனட அறிவியலாளர்கள் இந்த பாக்டீரியத்தில் இருந்து கண்டறிந்துள்ளனர்.
இதே மாதிரியான பழமையான தங்க பாளங்களை தென் ஆப்பிரிக்காவிலும் (2.8 பில்லியன் வருட பழமை), சீனாவிலும் (220 மில்லியன் பழமை) கண்டெடுக்கப் பட்டுள்ளது. ஆம், இத்தகைய தங்க பாளங்களை உருக்கினால் பாக்டீரியாவில் இருந்து கார்பன், கார்பன்-டை-ஆக்சைட்டாக மாறி, தூய தங்கத்தை நமக்கு விட்டுச் செல்கிறது.

சிலர், பாக்டீரியா தங்கத்தை உருவாக்குவதில்லை, மாறாக நிலத்தடி நீரில் உள்ள தங்கத்தை ஈர்த்துக் கொள்கிறது என்கின்றனர். இத்தகைய கண்டுபிடிப்புகள் தங்கச் சுரங்கங்களின் கழிவிலிருந்து மேலும் தங்கத்தை பிரித்தெடுக்க உதவும்.

நமக்கெல்லாம் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் எப்படி இந்த பாக்டீரியாக்களால் தங்கத்தை 24 காரட் அளவு தூய்மை படுத்த முடிகிறது?  இத்தகைய பாக்டீரியாக்களை அறிவியல் கூடங்களில் வளர்க்க ஆரம்பித்து விட்டால், ஒரே இரவில் பெரும்பணக்காரர் ஆகி விடலாம். இப்பொழுது நமக்கு கிரேக்க பேராசைக்காரன் மைதாஸ் தான் நினைவுக்கு வருகிறான். ஒருவேளை அவன் இந்த பிடோமைக்ரோபியமால் பீடிக்கப் பட்டிருப்பானோ? எது எப்படியோ, தங்கம் என்றாலே கலகம் தானோ? அதுவும் அளவுக்கு மீறினால்???

Sunday, 4 August 2013

அக்றிணையில் ஒரு நேசம்...!


அக்றிணையில் ஒரு நேசமென
தலைப்பிட்டு காத்திருந்தேன்
கவியொன்று படைக்க...!

கண்முன் வந்து சென்றது
நேற்று தெருவோரம்
பார்த்த பூனைக்குட்டி...!
மியாவ்வென மிழற்றியபடியும்
அகதியாய் இருப்பிடம் தேடியபடியும்...!

ஆசையாய் அணைத்துக் கொண்டே
அதற்கோர் ஆதரவை
வேண்டிய ஆசை மகள்
மனம் கலங்கலாகாதென
தலையசைத்திருந்தேன் நானும்...!

கண்டெடுத்த பூனைக்குட்டி
காணாமல் போனதென
காலை முதல் அரற்ற துவங்கியிருந்தாள்
என் உதிரத்தில் உதித்தவள்...!

கண்கள் குளமாகி அழுதுதழுது
தேம்பிய அவள் முகம் பார்த்து
எனக்குள் எதுவோ பிசைய துவங்கியது...!

அட! திடீரென அவள் கையில்
தொலைந்து போன பூனைக் குட்டி...!

“ஏண்டா விட்டுட்டு போன?”
வண்டியில அடிபட்டா நசுங்கி
போய் செத்திருப்ப...
நாயும் கடிச்சிருந்தா
நார் நாரா கிளிஞ்சிருப்ப...

வாய் புலம்பல் தொடர்ந்த படி
ஒரு கையால் பிடித்துக் கொண்டு
மறுகையால் அது மிரள
தலை மேலே ஒரு குட்டு...!
மறுநிமிடம் வலிக்குமென பதறி
அடித்த இடம் தடவியபடி
தொடர்ந்து கொண்டிருந்தது அவள் புலம்பல்...!

ஏன் அழுகிறாள்? எதற்கு அடிக்கிறாள்?
புரியாமலே அவள் மடி சுருண்டது
பூனைக் குட்டி, அடைக்கலம் தேடி...!
கண்டுகொண்டேன் நானும்
அக்ரிணையில் ஒரு நேசத்தை...!

வசப்படும் உணர்வுகள்...!உணர்வுகள் உரசப்படா
வெற்றுக் காகிதத்தின் மற்றுமோர்
பக்கமாய் வாழ்க்கை சுழற்சி...!

ஆழியின் ஆக்கிரமிப்பு
மனசெல்லாம் சுழலச் செய்து
அஹிம்சை வெல்ல சபதமிடும்...!

வலிகள் சுமந்தே கதறிட்ட மனம்
கானல் கண்டு மயங்கிட துணியும்
காரணங்களே வேண்டாமல்...!

மனங்கள் மயங்கிடும் மாய
வலைக்குள் எதிர்ப்புகள் இல்லாமல்
வீழ்ந்து விடலாம், எழுர்ச்சி என்றோ?

நிலவு மறைக்கும் கார்மேகம் போலே
மறைந்தே கிடக்கின்றன
நமக்கான விடியல்...!

மழை பொழிந்ததும்
விடுபடும் நிலவாய்
வசப்படட்டும் வாழ்க்கை என்றும்...!

கனவு காதலனும்... கைப்பிடித்த கணவனும்...

வாய் வரை நீண்டுயர்ந்த கை
ஏனோ உணவூட்ட மறக்கிறது...
வெறித்து முறைக்கும் விழிகள்
எங்கும் பார்வை கொடுக்க மறுக்கிறது ...

இன்னதென்று அறிந்துவிட துடிக்கும்
இனமறியா உணர்வுக் கலவை
உயிர்நாடி தொட்டு
ஊடுருவி பாய்கிறது.....

வியர்வை ஊற்றில்
நீராடும் காலமுமாய்....
நீ வரும் நொடி வரை
எதிர்பார்ப்புகள் பொய்யாய்...
வந்து விட்ட நொடியோ
தூண்டில்புழு கவ்விய மீனாய்....

காதலாகி, காமமாகி
பின் அதுவே பயமுமாகி...
வெறித்து விட்டப் பார்வையும்
பதில் சொல்லா மவுனமும்
இன்று வரை தொடர்கதையே...

யாரோ யாரிவரோ...!


என் கல்லூரி வாழ்க்கை
ஆரம்பித்த போது துவங்கியது
எனக்கும் அவருக்குமான பந்தம்...!

வழக்கமாக நான் செல்லும் சாலை வழியே
கால்களையே துணையாக்கி வேக வேகமாக
நடை பயிலும் அறுபதை தாண்டிய முதியவர் அவர்...

எங்கு செல்கிறார் நானறியேன்,
எப்போது திரும்புவார்? அதுவும் அறியேன்...
ஆனால்... தினம் தினம்
அவர் பயணம் ஒரே இலக்கை நோக்கி...

சவரம் செய்யப்படா தாடி
நெஞ்சு குழி தாண்டி நீண்டிருக்க...
தலைவாரி வகிடெடுக்க வழியில்லாமல்
பாலைவனம் ஒன்று
தலை மேலே தோன்றியிருக்க...
இடது தோளிலே ஒரு பை...
வலது கையிலோ நீண்ட நெடிய ஒரு குச்சி...!

அந்த தாடிக்குள் ஒளிந்திருக்கும்
கதை என்னவென்று நான் அறியேன்...
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்...
அது சவரம் செய்ய காசில்லாமல்
வளர்ந்து கொண்டே செல்கிறது...!

எண்ணை வளம் காணா
வட்ட நிலாவாய் அவர் முன்வழுக்கை
அழகாகவே தோன்றியது எனக்கு...!

என்னதான் இருக்குமென்ற
ஆவல் கூட தோன்றவிடாமல்
அழுக்கு படிந்ததாய் அந்த பை
நிரந்தர கர்ப்பம் தாங்கி
அவர் தோள் வழியே சவாரி செய்யும்...!

அவரின் நடை பயணத்திற்கு பாதைவகுத்து
புதிதாய் ரோடு போட்டு
அவர் நடையின் வீரியத்தை கம்பீரமாக்கும்
அவர் கூடவே நடைபயிலும் அந்த குச்சி...!

அவர் உண்பாரா? யார் அவருக்கு உணவளிப்பர்?
தொக்கி நின்ற கேள்விக்கொரு
விடை கிடைத்தது ஓர் நாள்...!

வெளிர் நரை மூதாட்டி ஒருவர்
பழயென கழிதலை அலுமினிய தட்டில்
ஊற்றி பசியாற்றிக் கொண்டிருந்தார்,
அருகிலேயே தன் முறை வருமென
முறைத்துக் கொண்டே ஒரு நாலு கால் ஜீவன்...!

தினமும் நான் அவரை கடந்து செல்கையில்
திரும்பி பார்ப்பதும், பரஸ்பரம் புன்சிரிப்பமாய்
கடந்து சென்றது எங்கள் மூன்று வருட பந்தம்...!

காலத்தின் ஓட்டத்திலே உறவுகள் அறுந்ததாய்
விடுபட்டு போனது என் கல்லூரி மட்டுமல்ல
கூடவே நான் தினமும்
ரசித்த அந்த பெரியவரும் தான்...!

இரண்டு வருட இடைவெளியில் மீண்டும்
அதே பாதையில் பயணிக்க துவங்கி
ஆறு மாதமாய் நானும் அவரை காணாமல் தேடியலைய
இதோ என் வீட்டு வாசலை வேகமாய் கடக்கிறார் அவர்...!

பதிலுரைப்பார் எங்கே???

சந்ததி வேண்டி
பிள்ளையாரை சுற்றிய நான்...
சந்ததி சொல்லியதால்
தெருக்கோடியில் இன்று...
முற்றுபெற்று விட்டதாம் என் வாழ்க்கை...!
முடிந்து போனதென
எதை வைத்து கணித்தார்கள்???

ஏக்கங்கள் நிறைந்த மனதுக்குள்
காரணங்கள் அறிய...
என் வெள்ளிவிழா வாழ்க்கைக்கு
பதிலுரைப்பார் எங்கே???
கொதித்து கொண்டிருந்த குருதியில்
குளிர் காய்ந்தவர்கள்...
இவர்கள் இன்று வற்றிய
மனித நேயத்தின் காரணகர்த்தாக்கள்...

பெருகும் மக்கட்தொகை நடுவே
மலையாய் பெருகும் தேவைகள்...
பெருகி வரும் எண்ணிக்கைகளில்
சொந்தங்கள் மட்டும் அருகுவதேனோ???

சுருங்கி கொண்டிருக்கும் என் தோல்
காட்டுவது என் வயதையல்ல...
நான் பெற்றவனின் மனதை...!
தேவைகளுக்கிடையில் நடந்த போட்டியில்
நான் தேவையில்லாமல் போய்விட்டேன்...!!!

காலத்தின் காயம் (அவரவர் பார்வையில் நான்)...!கவிழ்ந்திருந்த என் தலையின்
நொடிக்கொரு அசைவு
உணர்த்தி செல்லும்
என் விசும்பல்களின் ஆக்ரோஷத்தை...!

உன்னை தேடித் தேடி
தோய்ந்து போன கண்கள்
கண்ணீர் வற்றி அரைமயக்கத்தில்
ஒரே புள்ளியில் நிலைத்து நிற்கின்றன...!

உன் கைகள் பற்றத் துடிக்கும்
என் கரங்கள்
காற்றிலும் அலைபாய தெம்பில்லாமல்
வெற்றுத்தரையில்
ஜீவனற்று வீழ்ந்து கிடக்கின்றன...!

காத்திருந்த காலங்கள்
வாழ்வின் வசந்தம் பறித்து...
வெப்பச் சிந்தனைகளை நெருஞ்சி முட்களாய்
காலடி கீழ் சிதற விட்டுச் செல்கின்றன...!

வந்துவிட மாட்டாயா? என்ற
எதிர்பார்ப்பு நொடிக்கொரு முறை
உயிர்பித்து பின் மரணம் தழுவுகிறது...!

தொண்டை குழிக்குள் ஒரு கேவல் மட்டும்
உன் பெயரை சொல்லியே விக்கித்து
உயிர் மிச்சமிருப்பதை
நிலைநாட்டிச் செல்கிறது...!

இங்கு இறுதிப் புள்ளியில் காத்திருக்கும் நான்
வரமாய் பெற்ற காதலனையோ...
இல்லை...
தவமாய் பெற்ற மகனையோ...
எதிர்பார்த்து உயிர்த்திருக்கிறேன்...!

“அவரவர் பார்வையில் நான்”

வாழ்வியல் நந்தவனம்...!


அழகாய் பூத்திருக்கும் நந்தவனம் அது...
பலவகை வாசங்களின் குவியலாய்
அங்கு கலந்தே நிறைந்திருக்கும்
ஒவ்வொருவரின் சுவாசங்களும்...

தகிப்பின் வீரியம் குறைத்து
பூமி மகளோடு சீண்டி விளையாடயெண்ணி
வெப்பக்கரங்களால் அவள் ஈரமேனி தீண்டி
இரவெல்லாம் அவளோடு களித்து கிடந்த
பனித்துளிகளை ஊடல் கொள்ளச் செய்கிறான் ஆதவன்...!

மைனாக்களின் கீச்சுக்குரலின் இனிமையோசை
காற்றுக்கும் கிளர்ச்சியூட்டி
மறைந்திருக்கும் குயிலை வெளிப்படச் செய்து
ஒரு ஸ்வரக் கச்சேரியை துவக்குகிறது...!

மாதத்தின் முடிவில் உயிர் பிரியுமென
நாட்களை எண்ணி சோர்ந்திட முயலாமல்
அங்கு பறந்து திரியும் வண்ணத்துப் பூச்சிகள்
தேன்களின் மேலான ஈர்ப்பில் லயித்துக் கிடக்கும்...!

நாளை துளிர்க்க போகும் சந்ததியை
சுமக்கப் போகும் பூமித்தாயை...
இன்றே முத்தமிட்டு வரவேற்க தயாராகின்றன
ஆயுள் முடிந்ததாய் அறிந்து விட்ட மலர்களும்...!

பழுத்த இலைகளும் உரமாய் போய்விட
அவைகளின் மேலே அஸ்திவாரமெழுப்புகின்றன
விதைத் துளைத்து… புது உலகம் காணும்
பச்சையக் குழந்தைகள்...!

இருண்டு விட்டதென உயிரினங்கள் எதுவும்
பிரபஞ்ச பந்தினை சபித்திடாமல்...
விடியும் என்ற நம்பிக்கையை நெஞ்சுள் கொண்டு
சற்றுநேரம் நிம்மதியாய் இமையுறக்கம் கொள்கின்றன...!

மரணிப்போம் என்று தெரிந்தும்
விட்டில் பூச்சி... விளக்கினை விடுவதாய் இல்லை,
எரிவதால்... சுமக்கும் திரியும் கருகுமேயென
ஒளிதரும் சுடரும் சோர்வதாய் இல்லை...!

பகலும் இருளில் மூழ்கித்தான் போகிறது
இரவும் விடியலை அணிந்துதான் கொள்கிறது...
நிதம் நிதம் தொடரும் கண்ணாமூச்சியில்
சிலரின் அஸ்தமனம், சிலரின் விடியல்...
ஆனாலும் அந்த நந்தவனம்
மறுநாளும் அழகாய் தான் பூத்திருக்கிறது...!

Saturday, 3 August 2013

நான் ஒரு சராசரி பெண்..

"இவள் என் ஆண் பிள்ளை" என்று தான் அறிமுகப்படுத்துவார் என் தந்தை தன் நண்பர்களிடத்து. யாராவது வீட்டுக்கு தேடி வந்தால் கதவின் பின் மறையும் அம்மாவின் முந்தானையின் பின்னே ஒளிவான் என் தம்பி. நானோ அப்பாவுக்கு சமமாய் அவர் அருகில் கம்பீரமாக அமர்ந்திருப்பேன்.

ஊரில் பண்ணையார் குடும்பம் என்று எங்கள் குடும்பத்தை எல்லோரும் சொன்னாலும் அந்த பண்ணையாருக்குரிய மிடுக்கு என் பெரியப்பாவிடம் தான் பார்த்திருக்கிறேன். "எலேய்..." என்று அவர் ஒரு குரல் கொடுத்தால் ஊரில் உள்ள அத்தனை வயசு பையன்களும் கை கட்டி நிற்பர். எல்லோருக்கும் அவர் என்றால் மரியாதை. அவர் பேச்சுக்கு எதிர் பேச்சு இல்லை. சிறு குழந்தைகள் ஏதாவது வம்பு பண்ணினால் இவர் பெயரை சொல்லி தான் அடக்கி வைப்பார்கள். என்னிடத்தில் இவர் பெயரை சொன்னாலோ, அவர் தானே, என்னோட மூத்தப்பா தானே, எனக்கென்ன பயம் என்று சாதாரணமாக சொல்வதோடு விடாமல் அவரை எங்கு பார்த்தாலும் மடியில் சென்று அமர்ந்து விடுவேன். அவரும் "என் பொண்ணுலே" என்றே அனைவரிடமும் சொல்வார்.எங்கு சென்றாலும் அன்பும் மரியாதையும். சில நேரங்களில் எனக்கு கிடைக்கும் அன்பும் மரியாதையும் அப்பாவை சார்ந்ததாகவே தோன்றும் எனக்கு. அதனாலேயே நான் இன்னார் மகள் என்று சொல்லப்படுவதை வெறுப்பேன். எனக்கென தனித்துவம் எப்பொழுதும் வேண்டுமென்ற எண்ணம், என்னை மற்றவர்களிடத்து இருந்து வேறுபடுத்தி காட்டிக்கொண்டே இருக்கும்.

பள்ளியாகட்டும், கல்லூரியாகட்டும், கட்டுரை, கவிதை, கதை என்று எல்லா போட்டிகளிலும் பரிசு வாங்கி விடுவேன். ஓரளவு நன்றாக ஓவியம் வரைவேன், கைவினை பொருட்கள் செய்வேன். எதையும் முறையாக படித்ததில்லை என்றாலும் அதில் ஒரு நேர்த்தியை கடைபிடிப்பேன்.

என்னை சுற்றி பொருட்கள் இறைந்து கிடக்கும். அப்பொழுது அம்மா, "அவள் ஒரு செருப்பை பார்த்தால் கூட கலைநயத்தோடு தான் பார்ப்பாள்" என்று நண்பர்களிடத்து பெருமையோடு சொல்வதை கேட்டு தலை நிமிர்ந்து நின்றிருக்கிறேன். இப்பொழுது அதே அம்மாவிடம் இருந்து திட்டு வாங்கி கொண்டிருக்கிறேன் என்பது தனிக் கதை.

எனக்கு பலரை தெரியாது போனாலும் பலருக்கும் நான் தெரிந்தவளாக இருந்தேன்.

தோழி ஒருத்தியின் உதவியால் நாகர்கோவில் ரேடியோ ஸ்டேசனில் இளைஞர் பாரதம் நிகழ்ச்சிகளை மூன்று மாதத்திற்கு ஒரு முறை சிறு நாடகம், சிறுகதை, உரையாடல், கட்டுரை வழி நானே எழுதி, தொகுத்து தோழிகளோடு சேர்ந்து பேசியும் இருக்கிறேன். எனக்கு வரும் நேயர் கடிதங்களை பார்த்து ஒரு பெருமிதம் என்றால், "நீங்கள் தான் ஜீவாவா, நான் உங்கள் தீவிர ரசிகை" என்று என்னை அடையாளம் கண்டு ஓடி வந்து கட்டிக் கொண்ட சக கல்லூரி மாணவியை கண்ட போது தலைகால் புரியவில்லை எனக்கு.

சிறு வயது முதல் என் சுற்றமும் நட்பும் என் குறையை சுட்டி காட்டுவதே இல்லை. எல்லோரும் என் நிறைகளையே மிகவும் சிலாகித்திருந்தனர். அதுதான் என்னை தன்னம்பிக்கையோடு நிமிர்ந்து நிற்க உதவியது. பல நேரங்களிலும் தன்னம்பிக்கைக்கும் தைரியத்திற்கும் என்னையே உதாரணமாக சுட்டிக் காட்டுவர்.

நண்பர்கள் புடைசூழ வலம் வந்தே பழக்கம் அதிகம் எனக்கு. கல்லூரியில் ஆரம்பிக்கும் எங்கள் அரட்டைகள், சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் யாராவது ஒருவர் மொட்டை மாடியில் தொடரும். பெரும்பான்மையான நாட்கள் எங்கள் வீட்டு தண்ணீர் தொட்டியின் மேல் ஏறி அமர்ந்துக் கொண்டு அரட்டையடித்துக் கொண்டிருப்போம். என் தந்தையும் வயது மறந்து அவர்களோடு பேசி கொண்டிருப்பார். அம்மாவோ அவர்களுக்கு பிடித்தவற்றை சமைத்துக் கொடுத்து இன்னும் என்ன தேவையென கவனித்துக் கொண்டிருப்பார்.

எப்பொழுதும் மனம் மனதிற்கு பிடித்தவைகளையே அசை போடும். வாய் விட்டு மனதிற்கு பிடித்த பாடலை பாடிக்கொண்டே இருப்பேன். என் குரல் இனிமையாக இருக்கிறது என்றே அனைவரும் சொல்லியிருக்கின்றனர். என்னை பாடச்சொல்லி சுற்றி இருந்து ரசித்த நண்பர்களும் உண்டு. திருமணம் ஆன புதிதில் அதே மாதிரி நான் பாட ஆரம்பித்தால் "கழுதை வருகிறது, வாயை திறக்காதே" என்று முதல் அடி கிடைத்தது.

மத மதவென எப்பொழுதும் பொங்கிய பாலை போலவே உற்சாகமாக இருக்கும் என் மனம் வடிய ஆரம்பித்தது அப்பொழுது தான் என்றே நினைக்க தோன்றுகிறது.

எவ்வளவோ ஆசைகளும் கனவுகளும் கொண்ட நான் திருமணம் என்ற ஒன்றை பற்றி சிந்தித்ததே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். எனக்கு வர வேண்டியவர் இப்படி இப்படி இருக்க வேண்டும் என்ற கற்பனைகள் எதுவுமே இருந்ததில்லை என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்.

திருமணம் எனக்கு அப்படியே ஒரு தலைகீழ் சமூகத்தை எனக்கு அடையாளப் படுத்தியது. பொறுப்பே இல்லாமல் சுற்றுகிறாள் என்ற அடைமொழி கணவர் வழி கிடைத்தது கூட சகித்துக் கொள்ளலாம், என்னை எப்பொழுதும் கொண்டாடிய தந்தை கூட என்னை கட்டுபடுத்த துவங்கி விட்டிருந்தார். என் வாழ்க்கை மேலான பயம் அனைவரையும் சூழ்ந்து கொண்டது. அந்த பயத்தினாலேயே நான் என்னை, என் தேடல்களை இழக்க ஆரம்பித்திருந்தேன்.

யதார்த்தம் என்னவென்று புரிய ஆரம்பித்த பிறகு மற்றவர்களுக்கு சிரமம் என்று என்னை நானே ஒடுக்கி கொள்ள ஆரம்பித்து விட்டேன்.

என்னை சுற்றி இருக்கும் உறவு கூட்டமாகட்டும், நட்பு வட்டமாகட்டும் எல்லோருமே இப்பொழுது எங்கோ வெகு தொலைவு போய் விட்டனர்.

வருடங்கள் பத்து கடந்து விட்ட சூழ்நிலையில் எதிர்பார்ப்புகள், ஏமாற்றம், துரோகங்கள், பொருளாதார தடுமாற்றங்கள் என பலவகை அனுபவங்களை மட்டுமே துணையாய் கொண்டு இன்று நானும் ஒரு சராசரி பெண்ணாகி வாழ்க்கை போக்கில் நானும் போய் கொண்டிருக்கிறேன்.

Sunday, 21 July 2013

மவுன சாட்சிகள்...!அது ஒரு இருட்டு கிராமம்....
வெளிச்சமிருக்கிறது, ஆனால் பச்சையம் இல்லை...!

நாசி நுழையும் காற்றோ... புழுதியோடு
கருகல் வாசத்தையும் சேர்ந்தே சுமக்கிறது...!
குழந்தைகள் இருக்கிறார்கள்,
பெண்கள் இருக்கிறார்கள்,
வாலிபர்களும் வயோதிகர்களும் கூடவே இருக்கிறார்கள்...!
ஆனால்... உடலிலோ உயிர் மட்டுமில்லை...!
அவர்களோ நடப்பவை யாவும் அறியா மவுனமாய்
கருகல் ஆடை பூண்டு கட்டையாய் கிடக்கிறார்கள்...!
ச்சே, என்ன வாடை இது?
மூக்கை பொத்தியவாறு ஒவ்வொரு அடியாய்
கவனமாய், விரைந்து கடக்கிறார்கள் பத்திரிகை வியாபாரிகள்...!

என் மதுகோப்பைகளில்...
உன் ரெத்தம் நிரம்பி வழியட்டும்...
மவுனமாய் நீயும்
எதிர்ப்பில்லாமல் மரணித்துப் போ...! வென
நெற்றிப்பொட்டை குறிவைக்கிறான் ஒருவன்...

காட்சி மாற்றம்...! அழகியல் மாறுகிறது...
மெல்லிசையும் இடையின உரசல்களோடும்...
அது ஒரு வெற்றி அறிவிப்பு விழா...!
எதிர்த்தடிக்க ஆட்களே இல்லாமல்...
இனம் அழித்து இனம் பெருக்கும்
இராஜதந்திரிகளின் அரசாங்க கோட்டையது...!
ஒவ்வொருவரின் முகத்தில் தான் என்ன ஒரு தேஜஸ்...!
அவர்களின் வெற்றிகளில் பங்கெடுத்து
கொக்கரித்து குதூகலிகின்றனர் மனித வேட்டையாடும்
அரசாங்க சுகவாசிகள்...!

இதோ இங்கே....
தொலைக்காட்சி பெட்டிகளும் இணைய தளங்களும்
அலறிக்கொண்டிருக்கின்றன...!
சும்மாவா? நாட்டை ஆளும் அதிபரின் ஜலதோஷம் அல்லவா?
பலியாகிக் கொண்டிருக்கும் கருவறைக் குழந்தைகளின்
சாம்பல்கள் மேல் ஆங்காங்கே எழுப்படுகின்றன
அவர் ஆயுள் நீட்டிப்பிற்கான பிரார்த்தனை கூட்டங்கள்...!
கோடிக்கணக்கில் அவர் உயிருக்காய்
உயிர்விட்டுக் கொண்டிருக்கும் மெழுகுவர்த்திகளோடு
கண்ணீர் உருகி தொழுகின்றனர் மக்களின் பெரும்தொகையினர்...!

திடீரென பொழியும் குண்டு மழை...
அய்யோ, அங்கே எரிந்து கொண்டிருப்பது என் சகோதரியா?
என் தாயெங்கே? தந்தையங்கே?
தனியாய் தவித்துக் கொண்டிருந்தது தனயனின் இதயக்கூடு...!
தெருவோரம் கூறுகளாக சிதறிக் கிடக்கின்றனர்...
முந்தைய நொடி வரை கூட்டமாய் உறவாடிய உறவுகள்...!
யாராவது கைகொடுங்களேன்...!
யாராவது காப்பாற்றுங்களேன்...!
கதறும் வாய்களுக்குள் அமிலம் வார்த்துச் செல்லும்
குரூர மனித நேயம்(?)...
வால் மிதித்தால் கோபம் கொண்டு சீறிபொங்கும்
பூனையின் அதிகாரம் கூட உன்னிடத்தில் இருக்கலாகாது...
என்று கொக்கரிக்கிறான் நரவேட்டை நடத்தும் வேட்டைக்காரன்...!

ஹப்பா... என்ன ஒரு பயங்கரமான கனவு அது...
கலைந்திருக்கும் கூந்தல் அள்ளி முடித்து,
இன்றைய சமையலுக்கான கோழியை அறுக்கிறேன்...
அங்கே என் கனவு கதாபாத்திரங்கள்
அடுக்கடுக்காய் சதையிழந்து கொண்டிருக்கிறார்கள்...!

அரூபமாய் ஒரு தேன்சிட்டு...!இப்பொழுதெல்லாம் உன்னை
தொலைக்காட்சியில்
மட்டுமே காண்கிறேன்...!

கவலைகள் என்றொன்று
அறியா பருவத்தில்
படுக்கையறை ஜன்னல் வழியே
தினமும் உன் தரிசனம்...!

வேப்பங்குச்சி வாயிலிருக்க
குறுகுறுவென உன்னையே
உற்றுப்பார்த்தபடி எத்தனையோ நாள்
மலைத்துப்போயிருக்கிறேன்...

சிறுதுரும்புகள் கொண்டு
நீ கூடு நெய்யும் நேர்த்தி கண்டு
நானும் துரும்பு தேடி அலைந்த காலங்கள்...
வாழ்வின் அறியா வசந்தங்கள்...

இணையாக பறக்கும் அழகும்
இணைந்தே இசைக்கும் கீதமும்
நான் அறிந்திரா காதலுக்கு
முகவரி எழுதி செல்லும்...

ஓர்நாள் கீச் கீச் ஒலியொன்று
புதிதாய் கேட்க...
ஒரு திருடி போல் பதுங்கி
உன்னிடம் நோக்குகிறேன்...
தாயாய் உன் சேய்க்கு
உணவளித்த அழகு, என்னையும்
தாயாய் உணர்மாற்றம் செய்தது...

ஒவ்வொரு நாளும் கைநீட்டி
உன்னை தொட்டுப் பார்க்க ஆசை,
ஆனாலும் உன் சுதந்திரம் பறிபோகுமென
அன்றே கட்டிப்போட்டேன்
என் கைகளை...

கூட்டமாய் பறக்கும் நேர்த்தியும்,
பறந்து பிடித்து விளையாடும் ரசனையும்
சொந்தங்களை காதலித்துப் பாரென
பாடம் நடத்திச் சென்றது...

இன்று நீயும் இல்லை,
மனித உறவுகளின்
இணக்கங்களும் இங்கில்லை...
உன்னோடு சேர்த்து
அவைகளையும் எங்கே கொண்டு சென்றாய்?

பல்கிப்பெருகிய வளர்சிதை மாற்றம்...
ஏனோ காணா அரூபமாய்
உன்னை மாற்றி விட்டு
மனதுக்குள் வெறுமை புகுத்தி
வேடிக்கைப்பார்க்கிறது...!

இன்றும் என் ஜன்னல்கள் திறந்திருக்கின்றன...
உன்னை தாலாட்டிய மாமரம் கூட
இப்பொழுதும் அழகாய் தலையசைத்தபடி ...
கிளைகள் மட்டும் நீயில்லாத வெறுமையாய்...

உன்னை தேடிக்கொண்டிருக்கிறேன் நான்...
வாழ்வியல் மாற்றங்களால்
எதை எதையோ தொலைத்தபடி...

மாறிட வேண்டும்
ஓர் நாள் நானும் இப்படியாக..

ஊவா நாளாய் மனம்...!மூலக்கூற்று முகில்களால் பிரசவிக்கப்பட்ட
விண்மீன் கூட்டங்கள்...

பரந்து விரிந்த பால்வெளியில்
மின்மப்பந்துகளாய் கண்சிமிட்டுகின்றன...

ஒளிகள் அடக்கி... ராட்சச கரம் விரிக்கும்
கருந்துளை நோக்கி பயணப்படுகிறது...
உள்ளிருப்பு விசைக்குள் உணர்வுகள் அடக்கி
வெடித்துச் சிதற காத்திருக்கும்
அழுத்தமான மனம் ஒன்று...

ஈரம் தேடி அலையும் நெஞ்சுக்குள்
வெற்றிடங்கள் ஈர்த்துக்கொள்ள...
கருமை சூழ்ந்து, விரக்தி ஒன்று
மொத்தமாய் குத்தகை கொள்ளத் துடிக்கிறது...

எரிகல் ஒன்று வலுவிழந்து வீழ்கிறது,
புவியிருப்பு விசைநோக்கி...
காற்றில் கரையும் அதன் கார்பன் துகள்கள்
கண்காணாமல் மறைந்து போகின்றன...

திசைகள் மறைக்கும் அமானுஷ்ய இருட்டுக்குள்
பளிச்சென வெளிச்சம் உதிர்க்கிறது,
நேர்வடக்கில் உறைந்திருக்கும்
ஒற்றை துருவ நட்சத்திரம்...

சிறுக சிறுக தேய்ந்து ஊவா நாள் காண்தல்
நிலவுக்கு மட்டுமே சொந்தமுமில்லை...
பின் பிறைவிட்டு பவுர்ணமி காண்தல்
சொற்பக்கால மனித வாழ்விலும் புதியதல்ல...

கொதிக்கும் ஆழ்மனம் அடங்கத் துவங்க
அடுத்த நிலைக்கு பயணிக்கிறது உள்ளுணர்வு...
பீடிக்க துவங்கிய கிரகணம் ஒன்றோ
விடியலை கொஞ்சம் கொஞ்சமாய்
விடுவித்துக் கொண்டிருக்கிறது...

பெண்ணீயம்மனம் விரும்பும் தனிமை கூட கிடைப்பதில்லை
ஆழ்மன அடிவாரத்தில் கூடாரமிடும்
முகவரி இல்லா முகாரி ராகமொன்று
வெளிவர துடித்து அடங்கி வீழ்கிறது....

தனக்கென ஏதுமில்லா
எல்லாம் நிறைந்த வாழ்க்கை…
அறியாமலே வாழ்ந்து வீழ்வது
பிறந்த பிறப்பின் மேல் எழுதப்பட்ட சதி...

நாட்களின் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை
விடியலில் சுறுசுறுப்புக்கும் குறைவில்லை...
அழகாய் தான் தோன்றுகிறது வாழ்க்கை...

காலில் கட்டிய சக்கரமாய்,
தலைமை தாங்கும்
ராணுவ வீரனின் மனநிலை...
இங்கு நானின்றி ஓரணுவும் அசையாதென
மார்த்தட்டிக் கொள்கிறது...

உனக்கு என்ன தெரியும் என்ற கேள்வியை
ஆம், எனக்கு ஒன்றும் தெரியாது
என விடை காணும் மனம்....

சுதந்திரம் என்பது எதுவரை?
தாண்டி விட துடிக்கும் வேகத்தில்
அடிபட்டு வீழும் மனம்...
தடையாய் பிறர் கண்படா கண்ணாடி சுவர்....

அவளுக்கென்ன மகாராணி,
சொகுசு வாழ்க்கை என்பர்களுக்கு
எப்படி புரிய வைப்பது?
உள்ளுக்குள் தொலைத்துக்
கொண்டிருக்கும் தேடலை?

ஒவ்வொரு நாளின் விடியலும்
தொலைத்து விட்ட
குழந்தை மனமொன்றை தேடிக் கொண்டே,
பெண்ணீயம் மீண்டும் தன்
கூட்டுக்குள் சென்று கதவடைத்துக் கொள்கிறது...

Saturday, 15 June 2013

பரிணாம வளர்ச்சி....


தலைப்பை பார்த்தவுடன் நான் ஏதோ அறிவியல் கட்டுரை எழுத போவதாக நினைத்து விட வேண்டாம். இங்கு பரிணாம வளர்ச்சி என்று நான் எதை குறிப்பிட வருகிறேன் என்று முழுவதும் படித்தபின் நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள். 

உலகில் வாழும் ஒவ்வொரு உயிர்களையும் தனித் தனி பேரினத்தின் கீழ் பிரித்த மனிதன், தன்னை போன்ற தோற்றம் உடையவர்களை ஒரே பேரினமாக வகைபடுத்திக் கொண்டான். இனி பரிணாம வளர்ச்சியின் கால சக்கரத்தில், தன்னை வேறொரு பேரினமாக பிரிக்கும் நாள் கூட சாத்தியமே. மனிதன் என்ற இனத்திற்கு மேலான ஒரு பேரினமோ, இல்லை இத்தகையவர்கள் தான் மனிதர்கள், மற்றவைகள் வேறு இனத்தவர் என்றோ பிரிக்கப்படும் சூழ்நிலையோ வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை. எப்படி என்கிறீர்களா? 

ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் பலவிதமான ஆசைகள் உறங்கி கிடக்கின்றன. அவை ஆசைகள் என்ற வட்டத்துக்குள் மட்டும் அடங்கி விட்டிருந்தால் இதை பற்றி பேச வேண்டிய அவசியமே இருந்திருக்காது. மாறாக ஆசைகள் எல்லாம் பேராசைகளாக உருமாற்றம் கொண்டால்?

மனிதன் எப்பொழுது ஆசை கொள்ள ஆரம்பித்தான்? யோசித்து பார்த்து நாம் குழப்பிக்கொள்ள வேண்டாம். ஆனாலும் சுயநலம் என்ற இருள் கட்டுக்குள் அவன் வரத்துவங்கிய நாள் பேராசைகளுக்கான பிறந்தநாளாக இருந்திருக்க கூடும்.

நடந்து செல்பவருக்கு சைக்கிளில் செல்பவர் மேல் பொறாமை, சைக்கிளில் செல்பவருக்கோ மோட்டார் வாகனத்தில் செல்பவர் மேல் பொறாமை. மோட்டார் வாகனகாரருக்கோ காரில் செல்பவரைக் கண்டு பொறாமை. இப்படி தன் தேவைகள் என்னவென்றே உணராமல் பிறர் கண்டு மனம் வெதும்பும் மக்கள் தொகை இங்கு பெருகி அல்லவா போய் விட்டது.

நம்மில் எத்தனை பேர் பிறரின் துன்பம் கண்டு உண்மையாக அழுதிருக்கிறோம்? ஊடகங்கள் சொல்லும் செய்திகளை பார்த்து மனதிற்கு தோன்றிய காரசார விவாதம், பின் காபியோ டீயோ குடித்து விட்டு அடுத்த பிரச்சனைக்கு தாவி விடுதல். இதைத்தானே பெரும்பான்மையோர் செய்து கொண்டிருக்கிறோம்.

தனக்கு வந்தால் தான் தெரியும் காது வலியும் திருகு வலியும் என்று சொல்வார்கள். ஆனால் இன்று சொந்த வீட்டில் நடக்கும் பிரச்சனை கூட கண்ணுக்கு தெரிவதில்லை. நான், நான், நான்... இது மட்டுமே மனதில் வேரூன்றி விடுகிறது நமக்குள்.


நாடுகளை எடுத்துக்கொண்டால் அவர்களுக்கு எல்லைகள் மட்டுமே பிரச்சனையாக இருக்கிறது. அங்கே வாடிக் கொண்டும் தவித்துக் கொண்டும் உயிர்களுக்காக மன்றாடிக் கொண்டும் இருப்பவர்கள் மனித இனமாகவே தெரிவதில்லை. அன்றாடம் கசாப்பு கடைகளில் பலியிடப்படும் விலங்கினங்களோடு தான் அவர்கள் பிணைக்கப்படுகின்றனர். பஞ்சமும் பட்டினியும் தலைவிரித்தாடும் நாடுகள் வளர்ந்த நாடுகளின் கண்களுக்குள் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகமாக தான் தெரிகிறது. அங்கே மக்கள் சுருண்டு விழுந்து சாவதை நாய்களுக்கு ரொட்டி துண்டு போட்டு கொண்டே உச் கொட்டி தொலைகாட்சியில் பார்த்துக் கொண்டிருக்கிறோம் நாம்.

தங்கள் நாடு, தங்கள் உரிமை என போராடிக் கொண்டிருக்கும் அனேக சமூகத்தை காட்டுமிராண்டிகள் என்றோ தீவிரவாதிகள் என்றோ அடைமொழியிடும் நாம் செய்துக் கொண்டிருப்பது என்ன? இதை தான் சர்வைவல் ஆப் தெ பிட்டஸ்ட் என்கிறோம்.

நாட்டின் தீவிரவாதத்திற்கு நாம் என்ன செய்வது என்ற கேள்வி மனதுக்குள் எழலாம். அருமையான கேள்வி, நிதம் நிதம் வாழ்க்கையோடு ஆடும் போராட்டமே பெரும் போராக இருக்கும் போது இதை பற்றிய சிந்தனை நமக்கெப்படி?

நாட்டில் நடக்கும் தீவிரவாதம் அனைத்திற்கும் காரணம் பிறர் தான் என்று சுலபமாக மற்றவர்களை நோக்கி கைக்காட்டி விட்டு வேகமாக அடுத்த பிரச்சனை நோக்கி நகர்ந்துக் கொண்டே இருக்கிறோம் நமக்குள்ளே ஒரு தீவிரவாதி அதை விட கொடூர முகம் காட்டிக் கொண்டிருப்பதை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லாமல்.

கொஞ்சம் யோசித்துப் பார்ப்போமா? நமக்குள் இருக்கும் தீவிரவாதியை.....

பரபரப்பாய் நகர்ந்து கொண்டிருக்கும் அன்றாட வாழ்க்கையில் நாம் எத்தனையோ மனிதர்களை கடந்து கொண்டிருக்கிறோம். அவர்களை நம்மோடு ஒப்பிட்டு பார்த்துக்கொண்டும் அவர்கள் மேல் காழ்புணர்ச்சியோ எரிச்சலோ அடைந்து கொண்டு தான் இருக்கிறோம். யாருமே நம்முடைய தேவை இவ்வளவே என்று திருப்தி அடைவதில்லை.

நமக்குள் வலியவர்கள் எளியவர்கள் என்று பிரித்துக் கொண்டு, நமக்கு நாமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். நம் சுயநல சிந்தனைகளுக்காகவும், சுயநல தேவைகளுக்காகவும் படைக்கப்பட்ட அடிமைகளாக தான் நமக்கு கீழ் வேலை செய்பவர்கள் நம் கண்களுக்குள் தெரிகிறார்கள். அதே நேரம் நம்மிடம் இல்லாத ஒன்று மற்றவரிடம் இருந்து விட்டால் அவர் மேல் பொறாமை பூத்து விடுகிறது.

இப்போதைய மேல்வர்க்கதினரின் (இந்த பதம் கூட அவரவர் பார்வையில் மாறுபடுகிறது) வீட்டு சூல்நிலைகளையே எடுத்துக்கொள்வோம், நான் படித்திருக்கிறேன், எனக்கு முன்னேறவும் சம்பாதிக்கவுமே நேரம் இருக்கிறது, வீட்டு வேலை செய்வதற்கு நம்மை விட தகுதியில் குறைந்தவர் வேண்டும் என்ற எண்ணம் தானே மேலோங்குகிறது. இதுவும் ஒரு வகை பரிணாம வளர்ச்சி தானோ?

நம் அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்களில் நம் தேவைகளை பூர்த்தி செய்யும் எத்தனை பேருக்கு நாம் நன்றி சொல்லிக் கொள்கிறோம்? என்னுடைய தேவையை நிறைவேற்றும் அடிமை அவன் என்ற எண்ணமே நமக்குள் மேலோங்கி இருக்கிறது. தூங்கி எழுந்தால் பால் பாக்கெட் போடுற சிறுவன் (இது நம் தேசிய அடியாளம் ?) துவங்கி, இரவு நாம் தூங்க விழித்திருக்கும் காவல்காரர் வரை நமக்கு நிகராக அவர்களை நிறுத்தி இருப்போமா?

நம்முடைய கழிவறையையே அடுத்தவர் கொண்டு சுத்தப்படுத்தும் பழக்கம் தானே அதிகமாக இருக்கிறது. இதற்கென தனி சமூகத்தையே ஒதுக்கி வைத்து அவர்களுக்கு மனித அந்தஸ்தையே மனதளவில் பறித்து விட்ட கொடுரம் இங்கு நடந்தேறவில்லையா?

ஒருவரின் தேவைகளுக்காக இயந்திரங்கள் என்ற நிலை மாறி இப்பொழுது தங்கள் அந்தஸ்தை நிலை நாட்டவே இயந்திரங்கள் என்ற நிலைக்கு நாம் தள்ளபட்டும் விட்டோம். எத்தனை எத்தனை கண்டுபிடிப்புகள் ஆயுதங்கள் என்ற பெயர் தாங்கி உருவாக்கியவரின் இனத்தையே அழித்துக் கொண்டிருக்கின்றன. இயந்திரங்களின் பிடியில் நம்மை நாமே அடிமைப் படுத்திக் கொண்டிருப்பது எப்பொழுது உணரப்பட போகிறது என்றும் தெரியவில்லை.

வறுமை என்ற கட்டுக்குள் ஒரு இனம் கீழிறங்கி கொண்டிருக்கிறது. சீண்டப்படும் வேறொரு இனமோ தீவிரவாதம் என்ற இன்னொரு பாதை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. நாகரீகம் என்ற பெயரில் ஒரு இனம் இவர்களை எல்லாம் மிதித்து தள்ளி விட்டு மின்னல் வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. 

நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம், ஆம், ஒருவரை மிதித்து தள்ளி விட்டு அவர் மேல் ஏறி நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். இனி பின்னோக்கிய பயணத்திற்கு சாத்தியமே இல்லை. இந்த கட்டுரையை நான் எழுதும் வரையிலும் நீங்கள் வாசித்து முடிக்கும் வரைக்கும் தான் நாம் மனிதர்கள். பின் நாமும் பரிணாம வளர்ச்சியின் வேகத்துக்கு ஈடுக்கொடுக்க துவங்கி விடுகிறோம்.


Thursday, 23 May 2013

பள்ளி நண்பர்களுடன் ஒரு சந்திப்பு....27/12/12 - என் வாழ்வின் மறக்கமுடியாத நாள் ஒன்றாக அமைந்து விட்டது. ஆம், என் நீண்ட நாள் பள்ளி தோழர்களை பதினெட்டு வருடங்கள் கழித்து சந்தித்த நாள்...முன்னதாக, நண்பர்கள் அனைவரும் கன்னியாகுமரியில் வைத்து ஒரு கெட் டுகெதர் வைக்கலாம் என்று என் பத்தாம் வகுப்பு நண்பன் சிவதாணு அலைபேசி வழியாக தெரிவித்தான். பள்ளி படிப்பை முடித்த பிறகு இவன் ஒருவனுடன் மட்டுமே அவ்வபோது சந்திப்பது உண்டு. தன் தந்தை வழி அவருடைய தொழிலை எடுத்து நடத்தும் அவன், அனைவரிடமும் அன்பாக பழகும் ஒரு உன்னத நண்பன். அவன் மகளின் பூப்புனித நீராட்டு அன்று தான் பழைய நண்பர்கள் சிலரை நான் சந்திக்க நேர்ந்தது. மீண்டும் எப்பொழுது சந்திக்க போகிறோமோ என்ற ஏக்கம் மனதில் இருந்துக்கொண்டே இருக்க, அவனிடமிருந்து இந்தமாதிரியான ஒரு சந்திப்பிற்கான அழைப்பு வந்தால் மகிழ்ச்சியை சொல்லவும் வேண்டுமா?
உடனடியாக சம்மதம் சொல்லி விட்டேன் நான், கன்னியாகுமரியில் தானே, எப்படியும் கலந்துகொள்ளலாம் என்ற ஆவலில்...

இரண்டு நாட்கள் சென்றபின் மறுபடியும் அவனிடமிருந்து அழைப்பு. நண்பர்கள் அனைவரிடமும் பேசியதாகவும், மேட்டுப்பாளையம் ப்ளாக் தண்டர் மற்றும் ஊட்டி என இரண்டு நாள் சுற்றுலாவாக செல்லலாம் என அனைவரும் விரும்புவதாகவும் கூறினான். 

மனதில் திக் திக் ஆரம்பித்து விட்டது கணவர் என்ன சொல்லுவாரோ என்று. கூடவே அவ்வளவு தூரம் செல்ல வேண்டுமே என்ற அயர்ச்சி வேறு. 

பல்வேறு குழப்பங்கள், உடல்நிலை கோளாறு என படுத்தி எடுக்க, ஒருவழியாக என்னால் வர முடியாது, உன் தங்கையை அழைத்துக்கொண்டு நீ கட்டாயம் சென்று வா என்ற கணவரின் ஒப்புதலோடு ஆரம்பமானது என் பயணம் - பதினெட்டு ஆண்டுகள் பின்னோக்கி நினைவுகள் செல்ல, எங்களுக்கென ஏற்பாடு செய்யப்பட்ட வேனில் குழந்தைகள் இருவர், மற்றும் என் தங்கையோடு பயணம் ஆரம்பித்தேன் நான்...

முன்னதாக, நண்பர்கள் அனைவரும் சிவதாணு வீட்டில் ஒன்று சேர்ந்து வேன் ஏறுவதாக ஏற்பாடு. நான் என் வீட்டிலிருந்தே வேனில் அங்கு சென்று விட்டேன். ஏற்கனவே கொஞ்சம் தாமதாமாகி விட, நண்பர்களின் வருகைக்காக வேனிலேயே காத்திருக்க ஆரம்பித்தேன். கலகல சிரிப்போடு தன் கணவரோடும் மகனோடும் வந்து சேர்ந்தாள் சரஸ்வதி கலா... கடைசி நிமிடம் வரை தன்னால் வர முடியுமா முடியாதா என்ற கேள்வி குறி இருந்ததாகவும், பின் எப்படியோ ஒருவழியாக வந்ததாகவும் அவளும் தெரிவித்தாள். அவளை முன்பே இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் சிவதானுவின் மகளின் விசேஷத்தில் சந்தித்திருந்தேன். இந்த பயணம் ஒரு தனி மகிழ்ச்சி அளிப்பதாக அவளும் தனது சந்தோசத்தை பகிர்ந்துக் கொண்டாள். 


அடுத்து வந்தது மனோஜ். இரண்டு பெண் குழந்தைகளின் தந்தையாக இருக்கும் அவன் என்னிடம் வந்து ஹாய் ஜீவா என்று கைநீட்டியபோது யார் என்ற குழப்பம் மனதில் இருக்கவே செய்தது. நான் மனோஜ் என்று அவனே அறிமுகம் செய்துக்கொண்டான். கொஞ்சம் மனதிற்கு நெருடியது, அய்யயோ எப்படி மறந்தோம் என்று. கைக்குழந்தையோடு அவனின் பயணம் எல்லோருக்கும் மகிழ்ச்சியை கொடுத்தது. அவனின் கைக்குழந்தை அனைவருக்கும் செல்லக்குழந்தையாகி போனாள்.

ஏற்கனவே வருகிறேன் என்று சொன்ன நண்பன் ஒருவன் வராமல் போக, இன்னும் இரு நண்பர்கள் நேரடியாக கோயம்புத்தூர் பேருந்து நிலையத்தில் எங்களோடு இணைந்து கொள்வார்கள் என்று சிவதாணு அறிவிக்க, இரவு ஒன்பது மணியளவில் கோவை நோக்கி பயணமானது எங்கள் வேன்....


கோவை பேருந்துநிலையத்திற்கு காலை ஆறு மணியளவில் நாங்கள் பயணித்த  வேன் வந்து நின்றது. அங்கு ஏற்கனவே வர வேண்டிய நண்பன் ஒருவன், குடும்பத்தோடு ரெயிலை தவறவிட்டிருக்க,ஒற்றை ஆளாய் நின்றிருந்தான் சுந்தரமூர்த்தி. அவன் மனைவியின் உடல்நிலை காரணமாக அவரால் வர முடியவில்லையென்றும் தான் நேரடியாக சென்னையிலிருந்து கோவை வந்ததாகவும் பின்னர் அறிந்தேன். நேரடியாக வேன் உள்ளே வந்த அவன், எந்த வித அறிமுகங்களையும் ஏற்றுக்கொள்ளாமலும் சகஜமாகவும் உள்ளே சென்று விட்டான். பின் நாங்கள் அமர்ந்த சீட் அருகே வந்து அமர்ந்தவன் அவனின் வழக்கமான இயல்போடு அப்படியே பேச ஆரம்பித்து விட்டான். இந்த பதினெட்டு வருடங்களில் அவன் மாறவே இல்லை என்ற நினைப்பு தான் என் மனதில் ஓடியது....


அவனோடு பேசிக்கொண்டிருக்கையில் ஒன்று சொன்னான். எவ்வளவு சின்ன குழந்தையாக இருந்தோம், இன்று நமக்கும் குழந்தைகள் இருக்கின்றனர், நாம் எப்படி எல்லாம் நம் குழந்தைகளை கவனித்துக்கொள்கிறோம், அப்படியென்றால் நம் அப்பா நம்மை எவ்வளவு பாதுக்காப்பாக நம்மை பாத்திருப்பார், நிஜமாவே அவர் கிரேட் என்றான். நம்மில் எத்தனை பேர் இப்படி யோசித்துப்பார்த்திருக்கிறோம்?
சென்னையில் ரெயிலை தவறவிட்ட நண்பன் நேரடியாக மேட்டுப்பாளையம் ப்ளாக் தண்டர் வருவதாக தெரிவித்துவிட, பயண களைப்பு நீக்கி, காலை சிற்றுண்டி முடித்து ஈசா யோகா சென்டருக்குள் காலை பதினோரு மணியளவில் நுழைந்தோம். நான், என் தங்கை, மற்றும் சரஸ்வதி கலாவும் வேனிலேயே தங்கி விட, மற்றவர்கள் உள்ளே சென்றார்கள். மனோஜ்ஜின் கைக்குழந்தை எங்களுடன் இருக்க, அந்த தேவதையை பராமரிப்பதில் இரண்டு மணிநேரம் ஓடினதே எங்களுக்கு தெரியவில்லை. பின்னர் ஒருவழியாக மதியம் ஒரு மணியளவில் மீண்டும் பயணம் தொடர, மேட்டுப்பாளையம் செல்வதில் தாமதமானது. மதியம் சிற்றுண்டி முடித்து ப்ளாக் தண்டர் சென்று சேர்ந்த நேரம் மாலை நான்கு முப்பது. இனி உள் நுழைவது உசிதமல்ல என பெரும்பான்மையோர் நினைக்க, குழந்தைகள் ஏமாற்றம் அடைய கூடாது என்பதால் உள் செல்வது என முடிவெடுக்கப்பட்டது.

ப்ளாக் தன்டரில் வைத்து எங்கள் இன்னொரு நண்பன் மகாராஜன் குடும்பத்தோடு எங்களுடன் இணைந்துகொண்டான். இரு குழந்தைகளுக்கு தகப்பனான அவன் பயணகளைப்பில் இருந்தான். பின்னர் நாங்கள் ஊட்டி மலை ஏற துவங்கினோம். சுமார் ஒன்பது மணியளவில் ஊட்டி சென்ற நாங்கள் ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த ஹாலிடே வில்லா சென்றடைந்தோம். அங்கு நடுங்கும் குளிரில் நண்பர்கள் அனைவரோடும் அமர்ந்து இரவு உணவு உண்டது மறக்க முடியாததாய் இருந்தது. நீண்ட பயணம் எனக்குள் களைப்பை எடுத்துச்சொல்ல, பக்கத்து அறையில் நண்பர்களின் பாடல்கள் ஒலித்தது. எனக்கும் அவர்களோடு சென்று அமர ஆசை இருந்தாலும் அசதி என்னை தூக்கத்துக்குள் ஆழ்த்தியது....

மறுநாள் காலையில் வந்த செய்தி எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்தது. பயணக்களைப்பும் இரவு உண்ட உணவு ஒத்துக்கொள்ளாமலும் மகாராஜன் வயிற்று வலியால் இரவு முழுவதும் அவஸ்தை பட்டான் என்பது தான் அந்த செய்தி. இதனால் அன்று முழுவதும் அனைவரும் ஒன்றாய் கழிக்கலாம் என்ற எண்ணம் தகர்க்கப்பட்டது.  மதியம் இரண்டு மணிக்கே தான் மீண்டும் சென்னை திரும்புவதாக அவன் அறிவித்து விட, வேறு வழியின்றி அவனுக்கான ஏற்பாடுகள் சிலவற்றை செய்து விட்டு அவனை பிரிந்து மற்ற நண்பர்கள் தொடர்ந்து பயணிக்கும் நிலை உருவானது.... அவன் மனைவியோடு பழக முடியாத சூழ்நிலை, அவன் குழந்தைகளை கூட முழுமையாக பார்க்க முடியாத வருத்தம் எனக்குள் ஏற்பட்டதை விவரிக்க முடியவில்லை.


இந்த பயணத்தை பொறுத்தவரை புதிதாய் ஒரு நட்பு வட்டம் உருவாகி இருந்தது. ஆம், எங்கள் குழந்தைகள் தங்களுக்குள் சகஜமாக ஒருவருக்கொருவர் அறிமுகமாகி கொண்டனர்.  ஒன்றாக இருந்த அந்த நாட்களில் அவர்களுக்குள் உருவான நட்பு எங்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்தது.பின் அன்று ஊட்டியை சுற்றிப் பார்த்தபின் இரவு மலையை விட்டு இறங்க துவங்கியது எங்கள் வேன். கடுமையான போக்குவரத்து நெரிச்சல் காரணமாக வாகனங்கள் நின்ற இடத்திலேயே முடங்க, நாங்கள் எங்கள் பயண அனுபவங்களை பகிர்ந்துக் கொள்ளத் துவங்கினோம்...

மீண்டும் பள்ளிப் பருவம் சென்று பாடல்கள் பாடிக்கொண்டோம். சுந்தர மூர்த்தியின் நகைச்சுவை பேச்சால் முகம் மலர சிரித்துக் கொண்டோம். மனம் நிறைந்த திருப்தியுடன் பிரியவே பிரிய மனமில்லாமல் இனி மீண்டும் ஒரு சந்திப்பிற்கான  நாளை ஆவலோடு எதிர்பார்த்தபடி  மறுநாள் பிற்பகல் அவரவர் வீடு வந்து சேர்ந்தோம்.

அடுத்த சந்திப்பில் இன்னும் சந்திக்காத நண்பர்களை சந்திக்க வேண்டுமென்ற ஆவல் விரைவில் நிறைவேறும் என எதிர்பார்க்கத் துவங்கினேன்...