காற்றின் சுழற்சியோ,
இல்லை விதியின் சதியோ,
திசைமாறி போய் விட்ட
கட்டுமரத்தின் நுனியொன்றில்
படபடத்துக் கொண்டிருக்கிறது
அந்த வெள்ளைக் கொடி...!
இன்றாவது ரட்சிக்கப்பட்டுவிட
மாட்டோமாவென தகித்த
அந்த ஆத்மாக்களின் கண்களுக்குள்
குளுமையாய் தென்பட்டன
மூங்கில் காடுகள்...!
இதோ கரை தட்டுப்படுகிறதென
சற்றே ஆசுவாசப்படுத்திய
நேரத்திலே தான்
சமாதானத்தின் தூதுவன்
கழுமரத்தின் உச்சியிலிருந்து
கொடிப் பற்ற கை நீட்டுகிறான்...!
இது அலங்கரிக்கப்பட்ட
கொலைக்களமென்றறியாத
ஆத்மாக்களின் கூக்குரல்
தூரத்தே தேயத் துவங்கியது...!
கொஞ்சம் கொஞ்சமாய்
இடம் விட்டு
நழுவிக் கொண்டிருக்கிறது கட்டுமரம்.
வீசியெறியப்படும்
செங்குருதிகளின் வழித்தடத்தோடு...!