Pages

Tuesday, 30 October 2012

ஜூசி......


ஜூசி பிறந்த போது நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு விலங்கியல் படித்துக் கொண்டிருந்தேன். மறுநாள் எனக்கு மாதாந்திரத்தேர்வு. எனவே இரவில் கொட்ட கொட்ட விழித்து அதுவரை திறக்கப்படாத புத்தகத்திடம் அதன் புதுமை வாசத்தோடு மல்லுக்கட்டி கொண்டிருந்தேன். இரவு மணி பனிரெண்டு இருக்கும், திடீரென சிண்டு அலற ஆரம்பிக்கிறாள். அங்குமிங்குமாய், ஒவ்வொரு அறையாய் சென்று அனைவரின் தூக்கத்தையும் கலைக்கும் நோக்கில் ஏதோ ஒரு ஏக்க குரலில் தளுதளுக்கிறாள். அவள் குரல் கேட்டு என் படுக்கையறையிலிருந்து வெளியே வருகிறேன். என்னை கண்டதும் அவளுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. என் கால்களை கட்டிக் கொள்கிறாள். அவளோடு வருமாறு கெஞ்சும் குரலில் இரஞ்சுகிறாள். என்னதான் நடந்து விட போகிறது பார்க்கலாம் என்ற தைரியத்தில் அவளோடு செல்கிறேன். என் தாயின் படுக்கையறையை கடக்கும் போது நடு இரவில் பேய் மாதிரி என்னடி உலவுகிறாய் என்ற கண்டிப்பையும் மீறி சிண்டு பின்னால் சென்றேன்.

அவளின் படுக்கையறை. எனக்கு உதவி செய்யேன் என்ற கெஞ்சல் பார்வையோடு அவள் படுக்கையில் படுக்கிறாள். அவள் குரல் கேட்டு அவளின் தாய் நரியும் அங்கு ஆஜர். நரி என்று அவளுக்கு ஏன் பெயர் வந்தது என்பது தனிக்கதை. அவள் தான் எங்கள் வீட்டு ஜார்ஜ் பெர்னாண்டஸ் (அப்போதைய ராணுவ மந்திரி). அவள் ஒருத்தி இருந்து விட்டால் அனைவருக்கும் ஒரு தைரியம். சரி, கதைக்குள் வருவோம்.

சிண்டுவின் முனங்கல் ஒலி அதிகரிக்க ஆரம்பிக்கிறது, திடீரென அவள் அருகில் ஒரு அழகிய நிலவு. நரி லாவகமாய் அவளை தடவி கொடுத்து தாய்க்கும் சேய்க்குமான தொப்புள் கொடி உறவை துண்டிக்க உதவுகிறாள். சோர்வோடு படுத்துக் கொண்ட சிண்டுவை வாஞ்சையுடன் தலையை வருடிக் கொடுக்கிறாள். எனக்கும் ஒரு பரவசம். நானே தாயானதாய் ஒரு உணர்வு. அதுவரை என்னை போகாதே போகாதே என்று இறைஞ்சி கொண்டிருந்த சிண்டு என்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. சேயை கண்ட மகிழ்ச்சியில் அவள் திளைத்து விட்டாள்.

மறுநாள் பரீட்சை நினைவில் வர நானும் என் அறையில் வந்து படுத்துக்கொண்டேன். ஏனோ அந்த புது வரவு என் மனதில் இனம் புரியா ஒரு சந்தோசத்தை விதைத்து விட்டிருந்தது. மேலும் மேலும் தொடர்பரீட்சை என்னை இம்சிக்க ஆறு நாட்கள் ஆறு நொடிகளைப் போல் ஓடி விட்டிருந்தன.

திடீரென அந்த புதுவரவின் நினைவு வெகுவாய் தாக்க சிண்டுவை காணச்சென்றேன். பாலூட்டிக் கொண்டிருந்த அவள் என்னை கண்டதும் சற்றே தலை தூக்கி பார்த்து விட்டு மீண்டும் படுத்துக் கொண்டாள். மெதுவாக அவள் அருகில் சென்று அமர்ந்தேன். என்னை ஓரக்கண்ணால் பார்த்த புதுவரவை மென்மையாக கையிலெடுத்துக் கொண்டேன். “ஜூசி” என் வாய் மெதுவாக அவளுக்கான பெயரை உச்சரித்தது. அவளோடு என் அறைக்குள் நுழைந்தேன். ஏனோ இவள் எனக்காக பிறந்தவளோ என்று தோன்றியது. பின்னாலயே வந்த சிண்டுவிடம் இனி நீ என் அறையிலேயே படுத்துக்கொள் என்றவாறு அவள் படுக்கையை இடமாற்றினேன்.

அதன் பின் வந்த நாட்கள் சுவாரசியமானவை. ஜூசி வளர்ந்து கொண்டிருந்தாள். தாயிடம் பால் குடிக்கும் நேரம் போக மீதி நேரம் என் மடியில் தான். இரவில் போது தாயிடம் தூங்கும் அவள் அதிகாலை ஐந்து மணியளவில் விடியும் நேரம் என் முகத்தருகில் இருப்பாள். என் மூச்சு காற்றை பிடித்து விடும் முயற்சியில் தன் பிஞ்சு கரங்களால் என் முகத்தில் கிச்சு கிச்சு மூட்டுவாள். கல்லூரி முதல் மணி அடித்த பின்பே படுக்கை விட்டு எழும் நான் அவளால் அதிகாலை எழும் நிலைக்கு தள்ளப்பட்டேன். இருந்தும் அவள் மேல் ஒரு தீராத காதல். அவள் என்றும் நன்றாய் இருக்க வேண்டுமென்று மனம் பிரார்த்தித்துக் கொண்டே இருந்தது.

திடீரென என் சித்தப்பா தூத்துக்குடியிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தார்கள். வீட்டில் அங்குமிங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருந்த ஜூசியை கண்டதும் அவர்களுக்கு பிடித்து விட்டது. என் அம்மா வேறு அவளை பற்றி ஆஹா ஓஹோவெனப் புகழ அவளை தன்னோடு அழைத்து சென்றே தீருவேன் என்று அடம்பிடிக்க ஆரம்பித்தார். அப்பா அம்மாவோடு கலந்து பேசி, அவள் சித்தப்பாவோடு இருந்தால் மிகவும் நன்றாக இருப்பாள் என்று என்னை ஆறுதல் படுத்தினர். மனம் நிறைந்த பாரத்தோடு அவளை அவரிடம் ஒப்படைத்தேன்.

அன்று இரவு எனக்கு தூக்கம் தொலைந்த இரவாய் போய் விட்டது. என் மகள் எங்கே என்று பார்வையாலே கேட்ட சிண்டுவை பார்க்கும் சக்தியற்றவளாய் என் படுக்கையறை கதவை மூடினேன். சிலநாட்கள் அதிகாலை தூக்கம் விழித்து பின் மீண்டும் நெடுநேரம் தூங்க ஆரம்பித்தேன். இதற்கு இடைப்பட்ட நாட்களில் ஜூசியை இருமுறை சந்தித்தேன். சித்தப்பாவின் செல்லப்பிள்ளையாய் அவரோடவே எப்பொழுதும் காரில் பயணிக்கிறாள். அவளை பற்றிய என் கவலை என்னை விட்டு கொஞ்சம் கொஞ்சமாய் விலகி கொண்டிருந்தது.

திடீரென ஒரு வெள்ளி அதிகாலை என் மூக்கில் ஜூசி எப்பொழுதும் கொடுக்கும் முத்தம். அதோடு சேர்த்து என் மூச்சு காற்றை பிடித்துவிடும் முயற்சி.. “ஜூசி” அழைத்தவாறே விழித்துக் கொள்கிறேன். அதிகாலை மணி ஐந்து. கனவா நினைவா என்று சுதாரிப்பதற்குள் என் மூக்கில் நிஜமாய் ஈரம். தூக்கம் தொலைந்து அம்மா பின்னால் போய் அணைத்துகொள்கிறேன். ஆச்சர்ய குறியோடு அம்மா காபியை நீட்டுகிறாள். “வரும் ஞாயிறு சித்தப்பா வீட்டில் வருகிறார்களாம்” அம்மா செய்தியாய் சொல்லி விட்டு போன வார்த்தைகள் என்னுள் மீண்டும் பரவசத்தை ஏற்படுத்தின.

அப்படியானால் நான் ஜூசியை பார்க்கப்போகிறேன். ஞாயிறு எனக்கு சுவர்க்கமாய் விடிந்தது. ஒவ்வொரு மணித்துளியும் ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்க வாசலில் வந்து நின்றது சித்தப்பாவின் கார். ஓடி சென்று காரின் உள் தேடினேன். “ஜூசி வரவில்லை” சோகத்தோடு ஒலித்த சித்தியின் குரலுக்கு ஏன் என்று கண்களாலே வினவினேன். “வியாழன் இரவு அவள் இறந்து விட்டாள்” . அவள் எப்படி இறந்தாள் என்ற விளக்கத்தை சித்தப்பா அம்மாவிடம் சொல்லி கொண்டிருக்க எனக்கோ வெள்ளி காலை அவள் கொடுத்த முத்தம் நினைவிற்கு வந்தது...


No comments:

Post a Comment