Pages

Saturday, 10 November 2012

வாழ்வியல் ரகசியங்கள்


சமீபத்தில் எனக்கு நண்பர் ஒரு கதையை ஈ.மெயில் வழி அனுப்பி வைத்திருந்தார். கதையின் கரு என்னை மிகவும் பாதித்து விட்டதாலும் கதையின் நீளம் அதிகம் என்பதாலும் அதை சுருக்கி தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டுமென்று கருதி கொண்டேன். இதோ அந்த கதை உங்கள் பார்வைக்கு............

வாழ்வியல் ரகசியங்கள்:

அன்று இரவு என் மனைவி உணவு பரிமாறி கொண்டிருக்கும் பொழுது மெதுவாக அவள் கைப்பற்றி எனக்கு அவளிடமிருந்து விவாகரத்து வேண்டும் என்பதை தெரியப்படுத்தினேன். அந்த இரவு அவள் மவுனமாக அழுதுகொண்டே எங்கள் திருமணத்திற்கு என்ன ஆயிற்று என்று விடை தேடி கொண்டிருந்தாள். தன் வாழ்நாளின் பத்து வருடங்களை என்னுடன் கழித்தவள் இப்பொழுது எனக்கு அன்னியமாகி போனாள். என்னால் வீணாய் கடந்து போன அவள் வாழ்க்கைக்காக நான் பரிதாபம் மட்டுமே பட முடிந்தது, காரணம் நான் ஜேன்ஐ உயிரினும் மேலாக காதலிக்கிறேன்.

காலையில் என் மனைவி தனது விவாகரத்து நிபந்தனைகளை சமர்ப்பித்தாள். அவளுக்கு என்னிடத்தில் எதுவும் தேவையில்லை ஆனால் விவாகரத்திற்கு ஒரு மாத கால அவகாசம் வேண்டும், மேலும் எங்கள் திருமணத்தின் போது நான் அவளை தூக்கிக்கொண்டு மணவறையை விட்டு வெளியே வந்தது போல் இந்த ஒரு மாதமும் அவளை நான் படுக்கையறையிலிருந்து வாசல் வரை தினமும் தூக்கிக் கொண்டு வரவேண்டும். நாங்கள் கழிக்கப் போகும் மீதி நாட்களை அமைதியாக செலவிட வேண்டியிருந்ததால் அவள் அர்த்தமில்லா கோரிக்கையை ஏற்றுக்கொண்டேன்.

என் விவாகரத்து உறுதியாய் வெளிப்பட்ட பிறகு முதல் நாள் அவளை நான் சுமந்த போது இருவருமே அசவுக்கியமாய் உணர்ந்தோம். ஆனால் எங்களை பின்தொடர்ந்து வந்த மகனோ கைத்தட்டியப்படி அப்பா அம்மாவை தன் கைகளில் சுமக்கிறார் என்று மகிழ்ந்தான். இது எனக்கு சற்று மன வலியை கொடுத்தது.

இரண்டாம் நாள் இருவருக்கும் சற்று சவுகரியமாக இருந்தது. அவள் என் மார்பில் சாய்ந்து கொண்ட போது அவள் உடையின் வாசம் என்னை தாக்கியது. இவளை நான் பலநாள் பத்திரமாக பார்க்கவில்லை என்ற எண்ணம் எழுந்தது. இவள் தன் இளமையை தொலைத்து விட்டிருக்கிறாள். அவள் முகத்தில் சுருக்கங்கள் விழ ஆரம்பித்து விட்டன. முடிகள் நரைத்து விட்டன. எங்கள் திருமணம் அவள் மேல் ஒரு பெரும்சுமையை ஏற்றி வைத்து விட்டது. ஒரு நிமிடம், நான் இவளுக்காக என்ன செய்து விட்டேன் என்று எண்ணிக்கொண்டேன்.

நான்காம் நாள், எங்களுக்குள் நெருக்கம் மீண்டும் மலர்வதை உணர்ந்தேன். இந்த பெண்மணி தன் பத்து வருட வாழ்க்கையை எனக்காக செலவிட்டிருக்கிறாள். ஐந்து மற்றும் ஆறாம் நாட்களில் எங்கள் மேலும் நெருக்கம் அதிகமாவதை அறிந்தேன். இப்பொழுது அவளை சுமப்பது சுலபமாயிற்று. ஒரு மாதம் சென்றதே தெரியவில்லை.

கடைசி நாளன்று அவளை தூக்கி கொண்டு ஒரு அடி கூட என்னால் நகர முடியவில்லை. அந்நேரத்தில் உள்ளே வந்த எங்கள் மகன், தந்தையே நீங்கள் அம்மாவை சுமக்கும் நேரம் வந்து விட்டது என்றான். அவனை பொருத்தவரை அவன் தந்தை அவன் தாயை தூக்கி சுமப்பதை பார்ப்பது அவன் வாழ்வின் இன்றியமையான பகுதியாகி விட்டது. எங்கள் மகன் பள்ளிக்கு சென்று விட்டான். அவளை இறுக்கமாக அணைத்தபடியே நம் வாழ்க்கை நெருக்கத்தை இழந்து விட்டதை நான் கவனிக்க தவறி விட்டேன் என்றேன்.

அலுவலகம் விரைந்த நான் காரின் கதவை பூட்டாமலே அவசர அவசரமாக மாடிப்படிகளில் ஏறினேன். கதவை திறந்த ஜேனிடம் என்னை மன்னித்து விடு ஜேன், எனக்கு விவாகரத்து தேவையில்லை என்றேன். எங்கள் வாழ்க்கை கடினமாக மாறியதற்கு காரணம் நாங்கள் ஒருவரை ஒருவர் விரும்பவில்லை என்பதல்ல, நங்கள் எங்கள் வாழ்வின் பொன்னான தருணங்களை மதிக்கவில்லை என்பதுதான் உண்மை என்றேன். அவள் விழித்துக் கொண்டவளாய் என்னை பார்த்தாள். என் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டு விட்டு அறைக்குள் சென்று விம்ம ஆரம்பித்தாள். நான் படியிறங்கி காரை எடுத்தேன்.

வரும் வழியில் என் மனைவிக்காக பூங்கொத்து ஒன்றை வாங்கினேன். விற்பனை பெண்மணி அட்டையில் என்ன எழுத வேண்டும் என்று கேட்டாள். நான் புன்னகைத்துக் கொண்டே “மரணம் நம்மை பிரிக்கும் வரை தினமும் உன்னை காலையில் தூக்கி சுமப்பேன்” என்று எழுதினேன். அன்று மாலை, கையில் பூங்கொத்தோடும் முகத்தில் புன்னகையோடும் மாடிப்படிகளில் ஏறித்துவங்கினேன்.

..................................கதை இத்துடன் நிறைவு பெறவில்லையென்றாலும் இதற்கு மேலும் அதை தொடர்தல் அவசியமற்றது என்று கருதுகிறேன். 

நம் வாழ்வில் நடக்கும் சின்ன சின்ன வாழ்வியல் விசயங்களே உறவுகளை பலப்படுத்தும் மிகப்பெரிய ஆயுதமாய் இருக்கிறதேயன்றி வீடோ, காரோ, சொத்துக்களோ, வங்கியில் பணமோ அல்ல. வாழ்க்கையில் விட்டுக்கொடுத்தலால் வரும் வெற்றியை அறியாதவர்களே பெரும்பாலும் தோற்றுப் போகிறார்கள். நம்மில் எத்தனை பேர் இன்று நம் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கிறோம் என்று எண்ணிப் பார்த்தால் பெரும்பான்மையோர் அந்த நிலையிலேயே தான் இன்றும் உழன்று கொண்டிருக்கிறோம் என்பது தான் உண்மை. கனத்த இதயத்தோடு ஒரு பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது என்னால்...


No comments:

Post a Comment