Pages

Saturday, 15 June 2013

பரிணாம வளர்ச்சி....


தலைப்பை பார்த்தவுடன் நான் ஏதோ அறிவியல் கட்டுரை எழுத போவதாக நினைத்து விட வேண்டாம். இங்கு பரிணாம வளர்ச்சி என்று நான் எதை குறிப்பிட வருகிறேன் என்று முழுவதும் படித்தபின் நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள். 

உலகில் வாழும் ஒவ்வொரு உயிர்களையும் தனித் தனி பேரினத்தின் கீழ் பிரித்த மனிதன், தன்னை போன்ற தோற்றம் உடையவர்களை ஒரே பேரினமாக வகைபடுத்திக் கொண்டான். இனி பரிணாம வளர்ச்சியின் கால சக்கரத்தில், தன்னை வேறொரு பேரினமாக பிரிக்கும் நாள் கூட சாத்தியமே. மனிதன் என்ற இனத்திற்கு மேலான ஒரு பேரினமோ, இல்லை இத்தகையவர்கள் தான் மனிதர்கள், மற்றவைகள் வேறு இனத்தவர் என்றோ பிரிக்கப்படும் சூழ்நிலையோ வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை. எப்படி என்கிறீர்களா? 

ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் பலவிதமான ஆசைகள் உறங்கி கிடக்கின்றன. அவை ஆசைகள் என்ற வட்டத்துக்குள் மட்டும் அடங்கி விட்டிருந்தால் இதை பற்றி பேச வேண்டிய அவசியமே இருந்திருக்காது. மாறாக ஆசைகள் எல்லாம் பேராசைகளாக உருமாற்றம் கொண்டால்?

மனிதன் எப்பொழுது ஆசை கொள்ள ஆரம்பித்தான்? யோசித்து பார்த்து நாம் குழப்பிக்கொள்ள வேண்டாம். ஆனாலும் சுயநலம் என்ற இருள் கட்டுக்குள் அவன் வரத்துவங்கிய நாள் பேராசைகளுக்கான பிறந்தநாளாக இருந்திருக்க கூடும்.

நடந்து செல்பவருக்கு சைக்கிளில் செல்பவர் மேல் பொறாமை, சைக்கிளில் செல்பவருக்கோ மோட்டார் வாகனத்தில் செல்பவர் மேல் பொறாமை. மோட்டார் வாகனகாரருக்கோ காரில் செல்பவரைக் கண்டு பொறாமை. இப்படி தன் தேவைகள் என்னவென்றே உணராமல் பிறர் கண்டு மனம் வெதும்பும் மக்கள் தொகை இங்கு பெருகி அல்லவா போய் விட்டது.

நம்மில் எத்தனை பேர் பிறரின் துன்பம் கண்டு உண்மையாக அழுதிருக்கிறோம்? ஊடகங்கள் சொல்லும் செய்திகளை பார்த்து மனதிற்கு தோன்றிய காரசார விவாதம், பின் காபியோ டீயோ குடித்து விட்டு அடுத்த பிரச்சனைக்கு தாவி விடுதல். இதைத்தானே பெரும்பான்மையோர் செய்து கொண்டிருக்கிறோம்.

தனக்கு வந்தால் தான் தெரியும் காது வலியும் திருகு வலியும் என்று சொல்வார்கள். ஆனால் இன்று சொந்த வீட்டில் நடக்கும் பிரச்சனை கூட கண்ணுக்கு தெரிவதில்லை. நான், நான், நான்... இது மட்டுமே மனதில் வேரூன்றி விடுகிறது நமக்குள்.


நாடுகளை எடுத்துக்கொண்டால் அவர்களுக்கு எல்லைகள் மட்டுமே பிரச்சனையாக இருக்கிறது. அங்கே வாடிக் கொண்டும் தவித்துக் கொண்டும் உயிர்களுக்காக மன்றாடிக் கொண்டும் இருப்பவர்கள் மனித இனமாகவே தெரிவதில்லை. அன்றாடம் கசாப்பு கடைகளில் பலியிடப்படும் விலங்கினங்களோடு தான் அவர்கள் பிணைக்கப்படுகின்றனர். பஞ்சமும் பட்டினியும் தலைவிரித்தாடும் நாடுகள் வளர்ந்த நாடுகளின் கண்களுக்குள் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகமாக தான் தெரிகிறது. அங்கே மக்கள் சுருண்டு விழுந்து சாவதை நாய்களுக்கு ரொட்டி துண்டு போட்டு கொண்டே உச் கொட்டி தொலைகாட்சியில் பார்த்துக் கொண்டிருக்கிறோம் நாம்.

தங்கள் நாடு, தங்கள் உரிமை என போராடிக் கொண்டிருக்கும் அனேக சமூகத்தை காட்டுமிராண்டிகள் என்றோ தீவிரவாதிகள் என்றோ அடைமொழியிடும் நாம் செய்துக் கொண்டிருப்பது என்ன? இதை தான் சர்வைவல் ஆப் தெ பிட்டஸ்ட் என்கிறோம்.

நாட்டின் தீவிரவாதத்திற்கு நாம் என்ன செய்வது என்ற கேள்வி மனதுக்குள் எழலாம். அருமையான கேள்வி, நிதம் நிதம் வாழ்க்கையோடு ஆடும் போராட்டமே பெரும் போராக இருக்கும் போது இதை பற்றிய சிந்தனை நமக்கெப்படி?

நாட்டில் நடக்கும் தீவிரவாதம் அனைத்திற்கும் காரணம் பிறர் தான் என்று சுலபமாக மற்றவர்களை நோக்கி கைக்காட்டி விட்டு வேகமாக அடுத்த பிரச்சனை நோக்கி நகர்ந்துக் கொண்டே இருக்கிறோம் நமக்குள்ளே ஒரு தீவிரவாதி அதை விட கொடூர முகம் காட்டிக் கொண்டிருப்பதை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லாமல்.

கொஞ்சம் யோசித்துப் பார்ப்போமா? நமக்குள் இருக்கும் தீவிரவாதியை.....

பரபரப்பாய் நகர்ந்து கொண்டிருக்கும் அன்றாட வாழ்க்கையில் நாம் எத்தனையோ மனிதர்களை கடந்து கொண்டிருக்கிறோம். அவர்களை நம்மோடு ஒப்பிட்டு பார்த்துக்கொண்டும் அவர்கள் மேல் காழ்புணர்ச்சியோ எரிச்சலோ அடைந்து கொண்டு தான் இருக்கிறோம். யாருமே நம்முடைய தேவை இவ்வளவே என்று திருப்தி அடைவதில்லை.

நமக்குள் வலியவர்கள் எளியவர்கள் என்று பிரித்துக் கொண்டு, நமக்கு நாமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். நம் சுயநல சிந்தனைகளுக்காகவும், சுயநல தேவைகளுக்காகவும் படைக்கப்பட்ட அடிமைகளாக தான் நமக்கு கீழ் வேலை செய்பவர்கள் நம் கண்களுக்குள் தெரிகிறார்கள். அதே நேரம் நம்மிடம் இல்லாத ஒன்று மற்றவரிடம் இருந்து விட்டால் அவர் மேல் பொறாமை பூத்து விடுகிறது.

இப்போதைய மேல்வர்க்கதினரின் (இந்த பதம் கூட அவரவர் பார்வையில் மாறுபடுகிறது) வீட்டு சூல்நிலைகளையே எடுத்துக்கொள்வோம், நான் படித்திருக்கிறேன், எனக்கு முன்னேறவும் சம்பாதிக்கவுமே நேரம் இருக்கிறது, வீட்டு வேலை செய்வதற்கு நம்மை விட தகுதியில் குறைந்தவர் வேண்டும் என்ற எண்ணம் தானே மேலோங்குகிறது. இதுவும் ஒரு வகை பரிணாம வளர்ச்சி தானோ?

நம் அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்களில் நம் தேவைகளை பூர்த்தி செய்யும் எத்தனை பேருக்கு நாம் நன்றி சொல்லிக் கொள்கிறோம்? என்னுடைய தேவையை நிறைவேற்றும் அடிமை அவன் என்ற எண்ணமே நமக்குள் மேலோங்கி இருக்கிறது. தூங்கி எழுந்தால் பால் பாக்கெட் போடுற சிறுவன் (இது நம் தேசிய அடியாளம் ?) துவங்கி, இரவு நாம் தூங்க விழித்திருக்கும் காவல்காரர் வரை நமக்கு நிகராக அவர்களை நிறுத்தி இருப்போமா?

நம்முடைய கழிவறையையே அடுத்தவர் கொண்டு சுத்தப்படுத்தும் பழக்கம் தானே அதிகமாக இருக்கிறது. இதற்கென தனி சமூகத்தையே ஒதுக்கி வைத்து அவர்களுக்கு மனித அந்தஸ்தையே மனதளவில் பறித்து விட்ட கொடுரம் இங்கு நடந்தேறவில்லையா?

ஒருவரின் தேவைகளுக்காக இயந்திரங்கள் என்ற நிலை மாறி இப்பொழுது தங்கள் அந்தஸ்தை நிலை நாட்டவே இயந்திரங்கள் என்ற நிலைக்கு நாம் தள்ளபட்டும் விட்டோம். எத்தனை எத்தனை கண்டுபிடிப்புகள் ஆயுதங்கள் என்ற பெயர் தாங்கி உருவாக்கியவரின் இனத்தையே அழித்துக் கொண்டிருக்கின்றன. இயந்திரங்களின் பிடியில் நம்மை நாமே அடிமைப் படுத்திக் கொண்டிருப்பது எப்பொழுது உணரப்பட போகிறது என்றும் தெரியவில்லை.

வறுமை என்ற கட்டுக்குள் ஒரு இனம் கீழிறங்கி கொண்டிருக்கிறது. சீண்டப்படும் வேறொரு இனமோ தீவிரவாதம் என்ற இன்னொரு பாதை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. நாகரீகம் என்ற பெயரில் ஒரு இனம் இவர்களை எல்லாம் மிதித்து தள்ளி விட்டு மின்னல் வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. 

நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம், ஆம், ஒருவரை மிதித்து தள்ளி விட்டு அவர் மேல் ஏறி நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். இனி பின்னோக்கிய பயணத்திற்கு சாத்தியமே இல்லை. இந்த கட்டுரையை நான் எழுதும் வரையிலும் நீங்கள் வாசித்து முடிக்கும் வரைக்கும் தான் நாம் மனிதர்கள். பின் நாமும் பரிணாம வளர்ச்சியின் வேகத்துக்கு ஈடுக்கொடுக்க துவங்கி விடுகிறோம்.