Pages

Saturday 29 September 2012

சுவாரசிய வாழ்க்கை - சில சவுகர்யங்களும் சங்கடங்களும்



அன்றாடம் நம் வாழ்வில் சந்திக்கும் நபர்கள் என்பது வேறு. அவர்களின் குணாதிசயங்கள் பற்றியோ நடவடிக்கைகள் பற்றியோ நாம் அதிகம் கவலைப்படுவதாக இல்லை. அதே நேரம், நம்மோடு கூடவே தொடர்ந்த/தொடரும் நபர்களின் நடவடிக்கைகள், அவை சுவாரசியமாகவோ இல்லை அசவுகர்யமாகவோ இருந்தால்???

நான் சந்தித்த என் நண்பர்கள் மற்றும் தோழிகள்: 

 (இங்கு நான் எதையும் விவாதிக்கவோ விளக்கவோ முனையவில்லை, அதனை வேறொரு தனிப்பதிவில் வைத்துக் கொள்ளலாம். எனது அன்றைய அனுபவம் மட்டுமே இப்பதிவில் பதிய நினைக்கிறேன்)  

கல்லூரியில் அப்பொழுது தான் வகுப்பறை சென்று விட்டு வந்து அமர்ந்த நேரம், என் அலைபேசி யாரோ என்னை அழைகின்றனர் என்று மவுனமாய் எடுத்துரைத்தது. திரையில் மின்னிய எண் புதிதாய் தெரியவே சற்று அசுவாரசியமாய் ஹெல்லோ என்றேன். எதிர்முனை "ஜீவா நான் தான்டா" என்றது.

அது என் நண்பனின் குரல். சரியாக பத்தொன்பது ஆண்டுகள் பின்னோக்கி பார்த்தால் அவன் என் பத்தாம் வகுப்பு சக தோழன்.

''எனது பெண் பூப்பெய்தி விட்டதால் வரும் வெள்ளிக் கிழமை அதற்கான விழா வைத்திருக்கிறேன், நீ அவசியம் வந்து விடு'' என்றான்.

எனக்கு அதிர்ச்சி. இருபத்தி இரண்டு வயதில் அவனுக்கு திருமணம் முடிந்து விட்டிருந்தாலும் அவன் மகள் சிறியவளாக தானே இருப்பாள்? ''அவள் வயதென்ன" என்ற கேள்வியை என்னால் தவிர்க்க முடியவில்லை.

''பத்தரை வயது'' என்ற அவன் பதில் என்னை ஆழ்ந்து பெருமூச்சு விட வைத்தது. எட்டு வயது நிரம்பிய என் மகள் கண் முன் வந்து சென்றாள்.

விளையாட்டுத்தனமும் அறியாமையும் விட்டு அகலா இந்த பச்சை குழந்தைகளின் இத்தகைய அசாதாரண வளர்ச்சிக்கு காரணம் என்ன?

1. பெருகி வரும் பாஸ்ட் பூட் கலாசாரம் 
2. அறிவியல் வளர்ச்சியினால் மாறி வரும் மனநிலை 

இந்த குழந்தைகளின் அசாதாரண வளர்ச்சி இன்று ஒரு சர்வ சாதாரண நிகழ்வாய் பெருகி விட்டிருந்தாலும், இவர்களை வைத்து சடங்கு, சம்பிரதாயம் என்ற கோட்பாடுகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. இந்த பச்சிளம் குழந்தைகளை அலங்கார பதுமைகளாக மாற்றி அவர்களை ஊருக்கு அடையாளம் காட்ட வேண்டிய அவசியம் தான் என்ன?

சரி, நண்பன் அழைத்து விட்டான், சென்று வரலாம், இருபது வருடம் கழித்து சில நண்பர்களை சந்திக்கலாமே என்ற எண்ணம் மனதில் தோன்ற சென்று வருவது என முடிவு செய்தேன். 

அங்கு சென்றதும் ஏதோ வர கூடாத இடத்திற்கு வந்து விட்டோமோ என்று எண்ண வைக்கும் படியான சூழ்நிலை எனக்கு தோன்ற ஆரம்பித்தது. ஒரு சிறு பெண்ணை வைத்து நடத்தப்படும் இத்தகைய சடங்குகள் தேவை தானா? அதை நானும் ஊக்குவிக்கிறேனா? 

 நிற்க கூட முடியாமல் மிகவும் தளர்ச்சியாக தோன்றிய அவள் தன்னை ஆசிர்வதித்தவர்களை புன்னகையோடு எதிர் கொண்ட விதம் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.  இன்றைய இளைய தலைமுறையினருக்கு இத்தகைய சகிப்பு தன்மை எங்கிருந்து வருகிறது?

ஒரு முதிர்ந்த பெண்ணை போல் மற்றவர்களுடன் புன்னகைத்த அவள், அவள் தந்தையிடம் மட்டும் சற்று உரிமையாக கைபிடித்து நின்றுக் கொண்டாள். தளர்ந்து போய் உக்கார நினைக்கும் அவளிடம் என் நண்பன் (அவளது தந்தை) அரவணைப்போடு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான். 

என்னதான் எனக்கு இதில் உடன்பாடு இல்லையென்றாலும் அவர்கள் இருவரின் பாசப்பிணைப்பு என்னை ஆச்சர்ய பட வைத்தது என்னவோ உண்மை. தந்தையின் மனதறிந்து மகளும், மகளின் நிலை அறிந்து தந்தையும்... நெகிழ்ச்சியோடு கூடிய அட்ஜஸ்ட்மென்ட் இருவர் கண்களிளுமே மிளிர்ந்தது. 

வரிசையில் நின்று ஒரு வழியாக அந்த சிறு பெண்ணை நல்லா இரு (வேறு என்ன சொல்வது என அந்த நேரத்தில் தோன்றவில்லை) என ஆசிவதித்து விட்டு நண்பனை பார்த்து புன்னகைத்தோம்  நானும் என் கணவரும்.  எங்களை கண்ட அவன், எங்களை சாப்பிட அழைத்து சென்றான். 

அங்கே சாப்பிட்டு கொண்டிருந்த ஒரு பெண்ணை அழைத்து, யார் என தெரிகிறதா என வினவ, நானோ நெற்றி சுருக்கி அவளை நினைவில் நிறுத்த முயன்று தோற்று கொண்டிருக்க, அவளுக்கும் அதே நிலைமை. பின் எங்கள் பெயர் சொல்லி நண்பன் அறிமுகபடுத்த ஆச்சர்யத்தோடு ஒருவரை ஒருவர் கைகுலுக்கி கொண்டோம். அவள் எங்கள் எட்டாம் வகுப்பு தோழி. 

பரஸ்பர நலவிசாரிப்புகளுக்கு பின், என் குழந்தைகள் பற்றி அவள் விசாரித்தாள். என் இரட்டை குழந்தைகள் பற்றி முன்பே அறிந்திருந்த அவளை பற்றி நான் எதுவும் அறிந்து வைத்திருக்கவில்லை என்பது எனக்குள் கொஞ்சம் வேதனையை தந்தது. அவள் இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கிறாள் என்று அறிந்த உடன் மனம் ஏனோ விரக்தியாய் பெருமூச்சு விட்டுக் கொண்டது. 

பெண்ணீயம் பற்றி அதிகமாக யோசிக்கும் நான் ஏன் அவள் திருமணமாகவில்லை என்று சொன்னதும் வருத்தப்பட வேண்டும்? அப்படியென்றால் ஒரு பெண்ணுக்கு திருமணம் அத்தனை முக்கியமானதா? கேள்விகள் தொக்கி நிற்க சாப்பிட ஆரம்பித்தேன் நான்.

சாப்பிட்டு முடிக்கும் முன் மற்றுமொரு அறிமுகம். இவள் என்னை கண்டதும் ஓடி வந்து கைப்பிடித்துக் கொண்டாள். அவளை சட்டென அடையாளம் கண்டு விட்ட நானும் அவளை பற்றிக் கொண்டேன். 

அவளது சந்தோசம் என்னையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. என் குழந்தைகள் பயிலும் பள்ளியிலேயே அவள் குழந்தைகளும் படிப்பதாக கூறியது இன்னும் ஆச்சர்யம். என்னைப் பற்றி எதுவும் தெரிந்து வைத்திருக்காத அவள், தான் ஒரு கல்லூரியில் அட்மினிஸ்ட்ரேசனில் பணியாற்றுவதாக கூறினாள். பின் விடைபெற தயாராக இருந்த அவளிடம் என் கணவர் என்னை அறிமுகப்படுத்த நினைத்து இவளும் கல்லூரியில் பணியாற்றுகிறாள் என்ற உடன் அவளுக்கு ஆச்சர்யம். 

எனது நிலைமையும், உடலையும் பார்த்து அவள் நான் குடும்ப தலைவியாக தான் இருக்க வேண்டுமென்று முடிவு எடுத்து விட்டாளோ என்னமோ? நான் கல்லூரி விரிவுரையாளர், அதுவும் ஒரு துறையின் தலைமை பொறுப்பில் இருக்கிறேன் என்றதும் மீண்டும் அவளிடம் ஆச்சர்யம். கல்லூரிக்கு நானே காரில் சென்று விடுவேன் என்றதும் அடுத்தக்கட்ட அதிர்ச்சி அவளுக்கு. என் கன்னம் பிடித்து செல்லம் கொஞ்ச ஆரம்பித்து விட்டாள் அவள். 

ஒருவழியாக வீடு திரும்பிய நான் யோசித்துக் கொண்டேன். எத்தனை வருடங்கள் நட்புக்களை பிரிந்து இருந்து விட்டேன். வாழ்க்கை சுழற்சி என்பது எப்படி எல்லாம் நம்மோடு சேர்த்து நம் மனங்களையும் புரட்டிப் போட்டு விடுகிறது. 

இத்தகைய பூப்புனித நீராட்டு விழா தேவை தானா என்ற என் கேள்விக்கு நிச்சயம் என் மகளுக்கு தேவையில்லை என்ற பதில் மட்டுமே என்னால் கொடுக்க முடிந்தது. அதுவும் தற்காலிகமானதே. கணவர் மற்றும் உறவுகளின் வற்புறுத்தல்களுக்கு நான் பணிந்து போவேனோ என்னவோ?

எப்படியாயினும்  என் முந்தைய பதிவில் தான் என் எட்டாம் வகுப்பு நண்பர்களை பற்றி எழுதி இருந்தேன், இப்பொழுது அவர்களில் நான்கு பேரை சந்தித்து விட்ட மகிழ்ச்சி. ஆனாலும் அதில் நான் சொல்லாமல் விட்ட நண்பன் ஒருவன் என்னை பார்த்தும் பாராமுகம் காட்டியபடி சென்று விட்டான். மனங்களில் தான் எத்தனை நிறங்கள். நண்பர்களோடு இணைந்திருந்த காலங்களில் இருந்த பூரிப்பும் பரவசமும் இப்பொழுது ஏனோ குறைவது போன்றே தோன்றுகிறது.

எங்களுக்குள் பரிமாறிக் கொண்ட அலைபேசி எண்கள் இன்னமும் அழுதப்படாமலே விரல்களின் ஸ்பரிசதிற்காக காத்துக் கிடக்கின்றன.

சரி, வீட்டு வேலை அப்படியே இருக்கிறது, குழந்தைகளை கவனிக்க வேண்டும், அவர்களின் சண்டைகளை நானும் அனுபவிக்கவேண்டும். இனி ஒரு பதிவில் சந்திக்கிறேன். 


Thursday 27 September 2012

அன்னையை கண்டேன்....


May 8, 2011 அன்று எதேர்ச்சையாக என் கல்லூரி ஜூனியரும் தற்போதைய சக பேராசிரியையுமான பாக்கிய லெட்சுமியின் முகநூல் சுவரை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது... அங்கு அவளின் தோழியும், எனது ஜூனியருமான பால சுந்தரியின் செய்தி ஒன்றை படித்தேன்......

அந்த செய்தி:

சென்னை “Dr.K.M.Cherian Heart Foundation” பணி புரியும் அவள் கடந்த ஏப்ரல் 26ல் அதிகாரப்பூர்வமாக ஒரு பெண் குழந்தையை தன் மூன்றாவது குழந்தையாக தத்தெடுத்துள்ளாள். அக்குழந்தை 34 வார குறைமாத குழந்தையாக ஒரு திருமணம் ஆகாத 22 வயதான பெண்ணிற்கு ஏப்ரல் 24 ல் பிறந்திருக்கின்றது. ஏற்கனவே அந்த குழந்தையை கருவிலேயே அழிக்கும் முயற்சியில் ஈடுபட்ட அந்த தாய், தனக்கு அந்த குழந்தை வேண்டவே வேண்டாம் என்று தனக்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவரிடம் திட்டவட்டமாக மறுத்திருக்கிறாள். அந்த பெண்ணின் மருத்துவரின் கீழ் தனது ஆராய்ச்சி படிப்பை (Ph.D) தொடரும் பால சுந்தரி, அந்த மருத்துவரிடம் அக்குழந்தையை எந்த பாதிப்பும் இல்லாமல் (குறைமாத குழந்தைகளுக்கு அதன் சுவாச உறுப்பு (lungs) சரிவர வளர்ச்சி அடையாத நிலையினால் ஏற்படும் மூச்சடைப்பு) பிரசவிக்க செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளாள். தானே முன்நின்று பிரசவத்தில் உதவியதோடு அந்த குழந்தையின் முதல் அழுகையை உணர்வுபூர்வமான மகிழ்ச்சியோடு வரவேற்றிருக்கிறாள். அக்குழந்தையை இழக்க விரும்பாத அவள், தனது கணவர் மற்றும் குடும்பத்தார் அனைவரின் எதிர்ப்புகளையும் எதிர்த்து கண்ணீரோடு போராடி இருக்கிறாள். ஏற்கனவே ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைக்கு தாயான அவள் தன் போராட்டத்தில் வெற்றி பெற்றதோடு அதிகாரபூர்வமாக அக்குழந்தையை தத்தும் எடுத்துள்ளாள். குறைமாத குழந்தையான அக்குழந்தையை கனிவோடு கவனித்து தற்போது முழு ஆரோக்கியத்தோடு அக்குழந்தை அவள் வீட்டில் வளர்ந்து வருகிறது. அக்குழந்தையை வெறுத்த அவள் வீட்டாரும் தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக மனம் மாறி வருவதோடு அவள் மகளும் அக்குழந்தையை தனது மடியில் வைத்து ஆசையோடு கொஞ்சுவதாக மகிழ்கிறாள். மேலும் தம்பி தான் வேண்டும் என்று அடம்பிடிக்கும் தன் மகன், அக்குழந்தையையை திரும்பிக்கூட பார்க்காமல் இருக்கும் நிலை மாறி அவளை தன் தங்கையாக விரைவில் ஏற்று கொள்வான் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளாள். தன் வாழ்நாளின் மீதி நாட்களில் அவளின் இந்த குட்டி தேவதையை பாதுகாப்பதாக உறுதியும் எடுத்துள்ளாள்.

இந்த அன்னையர் தினத்தில் இரு வகையான தாயை எனக்கு காட்டிய இறைவனுக்கு நன்றி. பால சுந்தரி மாதிரியான தாய் இருப்பதால் தான் இன்றும் நம் தேசம் அன்புக்கு இலக்கணமாய் திகழ்கிறது. இவளை பாராட்ட என் மனதில் வார்த்தைகள் இல்லை. கனத்த இதயத்தோடு அவளுக்கு என் நன்றி......

----- ஜீவா. எஸ் ------



புரட்டி போட்ட நட்பு...


நண்பர்கள் என்றால் வேப்பம்பூ கசப்பாய் இருந்தது என் குழந்தை பருவம். அதிலும் பசங்க என்றால் கேட்கவே வேண்டாம், அவர்கள் பக்கம் திரும்புவது கூட கிடையாது. ஏனோ தனிமை மட்டுமே எனக்கு உற்ற தோழியாய் இருந்தது. யாரிடமும் பேசுவதில்லை, ஒரே ஒரு தோழி, அவளும் பல சமயம் பராமுகம் தான், நான் பேசினால் தானே அவளும் பேசுவாள், தவறு என்மேல் தான்.

மீண்டும் அதே பள்ளியில் தொடரமுடியா வண்ணம் அங்கு அதற்குமேல் வகுப்புகள் அங்கு இல்லை. எனவே வேறு பள்ளியில் எட்டாம் வகுப்பில் அடியெடுத்து வைத்தேன்.

முதல் நாள் பள்ளி வாகனத்தில் வைத்து என் முதல் தோழி அறிமுகம் ஆனாள். வகுப்பறையில் நுழைந்தவுடன் அதிர்ச்சி. அவள் அதிகம் சென்று உரையாடியது மாணவர்களிடம் தான். அவள் என்னை தோழியாக அறிமுகபடுத்தியதால் என்னையும் சூழ்ந்து கொண்டனர் அவர்கள். கைகுலுக்க நீட்டிய அவர்களின் கை பார்த்து பின்னால் ஒளிந்த என் கை வலுக்கட்டாயமாக குலுக்கப்பட்டது.

பின்வந்த நாட்கள் சற்று பதற்றம் நிறைந்ததுதான். தினமும் எங்களுக்கு வாசலில் வரவேற்பு. என் தோழியோ அவர்களோடு ஒன்றி விடுவாள். தனித்திருக்கும் நான் அவர்களுக்கு பொழுதுபோக்காகி விடுவேன்.

என் முன்னால் இருக்கும் இருக்கையில் என்னை நோக்கி அமர்ந்தபடி என் முகத்தையே பார்த்து கொண்டிருப்பான் ஒருவன், ஏண்டா இப்படி செய்கிறாய் என்று கேட்டால் நீ சிரித்தால் அழகாய் இருக்கிறாய், உன் சிரிப்பை காண தவமிருக்கிறேன் என்பான். என் உள்மனதில் மிகப் பெரிய யுத்தம் நடந்து கொண்டிருந்தது.

 யாரிடம் இதை சொல்லி அழுவது என்று அந்த வயதில் எதுவும் புரியவில்லை. அதே நிலை மேலும் பத்து நாட்கள் நீடிக்கவே, கவலையோடு வீட்டுக்கு வந்தேன். வீட்டில் அப்பா வேறு என்னை திட்டவே வேதனையோடு என் அறையில் சென்று அமர்ந்தேன்.

இனியும் நான் உயிர் வாழ தான் செய்யணுமா? ஏன் இறைவா என்னை சோதிக்கிறாய் என்று அதுவரை வணங்காத தெய்வத்திடம் முறையிட்டேன். இனியும் நான் வாழ்வது சரியில்லை என்று முடிவு மனதில் விஸ்வரூபம் எடுத்தது.

எங்கள் வீட்டு கழிவறையில் ஆசிட் இருப்பது நினைவு வர ஒரு முடிவோடு ஓடி சென்று கழிவறை கதவை மூடினேன். பின்னாலேயே ஓடி வந்த என் தாய் தடுப்பதற்குள் ஆசிட் என் வாய்க்குள், பின் வயிற்றுக்குள்.

ஒருவாரம் கஷ்டப்பட்டு காப்பாற்றப்பட்ட நான் அம்மாவிடம் நடந்தவைகளை கூறி அழுதேன், அம்மா சிரித்து கொண்டே சொன்னார்கள், உன் வகுப்பு தோழர்கள் தானே, அவர்கள் சிரிக்க சொன்னால் சிரித்து விட்டு போ, அதனால் உனக்கு எந்த பாதிப்பும் வரபோவதில்லை என்று.

மீண்டும் அதே பள்ளி. தனிமையில் அமர்ந்தபடி எதையோ வெறித்து கொண்டிருந்த என் தோள்களில் நான்கைந்து கைகள். என் தோழியும், கூடவே அவள் தோழர்களும். என் கைகளை பற்றியபடி என் காலருகே அமர்ந்து கொண்டனர். சற்று நேரம் யாரும் பேசவில்லை. அவர்கள் கண்களில் கண்ணீர்.

உன்னை வேதனை படுத்த நாங்கள் உன்னை கிண்டல் பண்ணவில்லை. நிஜமாகவே நீ சிரித்தால் அழகாக இருக்கிறாய். நீ என்றும் சிரித்து கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை, எங்களை மன்னித்து விடு என்று கண்களில் கண்ணீரோடு கலங்கி நின்றனர்.

மறுநாள் என்னை பார்த்தவுடன் தலைகுனிந்து ஒதுங்கி செல்லும் அவர்களை பார்த்து முதல்முதலாக சிரிப்பு வந்தது. அந்த சிரிப்பு என் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க போவதை அறியாமலே அவர்களை பார்த்து மீண்டும் புன்னகைத்தேன்.

அன்று ஆரம்பித்த புன்னகை, பின் கிண்டல், கலாட்டா, பக்கத்து பள்ளி மாணவர்களுடன் அடிதடி சண்டை, பள்ளி முதல்வரின் தண்டனை, பெற்றோர்களிடத்து புகார், எங்களுக்காக வாதாடிய பெற்றோர் என்று மறக்க முடியாத நினைவுகளை தன்னுள் புதைத்து கொண்டது. நண்பர்கள் இல்லாத ஒரு உலகை கற்பனை கூட செய்து பார்க்க முடியாத ஒரு பட்டாம்பூச்சி பருவமாக அது மாறி போனது.

சிரிக்கவே தெரியாத உயிருள்ள ஜடமாய் இருந்த நான் இவர்களின் அறிமுகத்தால் என் வாழ்வை அர்த்தமுளதாக்கி கொண்டேன். பின்னாளில் நண்பன் ஒருவன் இவள் எங்கள் தோழியாய் கிடைத்ததற்கு நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் அப்பா என்று சொன்ன போது என் அப்பாவின் முகத்தில் தெரிந்த அந்த பிரகாசம் என் எட்டாம் வகுப்பு நண்பர்கள் எனக்கு கொடுத்த பொக்கிஷம்.