Pages

Thursday, 24 December 2015

பசங்க - 1
இப்பவெல்லாம் பசங்கள கூட்டிகிட்டு அடிக்கடி ஊர் சுத்துறது. அப்படி நாலு மாசத்துக்கு முன்னாடி சுத்தினப்ப விளையாட்டா ஒரு ஊர்ல உள்ள பசங்க, பாட்டின்னு அவங்க அனுமதியோட போட்டோ எடுத்தோம்.

திடீர்னு இன்னிக்கு அந்த போட்டோஸ்ல நல்லதா தேர்ந்தெடுத்து பிரிண்ட் போட்டு அவங்களுக்கு குடுத்தா என்னன்னு எண்ணம் தோணிச்சு.

அதுவும் காலைலயே பையன் பசங்க-2 படத்துக்கு போகணும்னு சொல்லியிருந்தான். அவன் பேச்சை மீற முடியாம, வரமாட்டேன்னு அடம்பிடிச்ச பொண்ணையும் தாஜா பண்ணி, ரிலீஸ் ஆன முதல் நாளுமா படத்துக்கு போயிட்டு, அப்படியே போட்டோஸ் எல்லாம் ஒரு ஸ்டுடியோ போய் பிரிண்ட் எடுத்துட்டு அந்த ஊருக்கு போனோம்.

முதல்ல ஒரு இடத்துல போய் நின்னுட்டு யார் கிட்ட குடுக்கன்னு தெரியாம முழிச்சோம். அங்க கொஞ்சம் கும்பலா பெண்கள் எல்லாம் உக்காந்து பேசிட்டு இருந்தாங்க.

பொண்ணை கார் விட்டு இறங்கிப் போய் விசாரிக்க சொன்னேன். போட்டோவை காட்டி விசாரிச்சதும் அத்தனை பேருக்கும் ரொம்ப சந்தோசம். இந்த பையன் விருந்துக்கு வந்த பையன், அவன் கிட்ட அப்புறமா குடுக்குறோம்னு ஒரு போட்டோவ காட்டி சொன்னாங்க. இன்னொரு பொண்ணு வீட்ல ஆள் இல்ல, நாங்க குடுத்துடுறோம்னு சொல்லிட்டே, ஒரு பாட்டி போட்டோவ பாத்து, அது பக்கத்து வீட்டு பாட்டி, அதுவும் நாங்க குடுத்துடுறோம்னு சொல்லிட்டே, உங்களுக்கு எந்த ஊருன்னு விசாரிச்சாங்க.


இங்க தான் பக்கத்துலன்னு சொன்னேன். வீட்டுக்கு வாங்க. கொஞ்ச நேரம் பேசிட்டு போகலாம். எங்களையும் போட்டோ எடுங்கன்னு கூப்ட்டு போட்டோ எடுக்க வச்சாங்க. அங்க இருந்து கிளம்பி அடுத்த ஊருக்கு போனோம்.


அங்க இருந்தது நாலு குட்டி பசங்க. நாங்க போனதுமே வாங்கன்னு வரவேற்றாங்க. அங்க இருந்த பாட்டி, காப்பி குடிங்கமான்னு கட்டாயப்படுத்தி காப்பி குடிக்க வச்சாங்க. பசங்க நாலு பேருக்கும் அவங்க போட்டோவ பாத்து ரொம்ப சந்தோசம்.

போட்டோ பாருங்க, போட்டோ பாருங்கன்னு எல்லார்கிட்டயும் காமிச்சு சந்தோசப்பட்டாங்க.

பொண்ணு பாத்துட்டு, அப்படினா, இனி இவங்க எல்லாரும் நமக்கு பிரெண்ட்ஸ்சா அம்மான்னு கேட்டா. ஆமாடா, நாம மத்தவங்கள சந்தோசப்படுத்தினா, அவங்க நம்மள சந்தோசப்படுத்துவாங்க, இவ்வளவு தான் வாழ்க்கையோட ரகசியம்னு சொல்லிட்டே காரை வீட்டுக்கு திருப்பினேன்.

ஒரு சின்ன புன்னகைல நம்மள சுத்தி இருக்குற உலகம் அழகாகிடுது.

Monday, 19 January 2015

வற்றா நதிநூல் பெயர்: வற்றா நதி

நூல் வகை: சிறுகதை தொகுப்பு

ஆசிரியர்: கார்த்திக் புகழேந்தி

பதிப்பகம்: அகநாழிகை

விலை: 120 ரூபாய்
வற்றா நதிக்குள் மூழ்குவதற்கு முன்

இந்த புத்தகத்தில் ஆசிரியரை கவிதைகள் வாயிலாக தான் முதலில் அறிந்திருந்தேன். இவர் எழுத்துக்களை பார்த்து தமிழை இத்தனை காதலிக்கும் இளைய தலைமுறையினர் இப்பொழுதும் உள்ளனரா என்று வியந்தும் இருந்திருக்கிறேன். காரணம் ஆசிரியரின் வயது. இப்பொழுது தான் கால் நூற்றாண்டை எட்டிப் பார்த்திருக்கிறாராம். இலக்கிய கவிதையாகட்டும், நடைமுறை கவிதைகளாகட்டும், தன் சொல்லாடல் திறமையால் அத்தனை வசமாய் கட்டிப் போட்டு விடும் வித்தைக்காரர். இவர் கவிதை புத்தகம் வெளியிடப் போவதாக அறிந்ததுமே புற்றீசல் போல படையெடுக்கும் புத்தகங்கள் நடுவில் இவர் காணாமல் போய் விடக் கூடாது என்று ஒரு கணம் மூச்சிழுத்து வேண்டியுமிருக்கிறேன். காரணம் கவிதை குவியல்களுக்கு மத்தியில் வைக்கப் பட வேண்டிய மகுடம் அவரது கவிதைகள். இவரை நேரில் சந்தித்தப் போது ஆச்சர்யத்தில் மூழ்கிப் போனேன். இத்தனை சிறிய வயது மட்டுமில்லை, உருவமும் கூட தான். ஆனால் கவிதைகளை பற்றியோ அவரது எழுத்துக்களை பற்றியோ பேசும் வாய்ப்பு அந்த மூன்று மணி நேரங்களில் வாய்க்கவில்லை.அவரது உருவம் பற்றி இங்கு நான் குறிப்பிட்டதற்கு ஒரு காரணம் இருக்கிறது. மண் சாலைகளில் புழுதி பறக்க கிட்டிப்புள் விளையாடும் சிறுவனை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? ஏலேலோ பாடிக்கொண்டே மண் கலசங்களை தூக்கி செல்லும் பெண்கள் இடையில் டுர்ர்ர்ர்ரென ஆடு விரட்டி செல்லும் சிறுவனையாவது பாத்திருக்கிறீர்களா? எதுவுமில்லை, கிராமத்தில் பிறந்து நீங்கள் உங்களை கண்ணாடியில் பார்த்திருக்கிறீர்களா? கார்த்திக் புகழேந்தி இத்தனையுமாய் இருப்பவர். இப்படி இருப்பதால் தான் என்னவோ கிராமிய கதைகளில் அவர் வாழ்கிறாரோ இல்லையோ நம்மை அவர் உருவத்துக்கு மாற்றி விட்டு ஒரு கிரிகெட்டோ இல்லை கிட்டிபுல்லோ விளையாட வைத்து விடுகிறார்.வற்றா நதி – ஒரு எதிர் நீச்சல்

மொத்தம் இருபத்தியிரண்டு கதைகள். இந்த கதைகளை பற்றி விமர்சிக்கும் அளவுக்கு எனக்கு கண்டிப்பாக அருகதையில்லை. ஆனால் ஒவ்வொரு கதைக்குள்ளும் ஒவ்வொரு கதாப்பாத்திரம் நம்மை ஆட்சி செய்ய ஆரம்பித்து விடுகிறது. அந்த கதாபாத்திரங்கள் முழுமையாய் நம்மை ஆட்கொண்டு மோடி மஸ்தான் வித்தை போல நம்மையே அங்கே வாழ வைத்து விடுகின்றன.


பச்சை, பிரிவோம் சிந்திப்போம், கிறிஸ்டி ஒரு டைரி குறிப்பு, ஜெனி- இந்த நான்கு கதைகளும் நம்மை இளம்பிராயத்திற்கு இழுத்து செல்லும். இளமை துடுக்குகளிலும் காதல் பார்வைகளிலும் கார்த்திக் புகழேந்தி என்ற சிறுவன் அத்தனை சில்மிஷம் செய்கிறான். கோபியர் மத்தியில் இருக்கும் ஒரு கண்ணனை நீங்கள் ரசிக்க வேண்டுமா, இல்லை கோபிகைகளை கண்ணார காண வேண்டுமா, இந்த கதைக்குள் கொஞ்சம் மூழ்கி விட்டு வாருங்கள். கரையேறுவது கடினம்.


அப்பாவும் தென்னை மரங்களும்நகர வாழ்க்கையில் மூழ்கி போய் விட்ட நாம் இதை படித்து விட்டு ஒரு தடவையாவது மிச்சமிருக்கும் அப்பாவின் வேஷ்டியையாவது முகர்ந்து பார்ப்போம். அவர் கட்டி சென்ற வீடு சிதைக்கப்பட்டிருந்தால் ஒரே ஒரு செங்கலையாவது தொட்டு விட வேண்டுமென்று பதறிப் துடிப்போம். அவர் வாழ்ந்த புலன்களை நீங்கள் கண்டிப்பாக சுவாசித்து விட்டு வரலாம், உத்தரவாதம் நிச்சயம்.


குடுப்பனை, பொங்கலோ பொங்கல், சுற்றியலையும் காலம், பங்குனி உத்திரம், கிராமிய சிறகுகள், சொத்து, தீபாவளி, நிலைகதவு – நகர மனிதர்களுக்குள் ஒரு கிராமத்தானை பதித்து விட்டு போய் விடும் ஆற்றல் வாய்ந்த கதைகள். நாமும் இப்படி தானே, இப்படி ஏங்கினோம் அல்லவா, அடடா, இப்படியே தான் அப்படியான மனத்துள்ளல்கள் நமக்குள் வருவதை தடுத்து விடவே முடியாது.


அரைக்கிலோ புண்ணியம், 169 கொலைகள் நாம் பார்த்த, பார்க்கும், பார்க்கப்போகும் மனிதர்களை பற்றிய கண்ணோட்டம் இந்த கதையை படித்தப்பின் கண்டிப்பாக மாறிப்போகும். ஒரு வித குற்றவுணர்ச்சியை நமக்குள் தோற்றுவித்த புண்ணியத்தை அடைந்து விட்டு அடுத்த கதைக்கு தாவி விடுகிறார் இந்த தெருவோர நடைபயணி.. மன்னிக்க, சிறுவனாக துடிக்கும் இந்த பைலட்.


சிவந்திபட்டி கொலை வழக்கு, பற்றியெரியும் உலை – ஒரு கணம் அல்ல, அரைமணி நேரம் அசையாமல் உறைய வைக்கும் உயிர்ப்பு கொண்டவை. இவற்றை தப்பி தவறி படித்து விட்டால் மனதில் ஒரு பெரிய பாராங்கல்லை கொண்டு வந்து வைத்து விடுகிறார் இந்த எமகாதகன். யதார்த்தம் புரிபட்டு போகும்போது சமூகம் மீதான கோபம் தன்னிரக்கமாக மாறுவதை தவிர்க்க முடிவதேயில்லை.


காற்றிலிடைத் தூறலாக, வணக்கதிற்குறிய - இருவேறான எண்ணங்கள், எல்லோரையும் ஏதோ சூழ்நிலையில் இப்படி வாழ ஆசைப்பட வைக்கும். தன்னை பற்றிய சுய அலசலாகட்டும், வருங்கால மாமனாரிடத்து அறிமுகப்படுத்திகொள்வதாகட்டும், இப்படி ஒருவனை தான் ஒவ்வொரு பெண்ணும், பெண்ணை பெற்ற தகப்பனும் தேடிக்கொண்டிருப்பார்கள். முக்கியமாக பெண்ணைப் பெற்றவர்கள் கவனிக்க.


உதிர்ந்து விழும் அஸ்திவாரங்கள், லைட்ஸ் ஆப் – இளமை துள்ளலோடு சுற்றி திரிந்த கதாநாயகன் இங்கு திடீரென முதுமையடைந்து தன் பால்யங்களை கடந்து போகிறார். மனைவியின் பிரிவாகட்டும், மகனின் பிரிவாகட்டும், இரு கதைகளும் இருவேறு நடைகள் என்றாலும் ஒரே மாதிரியான தாக்கத்தில் மனதை உறைய வைத்து விடுகின்றன. இந்த எழுத்தாளர் மிக வேகமாக அறுபதுகளை தொட்டு விட்டு நினைவுகளோடு உறைந்து நம்மையும் உறைய வைத்து விடுகிறார் இங்கே.


இறுதியாக டெசி கதை அத்தனை விதமான அவதாரங்களும் எடுத்து விட்டு இறுதியாக பத்து வயது சிறுவனாக பேயை பார்த்து உறைந்து நிற்கிறார் கார்த்திக் புகழேந்தி.


அடுத்த புத்தகத்தினை மீண்டும் குழந்தையாக மாறி, வாழ்ந்து நமக்கு சமர்பிப்பார் போல... காத்திருப்போம்.