Pages

Friday 18 October 2013

வேண்டாமே விபரீதம்...!


இன்றைய காலகட்டத்தில், குடும்பம் என்றால் ஒரு தந்தை, ஒரு தாய், அவர்களின் குழந்தை என மூன்று பேர் என்று சொல்லும் அளவு மிகவும் சுருங்கி விட்டது. ஒரு குழந்தையை பெற்று வளர்த்து அவனை/ அவளை ஆளாக்கி அவர்கள் நல்ல நிலையில் உயர்வதை பார்த்து பூரித்து போவதற்குள் பெற்றோர் எத்தனையோ தடைகளை தாண்டி வர வேண்டி இருக்கிறது.

அந்த தடைகள் எளிதான தடைகளாக இருப்பதில்லை. நான் இங்கு கல்விமுறை பற்றி எதுவும் குறிப்பிட போவதாகவும் இல்லை. என்னுடைய இன்றைய அலசல் அவர்கள் ஆரோக்கியம் சம்மந்தப் பட்டது. அன்றைய காலக்கட்டங்களில் பெற்றோர் என்றால் அவர்களுக்கு கிட்டத்தட்ட ஆறில் இருந்து பனிரெண்டு குழந்தைகள் வரையோ அதற்கும் மேற்பட்டோ இருக்கும். என் தாத்தா பாட்டிக்கு பனிரெண்டு குழந்தைகள். எனவே ஒரு பயம் இல்லாமல் குழந்தைகளை அவர்கள் போக்கில் விட்டு பிடித்து வளர்க்க முடிந்தது. கொள்ளை நோய்களினாலும் இயற்கை சீற்றங்களாலும் பெரும்பான்மையான மக்கள் தொகை குறைக்கப்பட்டு கொண்டிருந்தாலும் மக்கள் பேரில்லாத வீடுகள் மிக குறைவாகவே இருக்கும்.


ஆனால் இன்றோ கொள்ளை நோய்களின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டு விட்டாலும் எமன் வேறு பல ரூபங்களின் கொத்துக்கொத்தாக உயிர்களை பறித்துக்கொண்டு தான் இருக்கிறான், வீட்டுக்கு ஓன்று அல்லது இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு அவர்களை வெளியே அனுப்பி விட்டு இங்கு பெற்றோர் வயிற்றில் நெருப்பை கட்டி வைத்த நிலையில் தவித்துக் கொண்டிருக்கின்றனர். பார்த்து பார்த்து வளர்த்த குழந்தையை எமனுக்கு வாரி கொடுக்க யாருக்கு தான் மனம் வரும்?

பூகம்பம், எரிமலை, நிலநடுக்கம், கடல் கொந்தளிப்பு, சூறாவளி என்று இயற்கை சீற்றங்களை தடுக்க முடியாது போனாலும் நம்மால் தடுக்க முடிந்த விபத்து உண்டு. அவை தான் சாலை விபத்துகள்.

ஆம், இங்கு காலை நேரங்களில் வீட்டை விட்டு வெளி வந்து சாலையை கொஞ்ச நேரம் உற்று நோக்குங்கள். அனைவரும் எதோ ஒரு பரபரப்பில் தான் விரைந்து கொண்டிருப்பார். அது பரவாயில்லை, மற்றவர் செல்லும் வழி தடங்களை தடுத்துக்கொண்டும், இடையில் புகுந்துக் கொண்டும் விரைந்து கொண்டிருப்பார்கள். அதிலும் வயது வந்த குழந்தைகள் மூன்று நான்கு பேர் ஒரே மோட்டார் வாகனத்தில் சர் சர் என்று பேருந்துகள் இடையிலும் மற்ற வாகனங்கள் இடையிலும் வலமும் இடமுமாக வளைந்தும் நெளிந்தும் சென்றுக் கொண்டிருப்பார்கள். ஒரு நொடி அவர்கள் கணிப்பில் தவறு நேர்ந்து விட்டால் மொத்தமாய் பறிகுடுக்கவும் நேர்ந்து விடுகிறது.

நான் பணிபுரியும் கல்லூரியில் இணைந்து ஏழு வருடங்கள் ஆகிறது. இந்த ஏழு வருடங்களில் எத்தனை எத்தனையோ விதமான விபத்துக்களால் உயிரிழந்த மாணவர்கள் ஏராளம். அதிலும் மிக கோரமான விபத்து இரண்டு வருடங்களுக்கு முன் எங்கள் கல்லூரி வரும் வழியில் நடந்தது. அது காலை எட்டே முக்கால் மணி. கல்லூரிக்கு வரும் அனைவரும் வேக வேகமாக கல்லூரி நோக்கி விரையும் நேரம். கல்லூரி வகுப்பு செல்ல பிடிக்காமல் மாணவன் ஒருவன் அவன் நண்பனோடு கல்லூரி எதிர் சாலையில் விரைந்து கொண்டிருந்தான். அது மிகவும் உயரமான பகுதி. கிட்டத்தட்ட ஒரு மலை மேல் ஏறுவதை போல் தான் ஏற வேண்டும். அதில் மிகவும் கஷ்டப்பட்டு ஏறிக் கொண்டிருந்தது மணல் லாரி ஓன்று. மாணவர்களோ தங்களை ஆசிரியர்கள் யாரும் பார்த்து விட கூடாது என வேகமாக மேலேறிக் கொண்டிருந்தனர். திடீரென மணல் லாரி அருகில் வந்ததும் எதிரே வந்த வாகனத்தில் மோதாமல் இருக்க திடீரென வண்டியை திருப்ப, வண்டி நிலைதடுமாறி மணல் லாரியின் சக்கரங்கள் அடியில் சிக்கியது. அதே வேகத்தில் மணல் லாரி இருவரின் தலை மேல் ஏற, அருகில் சென்று விரைந்து கொண்டிருந்த அத்தனை வாகனங்களிலும் இவர்களின் சதை துணுக்குகள். எத்தகைய கோரம் அது. முகங்கள் சிதைக்கப்பட்ட நிலையில் என்று சொல்வதை விட வெறும் சதைகூழ் கண்டு அன்று பதறி துடித்தனர் பலர். அவர்களின் பெற்றோர் நிலைமையை யோசித்துப் பாருங்கள். இதற்காகவா தங்கள் தூக்கம் மறந்து, அன்பை பொழிந்து உழைப்பை கொட்டி இவர்களை வளர்த்தார்கள்?

கல்லூரிக்கு நான் எனது காரில் தான் பயணம் செய்வேன். எங்கள் கல்லூரி வளாகம் எனபது பல்வேறு வகை கல்லூரிகளை உள்ளடக்கியது. ஒரே இடத்தில், கலை மற்றும் இலக்கியம், ஒரு இஞ்சினியரிங், இரண்டு பாலிடெக்னிக், ஒரு ஆசிரியர் பயிற்சி பள்ளியென அத்தனையும் உள்ளடக்கியது. இதில் இரண்டு மாணவர்கள் ஒன்றாக பயணம் செய்தனர். இருசக்கர வாகனத்தில் வேகமாக செல்லும் அவர்கள் எப்பொழுது கார், பேருந்து, பைக் என்று எந்த வாகனம் முன் சென்றுக் கொண்டிருந்தாலும் அவர்களின் வலப்புறமாக சென்று திடீரென குறுக்கே பாய்ந்து இடப்புறம் செல்பவர்கள். அவர்களால் ரோட்டில் செல்லும் அத்தனை வாகன ஒட்டிகளுக்கும் சிரமம் தான். அவர்களை எச்சரிக்க நினைத்தாலும் கண்ணிமைக்கும் நேரத்துக்குள் பறந்து விடுவர். பின் அவர்கள் கல்லூரியில் முறையிடலாம் என்று நினைத்த போது ஏற்கனவே அவர்கள் கல்லூரி நிர்வாகத்தினரால் கண்டிக்கப்பட்டிருந்தனர். இந்த இளம் ரெத்தங்களுக்கு ஏன் தெரிவதில்லை, தங்கள் உயிரின் அருமையும், பெற்றவர்களின் பதபதைப்பும்?

மற்றுமொரு சம்பவம். சமீபத்தில் சில அரசியல்வாதிகள் தொடர்ந்து கொலை செய்யப்படுவதால் தமிழகமெங்கும் பந்த் நடைபெற்றது. அன்று கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும், விடுமுறை இல்லை என்றும் பல்வேறு குழப்ப நிலை. பேருந்துகள் வழக்கமாக ஓடும் என்று அறிவிக்கபட்டிருந்ததால் சில கல்லூரிகள் மாணவர்களை அரசு பேருந்தில் கல்லூரி வருமாறு வலியுறுத்தி இருந்தனர். எங்கள் கல்லூரியிலும் எங்களை வர சொல்லி விட்டதால் நான் காரில் கொஞ்சம் தாமதமாகவே கிளம்பினேன். வரும் வழியில் தான் பார்த்தேன், ஒரு இளைஞன், தலை நசுங்கி அங்கேயே மாண்டு கிடந்தான். வழக்கமாக கல்லூரி பஸ்ஸில் செல்லும் தங்கையை அன்று கட்டாயத்தின் பெயரால் பைக்கில் விட சென்றவன் ஒரு மினி பஸ் மீது மோதி கீழே விழுந்து மற்றொரு மினி பஸ் அவன் தலையில் ஏறி இருக்கிறது. நேரில் பார்த்தவர்கள் எல்லாம், அவன் வேகமாக வந்தான் என்றே சொல்லிக் கொண்டிருந்தனர். என்ன சொல்லி என்ன பலன்? போன உயிரை திரும்ப பெற முடியுமா?

தினமும் வேகமாக கண்மண் தெரியாமல் விரைந்து கொண்டிருக்கும் சின்னஞ்சிறுசுகளை பார்க்கும் போதெல்லாம் என் மனம் பதைக்கிறது. உயிரின் மதிப்பே தெரியாமல் எப்படி இவர்கள் இவ்வாறு தற்கொலை விபத்துகளை வரவேற்றுக் கொள்கின்றனர்?

விபத்துகள் தவிர்க்கமுடியாதது அல்லவே. நாம் எச்சரிக்கையாக இருந்தால் பாதியளவு விபத்துக்களை கண்டிப்பாக தடுத்து விடலாம். இந்த கட்டுரையை எழுதி கொண்டிருக்கும் சமயம், குடி போதையில் மூன்று இளைஞர்கள் என் வீட்டு வாசலை வேகமாக கடக்கிறார்கள். ஒருவன் மயங்கிய நிலையிலும், மற்றொருவன் பாதி மயக்க நிலையிலும், ஓட்டுபவன் தடுமாறி வண்டி ஓட்டியும் செல்கின்றனர்.

இளைஞர்கள் கொஞ்சமாவது சிந்திக்கலாம். பெற்றோரின் நிலைமைகளை கொஞ்சமாவது புரிந்து கொள்ள முயற்சிக்கலாமே...


10 comments:

  1. சிறு வயதில் அவர்கள் செய்யும் சாகசங்களை ஊக்குவிக்கும் பெற்றோர்கள் (முக்கியமாக தாய்மார்கள்) கூட மாற வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் சகோ, சாகசங்கள் அறிவு சார்ந்து இருக்க வேண்டும் என்பதை பெற்றோர் கணக்கில் கொள்ள வேண்டும். ஆபத்தான விளையாட்டுகளில் அவர்கள் விளையாடுவதென்பது வேறு, அடுத்தவர்களின் உயிர்களோடு விளையாடுவதென்பது வேறு

      Delete
  2. நாம் எச்சரிக்கையாக இருந்தால் பாதியளவு விபத்துக்களை கண்டிப்பாக தடுத்து விடலாம்.//உண்மைதான்

    ReplyDelete
    Replies
    1. கருத்து பதிவுக்கு நன்றி சகோ

      Delete
  3. வணக்கம்
    நல்ல சமுக விழிப்புணர்வுப் பதிவாக அமைந்துள்ளது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்படன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ, உங்கள் கருத்துக்கு

      Delete
  4. இதெல்லாம் கேட்டு யாராவது திருந்தினா நல்லது. நானும் நிறைய பேர பாத்துட்டேன்... சில நேரம் அவங்கள நினச்சு பரிதாபமா கூட இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. ஆமா காயு, எப்படி இவர்கள் எல்லாம் அடுத்த நொடி நிகழ்வதை அறியாமல் வேகமாக செல்கின்றனர் என்று நானும் வியப்பதுண்டு

      Delete
  5. அந்த வயது சாகசங்களை விரும்பும் வயது..அவர்களின் அதிகப்படியான எனர்ஜியை நல்ல விஷயங்களை நோக்கி திருப்பும் வாய்ப்பை பெற்றவர்கள் தான் ஏற்படுத்த வேண்டும்.. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. சின்னஞ்சிறு பள்ளி சிறார்கள் அவர்கள் ரிக்க்ஷக்களில் செல்லும்போது மிகவும்
    கவலைப்படுவேன் .

    ReplyDelete