Pages

Tuesday, 30 October 2012

படித்ததில் பிடித்தது- உறவுகள்.....


ஒரு நாள் ஒரு சிறு பெண்ணும் அவள் தந்தையும் ஒரு பாலத்தை கடக்கவேண்டிய கட்டாயம். தந்தையோ சற்று பயத்தோடு“செல்லமே, இந்த பாலம் கடக்கும் வரை என் கையை பற்றிக்கொண்டிரு, அப்பொழுதுதான் நீ ஆற்றில் விழாமல் இருப்பாய்” என்றார்.

சிறு பெண்ணோ “இல்லை தந்தையே, நீங்கள் என் கையை பற்றி கொள்ளுங்கள்” என்றாள்.

“இரண்டுக்கும் அப்படி என்ன வித்தியாசம் இருக்க போகிறது” என்றார் தந்தை குழப்பத்தோடு.

“பெரிய வித்தியாசம் இருக்கிறது தந்தையே” தொடர்ந்தாள் சிறுமி, “நான் உங்கள் கைகளை பற்றிக்கொண்டிருக்கும் போது எனக்கு ஏதாவது நேர்ந்தால் என் கையை நான் பயத்தில் விட்டுவிட வாய்பிருக்கிறது, ஆனால் நீங்கள் என் கையை பற்றியிருந்தாலோ எனக்கு எதை பற்றியும் பயமில்லை, ஏனெனில் எக்காரணம் கொண்டும் என் கையை நீங்கள் விட மாட்டீர்கள்”

இதுதான் உறவுகள்... உறவுகள் மேல் கொண்ட நம்பிக்கைகள்...

எந்த உறவிலும் நம்பிக்கை என்பது ஒட்டுதலல்ல, பிணைதல். எனவே நம்மை நேசிக்கும் நபர் நம் கைகளை பற்றி கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்காமல் நாம் அவர்கள் கைகளை பற்றிக் கொள்வோம்...


ஜூசி......


ஜூசி பிறந்த போது நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு விலங்கியல் படித்துக் கொண்டிருந்தேன். மறுநாள் எனக்கு மாதாந்திரத்தேர்வு. எனவே இரவில் கொட்ட கொட்ட விழித்து அதுவரை திறக்கப்படாத புத்தகத்திடம் அதன் புதுமை வாசத்தோடு மல்லுக்கட்டி கொண்டிருந்தேன். இரவு மணி பனிரெண்டு இருக்கும், திடீரென சிண்டு அலற ஆரம்பிக்கிறாள். அங்குமிங்குமாய், ஒவ்வொரு அறையாய் சென்று அனைவரின் தூக்கத்தையும் கலைக்கும் நோக்கில் ஏதோ ஒரு ஏக்க குரலில் தளுதளுக்கிறாள். அவள் குரல் கேட்டு என் படுக்கையறையிலிருந்து வெளியே வருகிறேன். என்னை கண்டதும் அவளுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. என் கால்களை கட்டிக் கொள்கிறாள். அவளோடு வருமாறு கெஞ்சும் குரலில் இரஞ்சுகிறாள். என்னதான் நடந்து விட போகிறது பார்க்கலாம் என்ற தைரியத்தில் அவளோடு செல்கிறேன். என் தாயின் படுக்கையறையை கடக்கும் போது நடு இரவில் பேய் மாதிரி என்னடி உலவுகிறாய் என்ற கண்டிப்பையும் மீறி சிண்டு பின்னால் சென்றேன்.

அவளின் படுக்கையறை. எனக்கு உதவி செய்யேன் என்ற கெஞ்சல் பார்வையோடு அவள் படுக்கையில் படுக்கிறாள். அவள் குரல் கேட்டு அவளின் தாய் நரியும் அங்கு ஆஜர். நரி என்று அவளுக்கு ஏன் பெயர் வந்தது என்பது தனிக்கதை. அவள் தான் எங்கள் வீட்டு ஜார்ஜ் பெர்னாண்டஸ் (அப்போதைய ராணுவ மந்திரி). அவள் ஒருத்தி இருந்து விட்டால் அனைவருக்கும் ஒரு தைரியம். சரி, கதைக்குள் வருவோம்.

சிண்டுவின் முனங்கல் ஒலி அதிகரிக்க ஆரம்பிக்கிறது, திடீரென அவள் அருகில் ஒரு அழகிய நிலவு. நரி லாவகமாய் அவளை தடவி கொடுத்து தாய்க்கும் சேய்க்குமான தொப்புள் கொடி உறவை துண்டிக்க உதவுகிறாள். சோர்வோடு படுத்துக் கொண்ட சிண்டுவை வாஞ்சையுடன் தலையை வருடிக் கொடுக்கிறாள். எனக்கும் ஒரு பரவசம். நானே தாயானதாய் ஒரு உணர்வு. அதுவரை என்னை போகாதே போகாதே என்று இறைஞ்சி கொண்டிருந்த சிண்டு என்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. சேயை கண்ட மகிழ்ச்சியில் அவள் திளைத்து விட்டாள்.

மறுநாள் பரீட்சை நினைவில் வர நானும் என் அறையில் வந்து படுத்துக்கொண்டேன். ஏனோ அந்த புது வரவு என் மனதில் இனம் புரியா ஒரு சந்தோசத்தை விதைத்து விட்டிருந்தது. மேலும் மேலும் தொடர்பரீட்சை என்னை இம்சிக்க ஆறு நாட்கள் ஆறு நொடிகளைப் போல் ஓடி விட்டிருந்தன.

திடீரென அந்த புதுவரவின் நினைவு வெகுவாய் தாக்க சிண்டுவை காணச்சென்றேன். பாலூட்டிக் கொண்டிருந்த அவள் என்னை கண்டதும் சற்றே தலை தூக்கி பார்த்து விட்டு மீண்டும் படுத்துக் கொண்டாள். மெதுவாக அவள் அருகில் சென்று அமர்ந்தேன். என்னை ஓரக்கண்ணால் பார்த்த புதுவரவை மென்மையாக கையிலெடுத்துக் கொண்டேன். “ஜூசி” என் வாய் மெதுவாக அவளுக்கான பெயரை உச்சரித்தது. அவளோடு என் அறைக்குள் நுழைந்தேன். ஏனோ இவள் எனக்காக பிறந்தவளோ என்று தோன்றியது. பின்னாலயே வந்த சிண்டுவிடம் இனி நீ என் அறையிலேயே படுத்துக்கொள் என்றவாறு அவள் படுக்கையை இடமாற்றினேன்.

அதன் பின் வந்த நாட்கள் சுவாரசியமானவை. ஜூசி வளர்ந்து கொண்டிருந்தாள். தாயிடம் பால் குடிக்கும் நேரம் போக மீதி நேரம் என் மடியில் தான். இரவில் போது தாயிடம் தூங்கும் அவள் அதிகாலை ஐந்து மணியளவில் விடியும் நேரம் என் முகத்தருகில் இருப்பாள். என் மூச்சு காற்றை பிடித்து விடும் முயற்சியில் தன் பிஞ்சு கரங்களால் என் முகத்தில் கிச்சு கிச்சு மூட்டுவாள். கல்லூரி முதல் மணி அடித்த பின்பே படுக்கை விட்டு எழும் நான் அவளால் அதிகாலை எழும் நிலைக்கு தள்ளப்பட்டேன். இருந்தும் அவள் மேல் ஒரு தீராத காதல். அவள் என்றும் நன்றாய் இருக்க வேண்டுமென்று மனம் பிரார்த்தித்துக் கொண்டே இருந்தது.

திடீரென என் சித்தப்பா தூத்துக்குடியிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தார்கள். வீட்டில் அங்குமிங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருந்த ஜூசியை கண்டதும் அவர்களுக்கு பிடித்து விட்டது. என் அம்மா வேறு அவளை பற்றி ஆஹா ஓஹோவெனப் புகழ அவளை தன்னோடு அழைத்து சென்றே தீருவேன் என்று அடம்பிடிக்க ஆரம்பித்தார். அப்பா அம்மாவோடு கலந்து பேசி, அவள் சித்தப்பாவோடு இருந்தால் மிகவும் நன்றாக இருப்பாள் என்று என்னை ஆறுதல் படுத்தினர். மனம் நிறைந்த பாரத்தோடு அவளை அவரிடம் ஒப்படைத்தேன்.

அன்று இரவு எனக்கு தூக்கம் தொலைந்த இரவாய் போய் விட்டது. என் மகள் எங்கே என்று பார்வையாலே கேட்ட சிண்டுவை பார்க்கும் சக்தியற்றவளாய் என் படுக்கையறை கதவை மூடினேன். சிலநாட்கள் அதிகாலை தூக்கம் விழித்து பின் மீண்டும் நெடுநேரம் தூங்க ஆரம்பித்தேன். இதற்கு இடைப்பட்ட நாட்களில் ஜூசியை இருமுறை சந்தித்தேன். சித்தப்பாவின் செல்லப்பிள்ளையாய் அவரோடவே எப்பொழுதும் காரில் பயணிக்கிறாள். அவளை பற்றிய என் கவலை என்னை விட்டு கொஞ்சம் கொஞ்சமாய் விலகி கொண்டிருந்தது.

திடீரென ஒரு வெள்ளி அதிகாலை என் மூக்கில் ஜூசி எப்பொழுதும் கொடுக்கும் முத்தம். அதோடு சேர்த்து என் மூச்சு காற்றை பிடித்துவிடும் முயற்சி.. “ஜூசி” அழைத்தவாறே விழித்துக் கொள்கிறேன். அதிகாலை மணி ஐந்து. கனவா நினைவா என்று சுதாரிப்பதற்குள் என் மூக்கில் நிஜமாய் ஈரம். தூக்கம் தொலைந்து அம்மா பின்னால் போய் அணைத்துகொள்கிறேன். ஆச்சர்ய குறியோடு அம்மா காபியை நீட்டுகிறாள். “வரும் ஞாயிறு சித்தப்பா வீட்டில் வருகிறார்களாம்” அம்மா செய்தியாய் சொல்லி விட்டு போன வார்த்தைகள் என்னுள் மீண்டும் பரவசத்தை ஏற்படுத்தின.

அப்படியானால் நான் ஜூசியை பார்க்கப்போகிறேன். ஞாயிறு எனக்கு சுவர்க்கமாய் விடிந்தது. ஒவ்வொரு மணித்துளியும் ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்க வாசலில் வந்து நின்றது சித்தப்பாவின் கார். ஓடி சென்று காரின் உள் தேடினேன். “ஜூசி வரவில்லை” சோகத்தோடு ஒலித்த சித்தியின் குரலுக்கு ஏன் என்று கண்களாலே வினவினேன். “வியாழன் இரவு அவள் இறந்து விட்டாள்” . அவள் எப்படி இறந்தாள் என்ற விளக்கத்தை சித்தப்பா அம்மாவிடம் சொல்லி கொண்டிருக்க எனக்கோ வெள்ளி காலை அவள் கொடுத்த முத்தம் நினைவிற்கு வந்தது...


Tuesday, 23 October 2012

கிறுக்கிய தத்துவங்கள்.... (பகுதி 1)1. உன் ஒவ்வொரு அசைவும் ஏதோ ஒரு காரணத்திற்காக இருக்க வேண்டும், ஒவ்வொரு நொடியும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்....

2. கோபமும் கண்ணீரும் உணர்வுகளின் சத்ரு. கோபத்தின் போது மவுனம் காப்பதும், கண்ணீரின் போது அமைதி காப்பதும் வாழ்க்கையின் வெற்றி ரகசியங்கள்....

3. நேரம் வரும் போது எல்லாம் கூடி வரும், ஆனால் அந்த "நேரத்தை" உருவாக்கும் முயற்சிகளில் நாம் தான் ஈடுபட வேண்டும்....

4. விடியும் வரை தெரிவதில்லை கண்டது கனவு என்று, வாழ்க்கையும் அப்படி தான், முடியும் வரை தெரிவதில்லை, வாழ்வது எப்படி என்று...

5. வாழ்க்கை என்பது நீ சாகும் வரை இல்லை, மற்றவர் மனதில் நீ வாழும் வரை ....

6. காலம் என்றும் நமக்காக காத்திருப்பதில்லை, காலத்தோடு நாம் தான் அனுசரித்து செல்ல வேண்டும்...

7. வாழ்க்கை - நீ வாழ்வது உன் கையில் தான் என்று சொல்லாமல் சொல்கிறதோ? ....

8. முட்களும் கற்களும் நெருடி கொண்டே தான் இருக்கும், ஆனாலும் வாழ்க்கை அதன் பாதையில் சென்று கொண்டு தான் இருக்கும்...

9. நண்பனேயானாலும் நம் மேல் அவருக்கான சுதந்திரம், நம் சுதந்திரத்தை பாதிக்காத வரை தான்.....

10. சந்தோசம் என்பது உள்ளங்கை அளவு தான், ஆனால் அதையே பிறருடன் பகிர பகிர சுரபியாய் ஊற்றெடுக்கும்...

11. வாழ்க்கை என்பது அனுபவங்களின் தொகுப்பாகும். அவற்றை நல்ல பாடமாக எடுத்து கொண்டு செயல்பட்டால் வெற்றியும் நிம்மதியும் நம் வசமாகும்...

12. சோதனைகளையும் வேதனைககளையும் கடந்து தான் நேர்மை புகழப்படும்...

13. நகைச்சுவை நம் வாழ்வில் மகிழ்ச்சியான தருணங்களை தருகிறது, ஆனால் வாழ்க்கையே நகைச்சுவையாய் போய் விட்டால் நம் மகிழ்ச்சியை அதுவே தொலைத்து விடுகிறது....

14. அன்னைக்கு ஆண் பால் பெண்பால் வேறுபாடு எதுவும் இல்லை...அன்பை பகிரும் யாவரும் அன்னையே....

15. சுதந்திரம் இல்லாத வாழ்க்கை, உயிர் இல்லாத உடலைப் போன்றது...

16. கர்வம் என்பது நமக்கு நாமே வைத்து கொள்ளும் ஆப்பு.....

17. ஆர்வமும் முயற்சியும் முன்னேற்றத்தின் தூண்டுகோல்.....

18. தனியறையில் தூங்கி கொண்டிருப்பது தனிமையல்ல, உறவுகள் மத்தியில் ஒரு நட்பு இல்லாதிருப்பதே தனிமை....

19. எவ்வளவு தான் ஒருவரிடம் நற்பண்புகள் இருந்தாலும் அவரின் கோபம் ஒரு நொடியில் அவற்றை தகுதி இழக்க செய்து விடும்....

20. இந்த உலகில் தான் மட்டுமே புத்திசாலி என்று நினைப்பவன் என்றும் முட்டாளாகவே இருப்பான்....

21. மனசாட்சி சொல்படி வாழ்பவன் என்றும் பயம் கொள்ள தேவையில்லை....

22. ஒருவரின் குறைகளை கூறி கொண்டே இருந்தால் பயனில்லை, அவர்களின் நிறைகளை கண்டுபிடித்து நட்பு பாராட்டுவதே மேன்மை...

23. துன்பங்களும் இன்பங்களும் நம் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் வாழ்க்கை அதன் போக்கில் சென்று கொண்டுதான் இருக்கும் .....

24. விடியல் என்பது தினமும் தான், ஆனால் அதை சரியான முறையில் பயன்படுத்தி கொள்வது நம்மிடம் தான் உள்ளது....

25. அன்பை பகிர்ந்து கொடுக்க கொடுக்க தான் அதிகமாகும்...

26. நமக்கான பாதை எதுவென்று தெரிந்து கொண்டு முன்னேறுவது தான் புத்திசாலித்தனம்...

27. சோம்பல் என்பது கிடைக்க வேண்டியவைகளையும் தடுத்து விடும்...

28. ஒரு சிறு புன்னகை பகைமையை விலக்கி வைக்கும்....

29. மரண படுக்கையில் கூட உன்னால் இயன்றதை செய்யலாம் உனக்குள் ஒரு ஆற்றல் இருந்தால்...

30. குடும்பம் என்பது காற்றடைத்த பலூன் போன்றது, அதிகமாக அழுத்தம் கொடுத்தாலும் வெடித்துவிடும், லூசில் விட்டாலும் காற்று போய் விடும்...

31. நேசம் வெளிப்படும்போதுதான் ஒருவன் மனிதனாகிறான்...

32. அதிகாரம் என்பது ஆணவத்தால் அமைந்து விட கூடாது, அன்பால் ஆளப்பட வேண்டும்....

33. சந்தர்பங்களும் சூழ்நிலையும் ஒருவனுக்கு சிறந்த ஆசான்... அவனின் உண்மை பண்புகளை அது வெளிக்கொண்டு வரும்...

34. வாழ்க்கை என்பது வாழ்வது இல்லை, பிறர் மனதை அன்பால் ஆள்வது ....

35. என்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை என்னால் தான் முடியும் என்பது அகம்பாவம்.....

36. ஒரு நிமிடம் தோன்றும் கோபத்தையும் உணர்ச்சிகளையும் அடக்கி ஆள தெரிந்து விட்டால் வாழ்வை வென்று விடலாம்...

37. வாழ்வின் பல்வேறு சம்பவங்கள் மற்றும் அனுபவங்களின் ஒரு பகுதி தான் காதல்.... இருந்தும் முக்கியமானது.....

38. வாழ்க்கை வாழ்ந்துவிட்டு போவதல்ல, வாழ வைத்து பார்ப்பது ...

39. வெற்றியும் தோல்வியும் நம் மன உறுதியை பொறுத்தது....

40. முடியாது என்று ஒதுங்குவதை விட முயன்று பார்த்து தோற்பது மேல்....

41. நட்பின் மொழி வார்த்தைகளிலில்லை , அதன் அர்த்தங்களில் உள்ளது....

42. சொந்தங்களை பிரிக்க வல்லது கொடுக்கல் வாங்கல். கவனத்தோடு செயல் படாவிட்டால் உறவுகள் சிதறி விடும்...

43. மறதி என்பது துன்பத்தை மறக்க இயற்கை நமக்களித்த கொடை. அது மட்டும் இல்லாவிட்டால் உலகம் துன்பத்தில் மூழ்கி இருக்கும்...

44. தன்னால் முடியும் என்ற நம்பிக்கையோடு அதை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளும் தெரிந்தால் மட்டுமே ஒருவருக்கு வாக்கு கொடுக்க வேண்டும்....

45. எத்தனை துன்பங்கள் நேர்ந்தாலும் அடுத்த துன்பத்தை எதிர்நோக்கும் தைரியம் இருந்தால் துன்பம் கண்ணுக்கு தெரிவதில்லை ....

46. அன்பும் நேசமும் இருவழி பாதையாக இருக்க வேண்டும்....

47. நாமே நம்மை கட்டுப்படுத்தும் வித்தையை கற்று விட்டால் உலகம் நம் வசமாகும்....

48. பிடிவாதம் என்னும் வாதம் நம்மை ஆட்கொண்டிருக்கும் வரை விவாதங்கள் நீண்டு கொண்டே தான் போகும்.....

49. சட்டென்று தோன்றும் கோபம் சட்டென மகிழ்ச்சியை மறைத்து விடும் ....

50. ஒரு மனிதனை கவுரவமிக்கவனாக வாழ செய்வதில் கல்விக்கு பெரும் பங்கு உண்டு... 


Tuesday, 16 October 2012

தண்ணீர் தண்ணீர்...!தண்ணீர் நம் உடலுக்கு மிக அத்தியாவசியமான ஒன்று, ஒருவர் ஒரு நாளில் எவ்வளவு தண்ணீர் பருக முடியுமோ அவ்வளவு தண்ணீர் பருக வேண்டும், சராசரியாக மூன்றிலிருந்து நான்கு லிட்டர் வரை அவசியம் பருக வேண்டும் என்ற தகவலை ஆசிரியர்கள் மூலமாகவும், வீட்டின் பெரியவர்கள் மூலமாகவும் தெரிந்து வைத்திருந்தேன்.

ஆனாலும் அதிகமாக வியர்க்கும் எனக்கு அந்த சமயத்தில் மட்டுமே அதிகமாக தண்ணீர் தேவைப்பட்டது. ஓய்வு நேரங்களில் அதிகமாக அதன் பயன்பாடு குறைந்தே இருந்தது. ஒரே சீரான அளவிலான தண்ணீரை நான் எப்பொழுதும் உட்கொண்டதில்லை.

தண்ணீர் பற்றிய தகவலை நான் தேட ஆரம்பித்தது ஒரு கட்டாய சூழ்நிலையில் தான்.

ஏதோ சில பல காரணங்களால் என் உடல் எடை அதிகரித்து கொண்டிருந்தது. தண்ணீர் அதிகம் குடிக்காததினால் தான் இந்த பிரச்சனை என வீட்டில் உள்ளோர் கூறவே, அதுவரை தண்ணீர் பற்றிய எந்த சிந்தனையும் இல்லாமல் தாகமெடுத்தால் மட்டுமே நீர் அருந்தி வந்த நான் அதனை அதிகமாக குடிக்க ஆரம்பித்தேன்.

கொஞ்ச நாட்களிலேயே எனக்கு காலில் நீர் கோர்க்க ஆரம்பித்தது. தலைவலி பாடாய் படுத்தியது. உடலின் எடை இன்னும் அதிகாரித்ததோடு மூச்சு விடவே சிரமமாயிற்று. வீட்டில் உள்ளவர்களோ முருங்கை இலையும், பார்லி தண்ணீரும் கொடுத்து குடிக்க வைத்தனர். பிரச்சனை மேலும் அதிகமாயிற்று.

என் மனதில் தானாகவே நான் அருந்தும் நீரில் அளவின் மேல் சந்தேகம் வர, அவற்றை அதிகமாக பருகுவதை நிறுத்தினேன். கொஞ்ச நாட்களிலேயே கால்களில் நீர் கோர்ப்பது நின்றது. தலைவலியும் படிப்படியாக குறைந்தது.

உடலின் எடை கூடி கொண்டே சென்றாலும், இத்தகைய பிரச்சனையிலிருந்து நான் ஒருவழியாக மீண்டு வந்தேன். பின்னர் தான் இந்த தண்ணீர் பற்றிய தகவலை இணைய தளத்தில் தேட ஆரம்பித்தேன். தண்ணீர் பற்றிய என் தேடல் எனக்கு பலவிதமான ஆச்சர்ய தகவலை அளித்தது.

தண்ணீரின் பயன்கள் பற்றி நீங்கள் அதிகமாக தெரிந்து வைத்திருக்கலாம், ஆனால் அவற்றினால் வரும் பிரச்சனைகள் பற்றி நம்மில் பெரும்பான்மையோருக்கு தெரிவதில்லை. அவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

முதலில் நீண்ட நாட்கள் அதிக அளவு தண்ணீர் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்துப் பார்க்கலாம். 

1. உடலின் மொத்த இரத்தத்தின் அளவு அதிகரிக்கப்படுகிறது. குறிப்பிட்ட அளவு இரத்தம் மட்டுமே சுழற்சி முறையில் சுழலும் சூழ்நிலையின் இத்தகைய இரத்த அதிகரிப்பு இதயம் மற்றும் இரத்த வால்வுகளில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

2. நாம் குடிக்கும் தண்ணீரை சுத்திகரிக்கும் வேலையை செய்வது கிட்னியே. அதிகளவு உட்க்கொள்ளப்படும் தண்ணீரால் கிட்னி ஓய்வில்லாமல் சுத்திகரிக்கும் பணிக்கு தள்ளப்படுகிறது. இதனால் அது தளர்ச்சி அடைவதுடன் அதன் மெல்லிய அறிப்பான்கள் (glomeruli) அழுத்தம் காரணமாக சேதமடைகின்றன.

இவ்வாறு தேவையில்லாமல் அதிகளவு அழுத்தங்களால் இதய வால்வுகள் மற்றும் கிட்னிகள் கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கப்பட்டு நாம் அறியாமலே நீண்ட நாள் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.

இனி மிக குறைந்த கால அளவுக்குள் அதிகளவு தண்ணீரை கட்டாயப்படுத்தி திணித்தால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி பார்க்கலாம்: 

1. அதிக அளவு தண்ணீரின் அழுத்தத்தால் கிட்னி தேவைக்கதிகமான தண்ணீரை வெளியேற்றுவதில் திணறுகிறது.

2. அதிகளவு தண்ணீரால் உடலின் இரத்த ஓட்டம் நீர்த்து போகிறது. இதனால் இரத்தத்திலும் உடலின் செல்களிலும் உள்ள “எலக்ட்ரோலைட்” களின் சமநிலை பாதிக்கப்பட்டு, அதனை சரி செய்யும் முயற்சியில் இரத்தத்தில் உள்ள தண்ணீர் உடலின் செல்களுக்கு தாவுகிறது. இதனால் செல்கள் வீங்க துவங்குகின்றன.

3. இத்தகைய “செல்” வீக்கம் மூளை செல்களில் அதிகரித்தால், கடினமான ஓடுகளுக்குள் இருக்கும் மூளை வீங்கி, அழுத்தப்படுகிறது.

4. இதில் குறுகிய காலத்தில் நாம் எவ்வளவு தண்ணீர் அருந்துகிறோம் என்பதை பொறுத்து பாதிப்புகள் வேறுபடுகிறது. தலைவலியில் ஆரம்பித்து, மூச்சு திணறல் வரை கொண்டு போய் விடுகிறது.

ஏதோ ஒரு உடல்நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு வயிற்று பகுதி ஸ்கேன் செய்ய வேண்டியது வந்தால் வயிறு நிறைய தண்ணீர் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுவார்கள். நம்மில் பெரும்பான்மையோர் செய்யும் தவறு என்னவென்றால் ஸ்கேன் செய்யும் சற்று முன்னர் அதிக அளவு தண்ணீரை கட்டாயபடுத்தி வயிற்றுக்குள் திணிப்பது தான். அவ்வாறு செய்யாமல், ஸ்கேன் செய்வதற்கு இரண்டு மணி நேரம் முன்பே கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை உட்கொண்டு ஸ்கேன் செய்வதற்கு தயாராக வேண்டும். இதனால் பெருமளவு வயிற்றில் அழுத்தம் ஏற்படாமலும் உடனடி சிறுநீர் கழித்தே ஆக வேண்டுமென்ற கட்டாயம் இல்லாமலும் இருக்கும்.சரி, தண்ணீரால் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறதென்றால், நமக்கு தேவையான அளவு தண்ணீர் எவ்வளவு என நாம் எப்படி தெரிந்து கொள்வது? 

அது நம் ஒவ்வொருவருடைய கீழ்க்கண்ட தனிப்பட்ட சூழ்நிலைகளை பொறுத்தது.

1. உணவு பழக்கவழக்கம்

2. உடற்பயிற்சி முறைகள்

3. சுற்றுப்புற சூழல்

நார்ச்சத்து அதிகமுள்ள இயற்கை உணவான காய்கறிகள், பழங்கள், வேக வைத்த பட்டாணி வகைகள் ஆகியவற்றை உட்கொண்டால் அதிக அளவு தண்ணீர் உடலுக்கு தேவைப்படுவதில்லை. அதேநேரம், காரசாரமான மசால் நிறைந்த உணவு வகைகளை உண்ணும் பழக்கம் உள்ளவர்கள் அதிகளவு தண்ணீர் அருந்த வேண்டியுள்ளது.

உடல் பயிற்சியினாலோ இல்லை வேறு காரணங்களினாலோ வியர்வை அதிகளவு வெளியேறும் போது அதிகளவு தண்ணீர் தேவைபடுகிறது.

குளிர் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு அதிக தண்ணீர் தேவையில்லை, மாறாக வெப்ப மண்டல மக்களின் தண்ணீர் தேவை அதிகமாக இருக்கிறது.

மொத்தத்தில், நமது தாகத்தை பொறுத்து நீர் அருந்துவதே சிறந்தது. உடலின் தேவையை அறியாமல் தண்ணீரை கட்டாயப்படுத்தி உட்கொள்ளும் போது தான் பிரச்சனை ஆரம்பிக்கிறது. ஆனாலும் தாகமே இல்லை என்ற நிலை கூட ஆபத்தானது தான். அதனால், இத்தகைய “தண்ணீர் திணித்தலை” நம் குழந்தைகளுக்கு அளிக்காமல், அதைப்பற்றிய விழிப்புணர்வை அவர்களுக்கு ஊட்ட வேண்டியது அவசியமான ஒன்று.

“செயற்கை உணவினை தவிர்ப்போம் 
இயற்கை உணவினை ஏற்போம்”

Thursday, 11 October 2012

புட்டிப்பாலும் குழந்தை வளர்ப்பும்...


2003 - நவம்பர் மாதம். அது நான் திருமணம் முடிந்து கணவர் வீட்டில் காலடி எடுத்து வைத்த மாதம். அப்பொழுது என் கணவரின் சகோதரிகளில் ஒருவரின் குழந்தையின் வயது ஆறு மாதம்.

ஒருநாள், வழக்கம் போல் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுது திடீரென குழந்தை அழவே, ஏற்கனவே தயாராய் இருந்த புட்டிப் பாலை ஊட்டத் துவங்கினார் என் நாத்தனார்.

"என்ன அண்ணி, தயார் செய்த பாலை அரை மணி நேரத்தில் குழந்தைக்கு ஊட்ட வேண்டுமே, இந்த பால் கெட்டு போயிருக்காதா" என நான் கேட்க, "அதெல்லாம் ஒன்றும் ஆகாது, நான் ஏற்கனவே இப்படி தான் கொடுத்துக்கொண்டிருக்கிறேன்" என பதிலளித்து என்னை பதற வைத்தார்.

பின்னர் வந்த நாட்களில் அந்த பால் புட்டியையும், அதனுள் இருக்கும் பாலையும் கண்காணிக்க துவங்கி விட்டேன் நான்.

முதலில் அந்த பால் புட்டியை அவர்கள் கழுவிய விதம் பார்ப்போம். 

 1. குழந்தை குடித்து முடித்த பால் புட்டியை திறந்து, தண்ணீரில் கழுவாமல் அப்படியே சூடாக இருக்கும் வெந்நீரில் போடுகின்றனர். 
 2. புட்டியில் இருக்கும் பால் வெந்நீரில் கலந்து அது வெண்மையாகிறது.
 3. பின் அந்த புட்டியை எடுத்து பச்சைத்தண்ணீர் விட்டு அலசுகின்றனர்.
 4. புட்டிப்பால் சுத்தப்படுத்துதல் சுபம்.
இனி அவர்களின் பால் தயாரிப்பு முறை பற்றி பார்க்கலாம். 
 1. தண்ணீரை நன்றாக சூடாக்குகிறார்கள்.
 2.  அது கொதித்ததும் குறைந்த அளவு பால் பவுடரை (பால் பவுடர் விலை ஜாஸ்தி, எனவே அதை சிக்கனமாக  (?) பயன்படுத்துகிறார்களாம்) போட்டு நன்றாக நுரை வர அடித்து ஆற்றுகிறார்கள். 
 3. பின் அதனை முன்பே கழுவி எடுத்து வைத்த புட்டியில் அடைத்து வைத்து விடுகின்றனர். 
 4. எவ்வளவு நேரமானாலும் பால் முழுவதையும் குழந்தை குடித்து முடித்த பின்பே மறுபடி புட்டியை கழுவ தயாராகிறார்கள். 
இத்தகைய புட்டிப்பால் புகட்டலை என் உறவினர் மட்டும் தான் செய்தாரா? 

கண்டிப்பாக இல்லை...!

நம்மில் பெரும்பான்மையானோர் இதை தான் செய்துக் கொண்டிருக்கிறோம். 
அதிகம் படிக்காத, கிராம சூழ்நிலையில் வளர்ந்த என் நாத்தனாராவது பரவாயில்லை, இன்று படித்த, நகரத்து சூழ்நிலையில் வளர்ந்த அன்னையரும் கிட்டத்தட்ட இதை தான் செய்துக் கொண்டிருக்கின்றனர். 

சரி, இனி புட்டிப்பால் தயாரிக்கும் சரியான முறையை பார்க்கலாம். 

பால் புட்டி கழுவும் முறை:
 1. குழந்தைக்கான புட்டிப்பால் தயாரிக்கும் முன்பு கைகளை நன்றாக சுத்தம் செய்துக் கொள்ளவும். 
 2. குழந்தை குடித்து முடித்த புட்டியை (பாகங்கள் பிரித்து), அதிலிருக்கும் பால் முற்றிலும் நீங்கும் வரை தண்ணீரில் கழுவவும்.
 3. பின்னர் அவற்றை வெந்நீரில் போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். 
 4. பயன்படுத்தும் வரை புட்டியை அப்படியே வெந்நீரில் போட்டு மூடி வைக்கவும். 
புட்டிப்பால் தயாரிக்கும் முறை:
 1. தண்ணீரை ஐந்து நிமிடம் நன்றாக கொதிக்க விடவும்.
 2. உங்கள் குழந்தையின் தேவைக்கேற்ப கொடுக்கப்பட்ட அட்டவணையில் இருந்து அளவான தண்ணீரை தெரிந்துக் கொள்ளவும்.
 3. தண்ணீரை நன்றாக ஆற்றி, மிதமான சூட்டில் தேவையான அளவு பால் புட்டியில் விட்டுக்கொள்ளவும்.
 4. அட்டவணை பார்த்து, தண்ணீருக்கு தேவையான அளவு பால் பவுடரை புட்டியில் போடவும். 
 5. புட்டியை நன்றாக மூடி, பால் பவுடரையும், தண்ணீரையும் கலரும் படி குலுக்கவும். 
 6. உடனடியாக குழந்தைக்கு புகட்டவும். 
 7. அரைமணி நேரம் வரை அந்த பாலை பயன்படுத்தலாம்.

இதில் பலருக்கும் வரும் சந்தேகம்:
 1. பச்சை மாவை நன்றாக அவித்து தானே குழந்தைக்கு கொடுக்க வேண்டும்? இல்லையென்றால் குழந்தைக்கு ஜீரணம் ஆகாதே...!
 2. அரைமணி நேரம் தாண்டி ஏன் அந்த பாலை பயன்படுத்த கூடாது? காசு விரயம் ஆகுமே?
இதோ விளக்கம்:
 1. உங்கள் குழந்தை உணவு மிக மிக பாதுகாப்பாக சுத்தமான முறையில் செரிவூட்டப்பட்டே தயாரிக்கப்படுகிறது.
 2. குழந்தைக்கு தேவையான புரத சத்தும், விட்டமின் சத்துக்களும், ஏனைய தாதுக்களும் கலந்தே அது தயாரிக்கப் படுகிறது. 
 3. கொதிக்கும் வெந்நீரில் அதை ஆற்றினால் அதில் இருக்கும் அத்தனை ஊட்டச் சத்துக்களும் சூட்டில் அழிந்து போகின்றன. 
 4. எனவே அப்படி தயாரிக்கப்பட்ட புட்டி பால், சத்துக்கள் ஏதுமில்லாமல் வலுவிழந்து போகின்றது. 
 5. புட்டி பால் தயாரிக்கப்பட்ட அரைமணி நேரத்தில், பாக்டீரியாக்கள் அதில் வளர ஆரம்பிக்கின்றன. 
 6. பால் பவுடரில் இருக்கும் ஊட்ட சத்துக்கள் அவற்றுக்கு சிறந்த தீனியாகி, இந்த பாட்டீரியாக்கள் பல்கி பெருகுகின்றன. 
 7. இந்த பாக்டீரியாவினால் குழந்தையின் உடலுக்கு தீங்கு ஏற்படுகிறது (உதாரணம்: வயிற்றுப்போக்கு).
எனவே, குழந்தைக்கு புட்டிப் பால் புகட்டும் தாய்மார்கள் கண்டிப்பாக அவர்கள் பயன்படுத்தும் பால் பவுடர் அட்டை மேல் இருக்கும் விபரங்களை தெளிவாக படித்து அதன் படி நடந்துக்கொள்ள வேண்டும். 

எல்லாவற்றிக்கும் மேலாக தாய்ப்பால் இருக்க புட்டிபாலின் அவசியம் எதற்கு என்றும் சிந்திக்க வேண்டும். 


Saturday, 6 October 2012

மரியாதைக்குரிய ப்ரின்சிப்பாலும் அவர் மகளும்

சற்று ஓய்வாக இருக்கும் தருணங்களில் நாம் கடந்து வந்த பாதைகளின் நினைவுகள் நம் நினைவுக் குதிரையில் பயணிக்க தான் செய்கின்றன. அந்த நினைவுகளோடு பயணிக்கையில் எப்பொழுதுமே பல சுவாரசிய சம்பவங்கள் நம்மை கடந்தே செல்கின்றன. அவ்வாறு அவற்றை கடக்கும் பொழுது நமது இதழ்கள் சிறு புன்னகையை சிதற விடுவதை யாராலும் மறுக்க முடியாது. 

1995 - ம் வருடம். அப்பொழுது தான் பள்ளி வாழ்வு முடித்து கல்லூரி வாழ்வில் காலடி எடுத்து வைக்க வேண்டும். அப்பொழுது என் தந்தை கன்னியாகுமரி மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு யூனியன் தலைவராக இருந்த தருணம். 

எப்படியாவது இங்கிலீஷ் லிட்டிரேச்சர் படித்து, பின் பி.எல் படித்து ஒரு வக்கீலாகி விட வேண்டும் என்று குறிக்கோள் கொண்டிருந்த தருணம். என் தந்தை "நீ கூட்டுறவு துறையில் சிறந்த ஒரு வக்கீலாக வரலாம்" என்ற ஆசை வார்த்தைகள் கூறி என்னை கூட்டுறவு சார்ந்த பட்டயப் படிப்பான "டிப்ளமோ இன் கோஆப்பெரேடிவ் மானேஜ்மென்ட்டில் (D.Co-op) சேர்த்து விட்டார். 

அதுவரை வீட்டிலிருந்து பள்ளி, பள்ளியிலிருந்து வீடு என ஒரு கூட்டுப்புழு வாழ்க்கை வாழ்ந்த நான், கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து திருநெல்வேலி மாவட்டம் சென்றடைந்தேன்.

பனிரெண்டாம் வகுப்பு வரை மெட்ரிக்குலேசனில் படித்த எனக்கு அங்கு எல்லா பாடங்களும் தமிழில் இருந்தது கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் ஒரு மலைப்பை உருவாக்கி விட்டது. சம்மந்தமே இல்லாத அக்கவுண்டன்சியும் எக்கனாமிக்ஸ்சும் என்னை பார்த்து ஏளனமாய் சிரிப்பது போலவே தோன்றும் எனக்கு.

அத்தனை வேப்பம்பூ கசப்பான பாடங்கள் மத்தியில் எனக்கு பிடித்தது "மேனேஜ்மன்ட் லா" மட்டுமே. அதை மட்டுமே கொஞ்சம் சுவாரசியமாய் கற்றுக்கொண்டேன். ஒரு வருங்கால லாயருக்கு மிகவும் தேவையான சப்ஜெக்ட் அல்லவா...!

அப்பொழுது எங்களுக்கு "மேனேஜ்மன்ட் லா" எடுத்தது எங்கள் இன்ஸ்டிடியூஷன் ப்ரின்சிபால். எப்பொழுதாவது மட்டுமே வகுப்புக்கு வரும் அவர் எப்பொழுதும் எங்களிடம் கேள்விகள் கேட்டு பதிலை எதிர்பார்ப்பது வழக்கம். பதில் தெரியவில்லை என்றால் புத்தகம் பார்த்து பதிலளிக்கலாம். அப்படியாவது ஒரு கேள்விக்கான விடையை மாணவர்கள் தெரிந்து கொள்வார்கள் என்பது அவர் எண்ணம்.

அவருடைய அந்த நடைமுறை எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருந்தது. பின்னாளில் நானும் ஒரு கல்லூரி பேராசிரியையாக மாறிய தருணம் அவர் வழியையே என் மாணவர்களிடத்து பின்பற்ற துவங்கினேன்.

சரி, 1995-ம் வருடத்திற்கு திரும்புவோம். எங்கள் முதல்வர் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் பெரும்பாலும் சரியாக பதிலளித்து விடுகிற நான் அவர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் தெரியாமல் புக் திறந்து வாசித்து பதிலளித்தேன்.

அவரோ நான் உன்னை புக் பார்த்து பதில் சொல்ல சொல்லவில்லையே என கேட்க, எப்படியும் அதை தானே சொல்ல போகிறீர்கள் என்று நானும் பதில் சொல்ல, உன் பெயர் என்ன? ஊர் என்ன? அப்பா பெயர் என்ன? ப்ளஸ் டூ எங்கு படித்தாய் என அடுக்கடுக்காக கேள்விகளை அடுக்கி கொண்டே சென்றார்.

நானும் பெயர், ஊர், சொல்லி விட்டு அப்பா பெயர் ஸ்ரீதரன், படித்தது குட் ஷெப்பர்ட் மெட்ரிகுலேசன் பள்ளி என்றேன்.

அட, நீ தலைவரோட பொண்ணா என அவர் கேட்க, இல்லை, அவர் தான் என் அப்பா என்று நான் சொன்னதைக் கேட்டு அப்படியே உன் அப்பாவின் அதிகார தோரணை உன்னிடம் இருக்கிறது என்றவாறே சென்று விட்டார்.

மேலும் மூன்று நாள் கழித்து, சனி, ஞாயிறு விடுமுறை முன்னிட்டு சொந்த ஊரில் ஓய்வில் இருக்கும் போது ஒலித்த ஒரு போன் காலை எடுத்து காதில் பொருத்தி ஹெல்லோ என்றேன்.

எதிர் முனை: ஜீவா இருக்காளா?
நான்: நான் தான் பேசுறேன், நீங்க?

அவள் பெயரை கேட்டதும் அவள் என் பனிரெண்டாம் வகுப்பு சக மாணவி என்பதை புரிந்துக் கொண்டேன். அதிகம் பரிட்சயம் இல்லாத அவள் எனக்கு போன் பண்ணியதை கண்டு வியந்து கொண்டே, "என்ன விஷயம்" என வினவினேன்.

"இப்போ என்ன படிச்சுட்டு இருக்க?" அவளின் கேள்விக்கு பதிலளித்ததும், "உங்கள் ப்ரின்சிபால் சரியான முசுடாமே, தொனதொனனு கேள்வி கேட்டு சாகடிப்பாராமே" என்ற அவளின் கேள்விக்கு பதிலாக, அதெல்லாம் ஒன்றுமில்லை, அவர் நடத்தும் பாடம் எனக்கு பிடிக்கும்" என பொதுவாக பதிலளித்தேன்.

"சரி சரி, அவரை நான் ரொம்ப கேட்டேன்னு சொல்லு, ஏன்னா அவர் தான் என் அப்பா" என்றவாறே தொடர்பை துண்டித்து விட்டாள்.

அதன் பின், அவள் நம்பர் தெரியாததால் என்னால் அவளோடு பேச முடியாமலே போய் விட்டது. அவளை பற்றிய எந்த தகவலும் இன்று வரை எனக்கு கிடைக்கவே இல்லை. ஏனோ அவளை பற்றி அறிய ஆர்வமும் இல்லாமலே நாட்கள் வருடங்களாக மாறி, கரைந்து கொண்டே சென்று விட்டது.

அதன் பின், அந்த ஒரு வருட வாழ்க்கை என் நினைவுகளோடு மட்டுமே ஐக்கியமாகி போக, நானோ விலங்கியலோடும் பின் நுண்ணுயிரியலோடும் கலந்து போனேன். நுண்ணுயிரியல் துறை என்னை விடாப்பிடியாய் பிடித்துக் கொள்ள, கல்லூரி விரிவுரையாளராய் பின்பு அதே துறை தலைவராய் வாழ்க்கை சக்கரம் உருண்டு கொண்டே இருக்கிறது.

சில நிமிடங்களே நினைவில் நின்ற என் மரியாதைக்குரிய ப்ரின்சிப்பாலும் அவர் மகளும் அந்த நிமிட உணர்வுகளை மகிழ்ச்சியாய், ஒரு புன்னகையை சிதற விட்டு மறைகின்றனர்.

மற்றுமொரு நினைவுகளோடு மீண்டும் சந்திக்கிறேன்...