Pages

Saturday 3 August 2013

நான் ஒரு சராசரி பெண்..

"இவள் என் ஆண் பிள்ளை" என்று தான் அறிமுகப்படுத்துவார் என் தந்தை தன் நண்பர்களிடத்து. யாராவது வீட்டுக்கு தேடி வந்தால் கதவின் பின் மறையும் அம்மாவின் முந்தானையின் பின்னே ஒளிவான் என் தம்பி. நானோ அப்பாவுக்கு சமமாய் அவர் அருகில் கம்பீரமாக அமர்ந்திருப்பேன்.

ஊரில் பண்ணையார் குடும்பம் என்று எங்கள் குடும்பத்தை எல்லோரும் சொன்னாலும் அந்த பண்ணையாருக்குரிய மிடுக்கு என் பெரியப்பாவிடம் தான் பார்த்திருக்கிறேன். "எலேய்..." என்று அவர் ஒரு குரல் கொடுத்தால் ஊரில் உள்ள அத்தனை வயசு பையன்களும் கை கட்டி நிற்பர். எல்லோருக்கும் அவர் என்றால் மரியாதை. அவர் பேச்சுக்கு எதிர் பேச்சு இல்லை. சிறு குழந்தைகள் ஏதாவது வம்பு பண்ணினால் இவர் பெயரை சொல்லி தான் அடக்கி வைப்பார்கள். என்னிடத்தில் இவர் பெயரை சொன்னாலோ, அவர் தானே, என்னோட மூத்தப்பா தானே, எனக்கென்ன பயம் என்று சாதாரணமாக சொல்வதோடு விடாமல் அவரை எங்கு பார்த்தாலும் மடியில் சென்று அமர்ந்து விடுவேன். அவரும் "என் பொண்ணுலே" என்றே அனைவரிடமும் சொல்வார்.



எங்கு சென்றாலும் அன்பும் மரியாதையும். சில நேரங்களில் எனக்கு கிடைக்கும் அன்பும் மரியாதையும் அப்பாவை சார்ந்ததாகவே தோன்றும் எனக்கு. அதனாலேயே நான் இன்னார் மகள் என்று சொல்லப்படுவதை வெறுப்பேன். எனக்கென தனித்துவம் எப்பொழுதும் வேண்டுமென்ற எண்ணம், என்னை மற்றவர்களிடத்து இருந்து வேறுபடுத்தி காட்டிக்கொண்டே இருக்கும்.

பள்ளியாகட்டும், கல்லூரியாகட்டும், கட்டுரை, கவிதை, கதை என்று எல்லா போட்டிகளிலும் பரிசு வாங்கி விடுவேன். ஓரளவு நன்றாக ஓவியம் வரைவேன், கைவினை பொருட்கள் செய்வேன். எதையும் முறையாக படித்ததில்லை என்றாலும் அதில் ஒரு நேர்த்தியை கடைபிடிப்பேன்.

என்னை சுற்றி பொருட்கள் இறைந்து கிடக்கும். அப்பொழுது அம்மா, "அவள் ஒரு செருப்பை பார்த்தால் கூட கலைநயத்தோடு தான் பார்ப்பாள்" என்று நண்பர்களிடத்து பெருமையோடு சொல்வதை கேட்டு தலை நிமிர்ந்து நின்றிருக்கிறேன். இப்பொழுது அதே அம்மாவிடம் இருந்து திட்டு வாங்கி கொண்டிருக்கிறேன் என்பது தனிக் கதை.

எனக்கு பலரை தெரியாது போனாலும் பலருக்கும் நான் தெரிந்தவளாக இருந்தேன்.

தோழி ஒருத்தியின் உதவியால் நாகர்கோவில் ரேடியோ ஸ்டேசனில் இளைஞர் பாரதம் நிகழ்ச்சிகளை மூன்று மாதத்திற்கு ஒரு முறை சிறு நாடகம், சிறுகதை, உரையாடல், கட்டுரை வழி நானே எழுதி, தொகுத்து தோழிகளோடு சேர்ந்து பேசியும் இருக்கிறேன். எனக்கு வரும் நேயர் கடிதங்களை பார்த்து ஒரு பெருமிதம் என்றால், "நீங்கள் தான் ஜீவாவா, நான் உங்கள் தீவிர ரசிகை" என்று என்னை அடையாளம் கண்டு ஓடி வந்து கட்டிக் கொண்ட சக கல்லூரி மாணவியை கண்ட போது தலைகால் புரியவில்லை எனக்கு.

சிறு வயது முதல் என் சுற்றமும் நட்பும் என் குறையை சுட்டி காட்டுவதே இல்லை. எல்லோரும் என் நிறைகளையே மிகவும் சிலாகித்திருந்தனர். அதுதான் என்னை தன்னம்பிக்கையோடு நிமிர்ந்து நிற்க உதவியது. பல நேரங்களிலும் தன்னம்பிக்கைக்கும் தைரியத்திற்கும் என்னையே உதாரணமாக சுட்டிக் காட்டுவர்.

நண்பர்கள் புடைசூழ வலம் வந்தே பழக்கம் அதிகம் எனக்கு. கல்லூரியில் ஆரம்பிக்கும் எங்கள் அரட்டைகள், சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் யாராவது ஒருவர் மொட்டை மாடியில் தொடரும். பெரும்பான்மையான நாட்கள் எங்கள் வீட்டு தண்ணீர் தொட்டியின் மேல் ஏறி அமர்ந்துக் கொண்டு அரட்டையடித்துக் கொண்டிருப்போம். என் தந்தையும் வயது மறந்து அவர்களோடு பேசி கொண்டிருப்பார். அம்மாவோ அவர்களுக்கு பிடித்தவற்றை சமைத்துக் கொடுத்து இன்னும் என்ன தேவையென கவனித்துக் கொண்டிருப்பார்.

எப்பொழுதும் மனம் மனதிற்கு பிடித்தவைகளையே அசை போடும். வாய் விட்டு மனதிற்கு பிடித்த பாடலை பாடிக்கொண்டே இருப்பேன். என் குரல் இனிமையாக இருக்கிறது என்றே அனைவரும் சொல்லியிருக்கின்றனர். என்னை பாடச்சொல்லி சுற்றி இருந்து ரசித்த நண்பர்களும் உண்டு. திருமணம் ஆன புதிதில் அதே மாதிரி நான் பாட ஆரம்பித்தால் "கழுதை வருகிறது, வாயை திறக்காதே" என்று முதல் அடி கிடைத்தது.

மத மதவென எப்பொழுதும் பொங்கிய பாலை போலவே உற்சாகமாக இருக்கும் என் மனம் வடிய ஆரம்பித்தது அப்பொழுது தான் என்றே நினைக்க தோன்றுகிறது.

எவ்வளவோ ஆசைகளும் கனவுகளும் கொண்ட நான் திருமணம் என்ற ஒன்றை பற்றி சிந்தித்ததே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். எனக்கு வர வேண்டியவர் இப்படி இப்படி இருக்க வேண்டும் என்ற கற்பனைகள் எதுவுமே இருந்ததில்லை என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்.

திருமணம் எனக்கு அப்படியே ஒரு தலைகீழ் சமூகத்தை எனக்கு அடையாளப் படுத்தியது. பொறுப்பே இல்லாமல் சுற்றுகிறாள் என்ற அடைமொழி கணவர் வழி கிடைத்தது கூட சகித்துக் கொள்ளலாம், என்னை எப்பொழுதும் கொண்டாடிய தந்தை கூட என்னை கட்டுபடுத்த துவங்கி விட்டிருந்தார். என் வாழ்க்கை மேலான பயம் அனைவரையும் சூழ்ந்து கொண்டது. அந்த பயத்தினாலேயே நான் என்னை, என் தேடல்களை இழக்க ஆரம்பித்திருந்தேன்.

யதார்த்தம் என்னவென்று புரிய ஆரம்பித்த பிறகு மற்றவர்களுக்கு சிரமம் என்று என்னை நானே ஒடுக்கி கொள்ள ஆரம்பித்து விட்டேன்.

என்னை சுற்றி இருக்கும் உறவு கூட்டமாகட்டும், நட்பு வட்டமாகட்டும் எல்லோருமே இப்பொழுது எங்கோ வெகு தொலைவு போய் விட்டனர்.

வருடங்கள் பத்து கடந்து விட்ட சூழ்நிலையில் எதிர்பார்ப்புகள், ஏமாற்றம், துரோகங்கள், பொருளாதார தடுமாற்றங்கள் என பலவகை அனுபவங்களை மட்டுமே துணையாய் கொண்டு இன்று நானும் ஒரு சராசரி பெண்ணாகி வாழ்க்கை போக்கில் நானும் போய் கொண்டிருக்கிறேன்.

No comments:

Post a Comment