Pages

Wednesday 7 November 2012

உங்கள் வாழ்க்கையின் முக்கியமான நபர் என்று யாரை கருதுகிறீர்கள்?

பொழுதுபோக்குக்காக நான் முகநூலை பயன்படுத்த ஆரம்பித்து இருந்தாலும் சில நேரங்களில் கருத்துக்களை பகிர்வதற்கும், பலரின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்கும் அது உதவியாக இருக்கிறது என்றால் அது மிகையல்ல. 

இப்படி தான் சமீபத்தில் முகநூலில் "உங்கள் வாழ்க்கையின் முக்கியமான நபர் என்று யாரை கருதுகிறீர்கள்?? ஏன்??? எதனால்????" என்ற கேள்வி Gayathri Devi யால் நண்பர்கள் மத்தியில் வைக்கப்பட்டது.

இதற்கு பலர் பலவிதமான பதிலை கூறி இருந்தனர். சிலர், தான் தான் தனக்கு முக்கியமான நபர் என்றும், மேலும் சிலர், தாய் தந்தையர் தான் என்றும் தங்கள் கருத்தினை பதிவு செய்திருந்தனர். ஒரு பதிவாளரோ ஒரு படி மேலே போய் தன் காதலி தான் தன் வாழ்வின் முக்கியமான நபர் என்று வாதிட்டிருந்தார். அவருடைய கருத்து அவர் வழியில் முக்கியமானதாகவே இருந்தது. மேலும் ஒருவர் தன்னை செதுக்கிய இந்த சமூகம் தான் தனக்கு முக்கியமானது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

பலரும் பலவிதமான விடைகள் கூறி இருந்தாலும் சிலர் கூறிய முக்கியமான சில பதில்களை மட்டும் இங்கு பார்க்கலாம்.

Vasanthakumar Graphicdesigner  என் வாழ்வில் முக்கியமான நபர் என்று நான் கருதுவது என்னை எதிரியாய் நினைக்கும் சிலர், ஏன் என்றால் என்னை எதிரியாய் கருதி எனக்கெதிராய் அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியங்களையும் நான் முறியடிக்க வேண்டும் என்று என்னை நானே செம்மை படுத்தி கொள்ள உதவுகிறார்கள், என்னை வீழ்த்த நினைக்க நினைக்க நான் என்னை மென் மேலும் உயர்த்த மறைமுகமாக அவர்களே எனக்கு உதவுகிறார்கள்....

ஆம்...! அது உண்மை தானே... எதிரிகள் இருக்கும் வரை தானே  நாம் விழிப்போடு செயல்பட முடியும்?

Jeeva Rajaseker  நம் வாழ்வின் முக்கியமான நபராக நம்மை தவிர வேறு யார் இருக்க முடியும்? வாழ்வின் ஒவ்வொரு தருணங்களிலும் சிலர் முக்கியமானவராக வந்து போவர். "நேற்றைய யாரோ இன்றைய முக்கியமானவர், இன்றைய முக்கியமானவர் நாளைய நினைவில் நின்றவர்". இதில் உறவுகளை வேண்டுமானால் விதிவிலக்காக சொல்லலாம். அதிலும் வயதுக்கு வரும் வரை தாய் முக்கியம், திருமணம் வரை தந்தை முக்கியம், விளையாடும் வயதில் சகோதரர்கள் முக்கியம் (அதிலும் சண்டை போட), சம்பாதிக்கும் வரை கணவர்/மனைவி முக்கியம், வயதான காலத்தில் குழந்தைகள் முக்கியம் (தயவு தேவை படுகிறது). உறவுகளிலும் இந்த முக்கியத்துவம் மாறுபடுகிறது. நேற்றைய நண்பனாய் இருந்தவன் இன்றைய நினைவுகளில் மட்டும், இன்றைய பகைவன் நாளைய உற்ற தோழனாய் மாறக்கூடும்.... மொத்தத்தில் வாழ்வின் நடந்தவை, நடப்பவை, நடக்க போகின்றவை எல்லாவற்றிலும் நாம் இருப்போம், நாம் மட்டுமே இருப்போம்.... என்றும் எப்போதும்...

இது எனது கருத்து...

Shanmuga Murthy ம்ம்ம்..நல்ல கேள்வி.ஆனால்.. 'முக்கியமான' என்ற பதத்தில் பலகேள்விகள் தொக்கி நிற்கிறது. எந்த வகையில் முக்கியமான என்பது அறியப்படவேண்டும்.ஆனால் நமது வாழ்க்கையில் முக்கியமான திருப்பங்களுக்கு காரணமானவர்களை அவ்வாறு கொள்ளலாம். ஆனால் அது எல்லோருக்கும் சாத்தியப்படக்கூடிய ஒன்று அல்ல. சிறுவராய் இருக்கையில் தந்தை ஹீரோ. ஆனால் வளர்ந்த பின் அந்த இமேஜ் கொஞ்சம் குறைந்துவிடும். அதன் பின் நமது வாழ்க்கையில் நமக்கு நிலையான வாழ்க்கையில் பங்கேற்கும் கணவன்/மனைவிதான் முக்கியமான நபர். நமது நலனில் , வாழ்க்கையில், தன் எதிர்பார்த்த வாழ்க்கை கிடைக்காதபோதும் ஒருவருக்கொருவர் புரிந்து வாழத்துவங்கும் அந்த இருவர்..அதாவது கணவனுக்கு மனைவி/மனைவிக்கு கணவன் என்பவர்தான் முக்கியமான நபர். இது பொதுவான விதி. ஆனால் ஒரு இக்கட்டான சூழலில் ,தனக்கு விடிவே இல்லையோ என்று ஒருவர் தடுமாறி நிற்கையில் ..கை கொடுத்து தூக்கிவிட்டு உதவி செய்பவரும் மிகவும் முக்கியமான நபரே. :-)) ஒருவருக்கு காதலி/காதலன் எந்த வகையிலும் முக்கியமான நபர் அல்ல. அக் காதல் வெற்றி பெற்று அவர் கணவன் -மனைவி யாகும் பட்சத்தில்தான் முக்கியத்துவம் பெறுவர் என்பது என் கருத்து.

காதலனோ காதலியோ கணவன் மனைவியாகும் பட்சத்தில் தான் ஒருவொருக்கொருவர் முக்கியமானவர்களாக ஆகிறார்கள் என்பது சிந்தித்து ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயம் தான்... 

மொத்தத்தில் இந்த விசயத்தை உங்களுடன் பகிர வேண்டும் என்று தோன்றியதால் பகிர்ந்தேன். தங்களின் கருத்துக்களையும் தெரிவித்தால் மேலும் அறிந்துக்கொள்ள உதவியாக இருக்கும். 

No comments:

Post a Comment