Pages

Monday, 12 November 2012

புற்று நோய்...!புற்றுநோய்  என்பது கட்டுப்பாடற்று உடலின் செல்கள் பிரிந்து பெருகுவதால் ஏற்படும் நோய் ஆகும். இந்தக் கலங்கள் பிரிந்து பரவி மற்ற தசைகளையும் தாக்குகின்றன.  பிற நோய்களை போலல்லாமல் நமது செல்களே நமக்கு எதிரியாக உருமாறும் ஒரு கொடுமை தான் இந்த புற்றுநோய். புற்று நோய் எந்த வயதினரையும் தாக்கும் எனினும் வயது கூடக்கூட புற்றுநோய் தாக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.

இந்த புற்றுநோய் செல்களை அழிப்பது சற்று சிரமமான காரியம் தான். 

ஏன்?

ஏனெனில் இவை நமது செல்கள். இவற்றை அழிக்க முற்படுவது நம்மை நாமே அழிக்க முற்படுவதற்கு சமம். சிகிட்சையின் போது சேர்ந்தே அழிக்கப்படும் நமது உடலின் நல்ல செல்களையும் கணக்கில் கொண்டே மிகவும் ஜாக்கிரதையாக சிகிட்சை செய்ய வேண்டும்.

புற்றுநோயின் வகைகள்:
உடலின் இந்த பகுதியில் தான் வரும் என்று நிச்சயித்து சொல்ல முடியாதது இந்த புற்றுநோய். இவற்றில் பல வகைகள்.
1. மூளை புற்றுநோய்
2. மார்பக புற்றுநோய்
3. சரும புற்றுநோய்
4. ரெத்த புற்றுநோய்
5. குடல் புற்றுநோய்
6. சிறுநீரக புற்றுநோய்
7. வாய் புற்றுநோய்
இன்னும் இன்னும், உடலில் இவை தோன்றாத இடங்களே இல்லையென்று சொல்லலாம்.

சிகிட்சை முறைகள்
சரி, இனி இவர்களுக்கு கொடுக்கப்படும் சிகிட்சை முறை பற்றி சிறிது பார்ப்போம்.
மூன்று விதமான சிகிட்சை முறைகளை இதற்காக கையாளுகிறார்கள்.
1. அறுவை சிகிட்சை
2. கதிரியக்க சிகிட்சை
3. மருந்து மாத்திரைகள் மூலம் சிகிட்சை

மூளை புற்றுநோய்:
புற்றுநோய் வகைகளிலே நான் மூளை புற்றுநோய் பற்றி இங்கு கொஞ்சம் விளக்கலாம் என்று நினைக்கிறேன், காரணம், மற்ற புற்றுநோய் வகைகளை விட இது கொஞ்சம் ஆபத்தானது.

மூளை புற்றுநோயின் அறிகுறிகள்:
1. தலை வலி
2. வாந்தி
3. சமன் படுத்தி நடப்பதில் சிரமம்
4. மனநிலை குழப்பங்கள்
5. நியாபக மறதி
6. வார்த்தைகளில் தடுமாற்றம்
7. பார்வை மற்றும் கேட்கும் திறனில் குறைபாடு.


இத்தகைய அறிகுறிகள் இருந்தால் நிச்சயம் நீங்கள் உங்கள் குடும்பநல மருத்துவரை அணுகி உடலை பொது ஆய்வு செய்து கொள்ளுதல் அவசியம்.

சரி, இதற்கான காரண காரியங்கள், இதன் பூர்வீகம் என்று அலசாமல் புற்றுநோய் வந்தால் செய்ய வேண்டியது என்னவென்று பார்ப்போம்.
ஆரம்பநிலை புற்றுநோயைப் பற்றி இங்கு விளக்கவும் தேவையில்லை, நல்லவிதமான ஒரு மருத்துவ சிகிட்சையினால் அவர்களில் பெரும்பான்மையோர் காப்பாற்றப்பட்டு விடுகிறார்கள்.

புற்றுநோயை பற்றிய தகவல்களை எங்கு தேடினாலும் விலாவாரியாக அதனைப் பற்றி விவரித்து விட்டு முற்றிய நிலையில் குணப்படுத்துவது கடினம் என முடித்து விடுகின்றனர். அல்லது, முடிவு பற்றி சொல்லி விட்டு தொடக்க காலங்களை அலச ஆரம்பித்து விடுகின்றனர்.

இவ்வாறாக கைவிடப்பட்ட (மருத்துவர்களால்) புற்று நோயாளிகளுக்கு என்னதான் வழி?

இவர்களை குணப்படுத்த முடியுமா?

இதற்கான பதிலை ஆம் என்றோ இல்லை என்றோ ஒற்றை சொல்லில் முடித்து விட நான் விரும்பவில்லை.

புற்றுநோய் தாக்கப்பட்டவரின் பிரச்சனைகள்:
புற்றுநோய் தாக்கப்பட்ட செல்களை மருந்துக்களால் அழிக்க முற்படும் போது கூடவே பக்கவிளைவுகளும் சேர்ந்தே ஒட்டிக்கொள்கின்றன.

இவர்களுக்கு ஏற்படும் பிரச்சனை தான் என்ன?
இவற்றை நாம் உடல்நிலை சார்ந்த பக்க விளைவுகள், மனநிலை சார்ந்த பக்கவிளைவுகள் என பிரித்துக் கொள்ளலாம்.

உடல்நிலை சார்ந்த பக்கவிளைவுகள்:
1. உடலின் வலி
2. அசாதாரண சூழ்நிலைகளில் புறவெளி ரெத்த போக்கு
3. சோர்வு
4. மயக்கம்
5. எந்த நோய்கிருமி தாக்குதலுக்கும் சுலபமாக இலக்காகுதல்
6. மற்ற நோய்களுக்கான சிகிட்சை முறைகள் பயனளிப்பதில் தாமதம்
7. இன்னும் பிற

மனநிலை சார்ந்த பக்கவிளைவுகள்:
1. அலட்சியம்
2. ஒரு வித படபடப்பு
3. சொன்னதையே திரும்ப கூறுதல்
4. அழுகை
5. கோபம்
6. அடம்
7. சுயபட்சாதாபம்
8. இன்னும் பல

சில மருத்துவ சிகிட்சை முறை இல்லாமல் நம்மால் எதுவும் செய்ய முடியாது என்பது உண்மை தான், ஆனால் அந்த மருந்துக்களின் வீரியம் நம்மை சோர்வடைய வைக்கும் போதெல்லாம் நம்மின் உற்சாகம் அதனை வென்றெடுக்கட்டும்.

இத்தகைய நிலையில் இருப்பவர்களுக்கு முதலில் நான் சில விஷயங்கள் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
1. முதலில் நீங்கள் உங்களை நேசியுங்கள்.
2. நான் ஒரு நோயாளி என்ற எண்ணத்தை மனதில் இருந்து நீக்குங்கள்.
3. நோய் என்பது உடலில் தான், மனதில் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
4. மனதினை ஒருநிலை படுத்துங்கள்.
5. உங்களுக்கு தேவை எதுவென நீங்களே முடிவு செய்யுங்கள்.
6. மனதிற்கு பிடித்தமான விசயங்களில் கவனத்தை செலுத்துங்கள்.

மனநிலை சார்ந்த பக்கவிளைவுகளால் அவதி படுபவர்களுக்கு:
1. மனமே மருந்து என்பதை மறந்து விட வேண்டாம்.
2. மறதி உங்களை அடிக்கடி தொல்லை படுத்தினால் அதனை மறக்க முயற்சி பண்ணுங்கள். எந்த காரணம் கொண்டும் அதை நினைத்து வருத்தப்பட வேண்டாம்.
3. அமிலத் தன்மை நிறைந்த உணவை தவிர்த்திடுங்கள்.
4. புற்றுநோய் என்பது மனம், உடல், ஆன்மா சாந்த ஒரு நோய். எனவே மனதை எப்பொழுதும் உற்சாகமாக வைத்திடுங்கள். அது புற்றுநோய்க்கு எதிரான உங்கள் உடலின் யுத்தத்தை விழிப்போடு வைத்திருக்கும்.
5. கோபம், மன்னிக்கும் குணம் இல்லா வன்மம், சுயபச்சாதாபம் போன்றவை உங்கள் உடலை பிராண வாயுவற்ற அமில தன்மைக்கு இழுத்துச் செல்லும். எனவே மனதை அன்பால் நிறைத்திடுங்கள்.
6. ஆழ்ந்த அமைதியும் மகிழ்ச்சியும் கலந்த வாழ்வை அனுபவியுங்கள்.
7. புற்றுநோய் செல்களால் பிராணவாயு இருக்குமிடத்தில் வாழ முடியாது, எனவே அடிக்கடி மூச்சை நன்கு இழுத்து விட்டுக்கொள்ளுங்கள்.
8. வாழ்க்கையின் ஏதேனும் ஒரு லெட்சியத்தை மனதில் நிறுத்தி அதனை அடைய தீவிரமாக போராடுங்கள். உங்கள் லட்சியம் நோக்கி நீங்கள் பயணிக்கும் வேகத்தில் புற்றுநோய் புறம் தள்ளப்பட்டு வேடிக்கை மட்டுமே பாக்க வேண்டும்.

புற்றுநோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர், சுற்றம் மற்றும் நண்பர்கள் கவனத்திற்கு:
1. அவர்களை ஒரு நோயாளியாய் பார்ப்பதை தவிருங்கள்
2. சோகம் அவர்களை மட்டுமல்ல, உங்களையும் தாக்காது இருக்கட்டும்
3. அவர்களை சூழ்ந்த சுற்றுபுறத்தை உற்சாகமாக வைத்திருங்கள்
4. அவர்களின் திறமைகளை ஊக்கப்படுத்துங்கள்
5. அச்சம் உண்டு பண்ணும் தன்னம்பிக்கை இழக்கச் செய்யும் கதைகளை பேசுவதை தவிர்த்திடுங்கள்
6. குடும்ப பொறுப்புகளை பகிர்ந்தளியுங்கள்
7. அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆலோசனைகள் கேளுங்கள்

எல்லாவற்றிலும் மேலாக:
மரணம் எந்த நேரத்திலும் வரலாம் என்ற நிலையில் அதனை சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்க தயாராகவே இருக்க வேண்டும். மரணம் நிச்சயம் என்று மனம் உணரத்துவங்கி விட்டால் மனதை ஒருநிலை படுத்துங்கள்.
1. இத்தனை நாள் வாழ வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றி கூறுங்கள்
2. வலிகள் இல்லாத மரணத்தை எதிர்நோக்க தயாராகுங்கள்
3. ஒரு வேளை அந்த தருணம் வலிகள் நிறைந்ததாய் இருந்தால் வலிகள் தாங்கும் பக்குவம் பெறுங்கள்
4. பிரியமானவர்களின் (தாய், தந்தை, கணவன், மனைவி, மகன், மகள் இப்படி யார் வேண்டுமென்றாலும்) அருகாமை உங்களுக்கு தைரியத்தை கொடுக்கும், அவர்களோடு உங்கள் நிமிடங்களை செலவிடுங்கள்.
5. புன்னகையோடு மரணத்தை எதிர்நோக்கும் வலிமையை மனதிற்குள் உருவாக்குங்கள்... மற்றபடி நீங்களும் வாழ்க்கையை வாழப்பிறந்தவர் என்பதை ஒருபோதும் மறந்துவிட வேண்டாம்...!

Saturday, 10 November 2012

கிறுக்கிய தத்துவங்கள்.... (பகுதி 2)

51. வீண் பிடிவாதங்களும் வறட்டு கவுரவங்களும் வாழ்வின் நிம்மதியை குலைத்து விடும்....

52. நம்பிக்கை என்னும் படகில் தான் வாழ்க்கை பயணம் ஆரம்பிக்கிறது. பயணம் வெற்றி பெறுவதற்கும் தோல்வி அடைவதற்கும் அதுவே காரணமாகிறது....

53. வெற்றி என்பது லட்சியத்தை படிப்படியாக புரிந்து கொள்வது....

54. நம் அன்பானவர்களின் மேல் அன்பு இருந்தால் மட்டும் போதாது, அதை வெளிக்காட்டவும் தெரிந்திருக்க வேண்டும்...

55. உரிமைகளும் அதிகாரங்களும் எடுத்துக் கொள்ளப்படும் போதுதான் காதலின் வலிமை புரியப்படுகிறது ....

56. அன்பும் கருணையும் நட்பை பெருக செய்யும் காரணிகளாகும்.....

57. ஒருவரின் மேல் நம்பிக்கை வரும் வரை காத்திருக்கலாம், ஆனால் நம்பிக்கை வந்தபின் அதை எக்காரணம் கொண்டும் இழக்க கூடாது....

58. நேர்மையும் அன்புமே தலைமை பண்பை கட்டிக்காக்கும் காவலர்கள்....

59. கற்று கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும், சாதிக்க வேண்டும் என்ற துடிப்பும் அடைய வேண்டும் என்ற முயற்சியும் தான் ஒருவனை வெற்றி படிகளில் ஏற வைக்கும்...

60. தவறாக புரிந்து கொள்ளல் நம்மையறியாமல் தவறான முடிவுகளை எடுக்க வைக்கும்...

61. பொறுமையும் சகிப்பு தன்மையும் ஒருவன் மனதில் அமைதியை கொண்டு வருகிறது...

62. சுயசிந்தனை, திட்டமிடல், நேரம் தவறாமை - ஒருவரின் முன்னேற்றதிற்கு முக்கிய காரணிகள்....

63. விடாமுயர்சியும் தன்னம்பிக்கையும் வாழ்வின் வெற்றியின் இரகசியங்கள்...

64. ஒரு நோயாளியின் உற்ற நண்பன் மன தைரியம், உயிருக்கு உலை வைக்கும் எதிரி பயம்...

65. வாழ்வில் எதிர்மறையான விசயங்களையும் நேசிக்க கற்றுக்கொண்டு விட்டால் விரக்தி என்ற வார்த்தை பயனில்லாமல் போய் விடும்...

66. ஒருவரை நம்பும் முன் எவ்வளவு வேண்டுமென்றாலும் சந்தேகப்படலாம், நம்பிய பின் எக்காலத்திலும் சந்தேகம் வேண்டாம், அது அந்த நம்பிக்கைக்கு இழுக்கு...

67. சுகமும் துக்கமும் நிறைந்த வாழ்க்கையில் சுகத்தை மட்டுமே எதிர்பார்த்திருந்தால் துக்கம் மட்டுமே மிஞ்சும்....

68. வாழ்வில் வரும் சோதனைகளை புன்னகையோடு எதிர்கொள்வதே அவற்றை வெற்றிகொள்ள நாம் எடுத்து வைக்கும் முதல் படி...

69. ஒரு ஆணின் கல்வி செல்வத்தை பெருக்கும், ஒரு பெண்ணின் கல்வி கல்வியை பெருக்கும்....

70. மகிழ்வாய் சிரித்திருக்கும் மனிதரிடம் அவர் எதிரியேயானாலும் அவரெதிரில் குறை கூறல் கூறுபவருக்கு இழுக்கு....

71. நமது குறிக்கோளை நோக்கி நேர்கொண்ட பார்வையோடு அதற்கான செயலிலும் இறங்கி விட்டால் வெற்றி நம்மை அரவணைத்துக் கொள்ளும்....

72. உடலில் ஏற்படும் காயத்தை விட மனதில் ஏற்படும் காயம் நீண்ட நாள் ஆறா ரணமாய் வலிக்கும்... அந்த ரணம் வேண்டாம் என்றில்லாமல் ரணத்தை தாங்கி கொள்ளும் துணிச்சலை கொடு என்ற பிரார்த்தனை ரணத்தின் தன்மையை குறைக்கும்....

73. தவறுகள் செய்பவன் மனிதன், அவனை மன்னிப்பது மனிதம்.....

74. முக்கியத்துவம் என்பது அறிவு சார்ந்து, அன்பு சார்ந்து, உறவு சார்ந்து, நட்பு சார்ந்து இருக்க வேண்டுமே தவிர தனம் சார்ந்து இருக்க கூடாது....

75. அன்பு என்பது ஒரு வழி பாதையாக மட்டுமேயில்லாமல் இருவழி பாதையாக இருக்க வேண்டும்... கொடுக்கலும் வாங்கலும் சரி சமமாக இருந்தால் என்றும் அன்புக்கு குறைவில்லை...

76. வாழ்வின் வளர்ச்சி நம் உள்ளத்தின் மகிழ்ச்சியை பொறுத்தே அமைகிறது. புத்துணர்ச்சியோடு கூடிய காலை நாள் முழுவதும் மலர்ச்சியாய் இருக்க உதவுகிறது.

77. அலைபாயும் மனதும், சட்டென முடிவெடுக்கும் அவசரமும் எப்பொழுதும் நல்ல முடிவை தருவதில்லை.

78. மாறும் சூழ்நிலைகளுக்கேற்ப வளையும் நாணலாய் இசைந்து கொடுப்பது வாழ்வின் கட்டாயமாக்கப்படுகிறது. புரிந்து கொண்டு தனித்தன்மை மாறாமல் வாழ்வை ரசிக்க பழக வேண்டும்.

79. தீர்க்கவே முடியாத பிரச்சனை என்று தெரிந்து விட்டால் அதனை புறம தள்ளி வைத்துவிட்டு வாழ்வை தொடர்வதே சாலச்சிறந்தது.

80. ஏமாற்றம் என்பது வாழ்வில் ஒரு மாற்றத்தை உருவாக்குவதற்கே... பக்குவமாக அதிலிருந்து மீண்டு விட்டால் வாழ்வை கற்று விடலாம்.

81. அழகியல் என்பது அன்பால் உணரப்படுவது. அது ஆத்மாவின் தூய்மையை வெளிப்படுத்தும்.

82. மனதின் எண்ணங்களே வார்த்தைகளாக வெளிப்பட்டு விட்டால் குற்ற உணர்வு குறைவதுடன் நல்ல எண்ணங்களை மனம் எண்ணத் துவங்கும்.

83. மனம் என்பது நம்மை ஆளும் கருவி. சரியான முறையில் இயக்கப்பட்டால் மட்டுமே சரியான விகிதாசாரத்தில் அது இயங்கும்.

84. அளவுக்கு அதிகமான அன்பு கூட பல நேர துன்பங்களுக்கு காரணக்கர்த்தாவாக இருக்கிறது.

85. வாழ்க்கை என்பது நீர்நிலை போல, சில சமயம் சலனமற்ற நதியாய் அமைதி காட்டும் அது பல நேரங்களில் காட்டாற்று வெள்ளமாய் ஆக்ரோஷம் காட்டும்.

87. அளவான தேவையான தூக்கம் உடலை பேணுவதுப் போல் அளவான தேவையான அன்பு நட்பை பலப்படுத்தும்.

88. பிறர் நிம்மதி கெடுத்து தன் நிம்மதி தேடும் மனிதர்களுக்கு மிருகம் என்ற அடைமொழி கூட ஏற்புடையதல்ல.

89. காயங்களை ஆற்றும் தகுதி மறதிக்கு உண்டென்றாலும் அன்புக்குரியவர்களின் நினைவு என்றும் மறக்கலாகாது.

90. காரணங்களே வேண்டாமல் அன்பை கொடுக்க வல்ல வலிமை நட்புக்கு மட்டுமே உண்டு.

91. அன்பானவர்களின் உணர்வுகள் அன்புக்குரியவரால் உணர்ந்துக் கொள்ளப்பட்டால் அதை விட பெரிய மகிழ்ச்சி வேறு இல்லை.

92. கடந்துப் போன காயங்களை மறக்கச் செய்தலும், பசுமை நினைவுகளை அசைபோட வைத்தலும் காலத்தின் முக்கிய பணிகள்.... புரிந்துக் கொண்டு செயல்பட்டோமானால் என்றும் காலம் நம்மோடு கடந்து வரும்.

93. ஆவேசமும் அவசரமும் என்றும் அறிவுக்கு சத்ரு... இவை இரண்டையும் சற்று நேரத்துக்கு ஒத்தி வைத்தால் தானே வலிமையிழந்து நம்மை வலுப்படுத்தும்.

94. அன்பும் அறிவும் என்றும் அழியா பொக்கிசங்கள்... பாதுகாத்தல் நமது கடமை.

95. அன்பு - அது ஆழ்ந்த புன்னகையை மனதில் படர விடும் அற்புத ஆயுதம் .

96. எவ்வளவு பெரிய கோபத்தையும் அடக்கியாளும் சக்தி, ஒரு சிறிய புன்னகைக்கு உண்டு.

97. நிதானமும் தெளிவான சிந்தனையும் மனதிற்கு ஆத்ம திருப்தியை தரும்.

98. சில நேரங்களில் சுயநலமில்லா முடிவுகள் பயனற்று போய் விடுகின்றன... விவேகமும் சற்றே சுயநலம் சார்ந்த முடிவுகளே என்றும் வாழ்வின் மகிழ்ச்சியை நீடிக்க வைக்கும் காரணிகளாகும்.

99. நீர் இருக்கும் வரைதான் நீரூற்றுக்கு மதிப்பு. அதை போல் அன்பு இருக்கும் வரை தான் மனிதனுக்கு மதிப்பு.... அன்பில்லாத மனிதன் விலங்கினத்தில் கூட சேர்க்க தகுதியில்லாதவன்.

100. வாழ்க்கையின் மிகப்பெரிய அடிப்படை தேவை அன்பு... பிற உயிர்களின் மீது அன்பு செலுத்த தெரியாத மனிதன் வாழ்க்கையின் பெரும்பகுதி நிம்மதியை இழக்கிறான்.


வாழ்வியல் ரகசியங்கள்


சமீபத்தில் எனக்கு நண்பர் ஒரு கதையை ஈ.மெயில் வழி அனுப்பி வைத்திருந்தார். கதையின் கரு என்னை மிகவும் பாதித்து விட்டதாலும் கதையின் நீளம் அதிகம் என்பதாலும் அதை சுருக்கி தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டுமென்று கருதி கொண்டேன். இதோ அந்த கதை உங்கள் பார்வைக்கு............

வாழ்வியல் ரகசியங்கள்:

அன்று இரவு என் மனைவி உணவு பரிமாறி கொண்டிருக்கும் பொழுது மெதுவாக அவள் கைப்பற்றி எனக்கு அவளிடமிருந்து விவாகரத்து வேண்டும் என்பதை தெரியப்படுத்தினேன். அந்த இரவு அவள் மவுனமாக அழுதுகொண்டே எங்கள் திருமணத்திற்கு என்ன ஆயிற்று என்று விடை தேடி கொண்டிருந்தாள். தன் வாழ்நாளின் பத்து வருடங்களை என்னுடன் கழித்தவள் இப்பொழுது எனக்கு அன்னியமாகி போனாள். என்னால் வீணாய் கடந்து போன அவள் வாழ்க்கைக்காக நான் பரிதாபம் மட்டுமே பட முடிந்தது, காரணம் நான் ஜேன்ஐ உயிரினும் மேலாக காதலிக்கிறேன்.

காலையில் என் மனைவி தனது விவாகரத்து நிபந்தனைகளை சமர்ப்பித்தாள். அவளுக்கு என்னிடத்தில் எதுவும் தேவையில்லை ஆனால் விவாகரத்திற்கு ஒரு மாத கால அவகாசம் வேண்டும், மேலும் எங்கள் திருமணத்தின் போது நான் அவளை தூக்கிக்கொண்டு மணவறையை விட்டு வெளியே வந்தது போல் இந்த ஒரு மாதமும் அவளை நான் படுக்கையறையிலிருந்து வாசல் வரை தினமும் தூக்கிக் கொண்டு வரவேண்டும். நாங்கள் கழிக்கப் போகும் மீதி நாட்களை அமைதியாக செலவிட வேண்டியிருந்ததால் அவள் அர்த்தமில்லா கோரிக்கையை ஏற்றுக்கொண்டேன்.

என் விவாகரத்து உறுதியாய் வெளிப்பட்ட பிறகு முதல் நாள் அவளை நான் சுமந்த போது இருவருமே அசவுக்கியமாய் உணர்ந்தோம். ஆனால் எங்களை பின்தொடர்ந்து வந்த மகனோ கைத்தட்டியப்படி அப்பா அம்மாவை தன் கைகளில் சுமக்கிறார் என்று மகிழ்ந்தான். இது எனக்கு சற்று மன வலியை கொடுத்தது.

இரண்டாம் நாள் இருவருக்கும் சற்று சவுகரியமாக இருந்தது. அவள் என் மார்பில் சாய்ந்து கொண்ட போது அவள் உடையின் வாசம் என்னை தாக்கியது. இவளை நான் பலநாள் பத்திரமாக பார்க்கவில்லை என்ற எண்ணம் எழுந்தது. இவள் தன் இளமையை தொலைத்து விட்டிருக்கிறாள். அவள் முகத்தில் சுருக்கங்கள் விழ ஆரம்பித்து விட்டன. முடிகள் நரைத்து விட்டன. எங்கள் திருமணம் அவள் மேல் ஒரு பெரும்சுமையை ஏற்றி வைத்து விட்டது. ஒரு நிமிடம், நான் இவளுக்காக என்ன செய்து விட்டேன் என்று எண்ணிக்கொண்டேன்.

நான்காம் நாள், எங்களுக்குள் நெருக்கம் மீண்டும் மலர்வதை உணர்ந்தேன். இந்த பெண்மணி தன் பத்து வருட வாழ்க்கையை எனக்காக செலவிட்டிருக்கிறாள். ஐந்து மற்றும் ஆறாம் நாட்களில் எங்கள் மேலும் நெருக்கம் அதிகமாவதை அறிந்தேன். இப்பொழுது அவளை சுமப்பது சுலபமாயிற்று. ஒரு மாதம் சென்றதே தெரியவில்லை.

கடைசி நாளன்று அவளை தூக்கி கொண்டு ஒரு அடி கூட என்னால் நகர முடியவில்லை. அந்நேரத்தில் உள்ளே வந்த எங்கள் மகன், தந்தையே நீங்கள் அம்மாவை சுமக்கும் நேரம் வந்து விட்டது என்றான். அவனை பொருத்தவரை அவன் தந்தை அவன் தாயை தூக்கி சுமப்பதை பார்ப்பது அவன் வாழ்வின் இன்றியமையான பகுதியாகி விட்டது. எங்கள் மகன் பள்ளிக்கு சென்று விட்டான். அவளை இறுக்கமாக அணைத்தபடியே நம் வாழ்க்கை நெருக்கத்தை இழந்து விட்டதை நான் கவனிக்க தவறி விட்டேன் என்றேன்.

அலுவலகம் விரைந்த நான் காரின் கதவை பூட்டாமலே அவசர அவசரமாக மாடிப்படிகளில் ஏறினேன். கதவை திறந்த ஜேனிடம் என்னை மன்னித்து விடு ஜேன், எனக்கு விவாகரத்து தேவையில்லை என்றேன். எங்கள் வாழ்க்கை கடினமாக மாறியதற்கு காரணம் நாங்கள் ஒருவரை ஒருவர் விரும்பவில்லை என்பதல்ல, நங்கள் எங்கள் வாழ்வின் பொன்னான தருணங்களை மதிக்கவில்லை என்பதுதான் உண்மை என்றேன். அவள் விழித்துக் கொண்டவளாய் என்னை பார்த்தாள். என் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டு விட்டு அறைக்குள் சென்று விம்ம ஆரம்பித்தாள். நான் படியிறங்கி காரை எடுத்தேன்.

வரும் வழியில் என் மனைவிக்காக பூங்கொத்து ஒன்றை வாங்கினேன். விற்பனை பெண்மணி அட்டையில் என்ன எழுத வேண்டும் என்று கேட்டாள். நான் புன்னகைத்துக் கொண்டே “மரணம் நம்மை பிரிக்கும் வரை தினமும் உன்னை காலையில் தூக்கி சுமப்பேன்” என்று எழுதினேன். அன்று மாலை, கையில் பூங்கொத்தோடும் முகத்தில் புன்னகையோடும் மாடிப்படிகளில் ஏறித்துவங்கினேன்.

..................................கதை இத்துடன் நிறைவு பெறவில்லையென்றாலும் இதற்கு மேலும் அதை தொடர்தல் அவசியமற்றது என்று கருதுகிறேன். 

நம் வாழ்வில் நடக்கும் சின்ன சின்ன வாழ்வியல் விசயங்களே உறவுகளை பலப்படுத்தும் மிகப்பெரிய ஆயுதமாய் இருக்கிறதேயன்றி வீடோ, காரோ, சொத்துக்களோ, வங்கியில் பணமோ அல்ல. வாழ்க்கையில் விட்டுக்கொடுத்தலால் வரும் வெற்றியை அறியாதவர்களே பெரும்பாலும் தோற்றுப் போகிறார்கள். நம்மில் எத்தனை பேர் இன்று நம் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கிறோம் என்று எண்ணிப் பார்த்தால் பெரும்பான்மையோர் அந்த நிலையிலேயே தான் இன்றும் உழன்று கொண்டிருக்கிறோம் என்பது தான் உண்மை. கனத்த இதயத்தோடு ஒரு பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது என்னால்...


Wednesday, 7 November 2012

உங்கள் வாழ்க்கையின் முக்கியமான நபர் என்று யாரை கருதுகிறீர்கள்?

பொழுதுபோக்குக்காக நான் முகநூலை பயன்படுத்த ஆரம்பித்து இருந்தாலும் சில நேரங்களில் கருத்துக்களை பகிர்வதற்கும், பலரின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்கும் அது உதவியாக இருக்கிறது என்றால் அது மிகையல்ல. 

இப்படி தான் சமீபத்தில் முகநூலில் "உங்கள் வாழ்க்கையின் முக்கியமான நபர் என்று யாரை கருதுகிறீர்கள்?? ஏன்??? எதனால்????" என்ற கேள்வி Gayathri Devi யால் நண்பர்கள் மத்தியில் வைக்கப்பட்டது.

இதற்கு பலர் பலவிதமான பதிலை கூறி இருந்தனர். சிலர், தான் தான் தனக்கு முக்கியமான நபர் என்றும், மேலும் சிலர், தாய் தந்தையர் தான் என்றும் தங்கள் கருத்தினை பதிவு செய்திருந்தனர். ஒரு பதிவாளரோ ஒரு படி மேலே போய் தன் காதலி தான் தன் வாழ்வின் முக்கியமான நபர் என்று வாதிட்டிருந்தார். அவருடைய கருத்து அவர் வழியில் முக்கியமானதாகவே இருந்தது. மேலும் ஒருவர் தன்னை செதுக்கிய இந்த சமூகம் தான் தனக்கு முக்கியமானது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

பலரும் பலவிதமான விடைகள் கூறி இருந்தாலும் சிலர் கூறிய முக்கியமான சில பதில்களை மட்டும் இங்கு பார்க்கலாம்.

Vasanthakumar Graphicdesigner  என் வாழ்வில் முக்கியமான நபர் என்று நான் கருதுவது என்னை எதிரியாய் நினைக்கும் சிலர், ஏன் என்றால் என்னை எதிரியாய் கருதி எனக்கெதிராய் அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியங்களையும் நான் முறியடிக்க வேண்டும் என்று என்னை நானே செம்மை படுத்தி கொள்ள உதவுகிறார்கள், என்னை வீழ்த்த நினைக்க நினைக்க நான் என்னை மென் மேலும் உயர்த்த மறைமுகமாக அவர்களே எனக்கு உதவுகிறார்கள்....

ஆம்...! அது உண்மை தானே... எதிரிகள் இருக்கும் வரை தானே  நாம் விழிப்போடு செயல்பட முடியும்?

Jeeva Rajaseker  நம் வாழ்வின் முக்கியமான நபராக நம்மை தவிர வேறு யார் இருக்க முடியும்? வாழ்வின் ஒவ்வொரு தருணங்களிலும் சிலர் முக்கியமானவராக வந்து போவர். "நேற்றைய யாரோ இன்றைய முக்கியமானவர், இன்றைய முக்கியமானவர் நாளைய நினைவில் நின்றவர்". இதில் உறவுகளை வேண்டுமானால் விதிவிலக்காக சொல்லலாம். அதிலும் வயதுக்கு வரும் வரை தாய் முக்கியம், திருமணம் வரை தந்தை முக்கியம், விளையாடும் வயதில் சகோதரர்கள் முக்கியம் (அதிலும் சண்டை போட), சம்பாதிக்கும் வரை கணவர்/மனைவி முக்கியம், வயதான காலத்தில் குழந்தைகள் முக்கியம் (தயவு தேவை படுகிறது). உறவுகளிலும் இந்த முக்கியத்துவம் மாறுபடுகிறது. நேற்றைய நண்பனாய் இருந்தவன் இன்றைய நினைவுகளில் மட்டும், இன்றைய பகைவன் நாளைய உற்ற தோழனாய் மாறக்கூடும்.... மொத்தத்தில் வாழ்வின் நடந்தவை, நடப்பவை, நடக்க போகின்றவை எல்லாவற்றிலும் நாம் இருப்போம், நாம் மட்டுமே இருப்போம்.... என்றும் எப்போதும்...

இது எனது கருத்து...

Shanmuga Murthy ம்ம்ம்..நல்ல கேள்வி.ஆனால்.. 'முக்கியமான' என்ற பதத்தில் பலகேள்விகள் தொக்கி நிற்கிறது. எந்த வகையில் முக்கியமான என்பது அறியப்படவேண்டும்.ஆனால் நமது வாழ்க்கையில் முக்கியமான திருப்பங்களுக்கு காரணமானவர்களை அவ்வாறு கொள்ளலாம். ஆனால் அது எல்லோருக்கும் சாத்தியப்படக்கூடிய ஒன்று அல்ல. சிறுவராய் இருக்கையில் தந்தை ஹீரோ. ஆனால் வளர்ந்த பின் அந்த இமேஜ் கொஞ்சம் குறைந்துவிடும். அதன் பின் நமது வாழ்க்கையில் நமக்கு நிலையான வாழ்க்கையில் பங்கேற்கும் கணவன்/மனைவிதான் முக்கியமான நபர். நமது நலனில் , வாழ்க்கையில், தன் எதிர்பார்த்த வாழ்க்கை கிடைக்காதபோதும் ஒருவருக்கொருவர் புரிந்து வாழத்துவங்கும் அந்த இருவர்..அதாவது கணவனுக்கு மனைவி/மனைவிக்கு கணவன் என்பவர்தான் முக்கியமான நபர். இது பொதுவான விதி. ஆனால் ஒரு இக்கட்டான சூழலில் ,தனக்கு விடிவே இல்லையோ என்று ஒருவர் தடுமாறி நிற்கையில் ..கை கொடுத்து தூக்கிவிட்டு உதவி செய்பவரும் மிகவும் முக்கியமான நபரே. :-)) ஒருவருக்கு காதலி/காதலன் எந்த வகையிலும் முக்கியமான நபர் அல்ல. அக் காதல் வெற்றி பெற்று அவர் கணவன் -மனைவி யாகும் பட்சத்தில்தான் முக்கியத்துவம் பெறுவர் என்பது என் கருத்து.

காதலனோ காதலியோ கணவன் மனைவியாகும் பட்சத்தில் தான் ஒருவொருக்கொருவர் முக்கியமானவர்களாக ஆகிறார்கள் என்பது சிந்தித்து ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயம் தான்... 

மொத்தத்தில் இந்த விசயத்தை உங்களுடன் பகிர வேண்டும் என்று தோன்றியதால் பகிர்ந்தேன். தங்களின் கருத்துக்களையும் தெரிவித்தால் மேலும் அறிந்துக்கொள்ள உதவியாக இருக்கும்.