Pages

Saturday, 8 December 2012

பூனைகளின் ராஜ்ஜியம் – நான் கண்ட மாறுபட்ட குணாதிசயங்கள் (பகுதி - 6)

நரி: 

நரி, எங்கள் வீட்டு காவலாளி. யாருக்கும் பயப்படாது. அதன் பார்வையிலேயே ஒரு அதிகாரம் இருக்கும். வெளி மனிதர் யார் வந்தாலும் அதன் சீற்றம் கண்டு ஒரு நிமிடம் கலங்கி தான் போவார்கள். அது வேட்டையாடும் தந்திரமும், நாய்களை கண்டால் எதிர்த்து நின்று மல்லுக்கட்டும் துணிவையும் கண்டு அப்போதைய ராணுவ அமைச்சரான ஜார்ஜ் பெர்னாண்டஸ் பெயர் சொல்லியே அழைத்து வந்தோம். பின்னர் மீன் கழுவும் போது லாவகமாக அதனை எடுத்துக் கொள்ளும் திறமை பார்த்து என் அம்மா அதனை நரி என்று அழைக்க அன்று முதல் அதன் பெயர் நரி என்றாகி விட்டது. எவ்வளவுக்கு எவ்வளவு அது வீரமாக இருக்குமோ அவ்வளவு அன்பானது. காலை சுற்றி சுற்றியே எப்பொழுதும் வரும். அழகாய் மடியில் வந்து படுத்துக்கொள்ளும். யாராவது ஒருவரின் அருகாமை அதற்கு இருந்துக்கொண்டே இருக்க வேண்டும். அதன் வீர பிரதாபங்களையும் தாய்ப்பாசத்தையும் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். 

ஒருமுறை எங்கள் வீட்டின் செல்ல பூனையான ஜூனியர் வீட்டின் உள்ளே அமர்ந்திருந்தது. அப்பொழுது எங்கிருந்தோ வந்த தெரு நாய் ஒன்று உள்ளே புகுந்து அதன் மேல் பாய தயாராகி விட்டது. ஜூனியர் தப்பிக்க வழியில்லை. பார்த்துக்கொண்டிருந்த நானோ பதறிக்கொண்டு ஓடி வருவதற்குள் எங்கிருந்து தான் வந்ததோ நரி, அந்த நாயின் மேல் பாய்ந்து அதனை விரட்டியடித்தது. பின்னர் ஒருநாள் அது நிறைமாத கர்ப்பமாக இருந்த சமயத்தில் நான் வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்தேன். எங்கிருந்தோ இரண்டு நாய்கள் அந்த பக்கம் வந்து நரியை தாக்க முயன்றன. நரிக்கு வந்த ஆவேசத்தை பார்க்க வேண்டுமே, இரண்டு நாய்களின் அடி வயிற்றை மாற்றி மாற்றி குறி வைத்து பாய்ந்தது. அவற்றின் அடிவயிற்றின் தலைகீழாக நகங்களால் இறுக்க பற்றிக்கொண்டு பற்களால் கடித்தது. நாய் பதறி அதனை அரும்பாடுபட்டு உதறினால் அடுத்த நொடி அடுத்த நாயில் அடிவயிற்றை சிண்டு கவ்விக்கொண்டிருக்கும். அதன்பின்னும் அந்த நாய்கள் அங்கு நிற்குமா என்ன? 

நரியை பொறுத்தவரை பெற்றால் தான் பிள்ளை என்ற சித்தாந்தம் எல்லாம் அதற்கு கிடையாது. வீட்டில் எந்த பூனை குட்டி ஈன்றிருந்தாலும் அதற்கும் தாய் நரியே. எல்லா குட்டிகளும் நரியை சுற்றி சுற்றியே வரும். அது தாயாக இருக்கும் நேரத்தில் எல்லா குட்டிகளுக்கும் பாரபட்சமில்லாமல் பால் கொடுக்கும். அதன் தாய் பெரியம்மா வீட்டில் குட்டி ஈன்று விட்டு இறந்தவுடன் அங்கிருந்து அவற்றை சோகத்தோடு என் தம்பி வீட்டிற்கு கொண்டு வந்தான். நரி நொடியும் தாமதிக்காது அவற்றை அரவணைத்துக் கொண்டு அன்போடு பால் கொடுத்து பராமரிக்க துவங்கி விட்டது. ஒரே நேரத்தில் அதன் குட்டிகள் நான்கு, தாயின் குட்டிகள் ஐந்து என்று ஒன்பது குட்டிகளை சீராட்டிய நரி என்றும் எங்கள் ஹீரோயின் தான். அதற்கென ஸ்பெசலாக முட்டைகளும், பாலும் மீனும் என் அம்மாவால் கொடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். 

நரி, சிறந்த தாய் மட்டுமில்ல, சிறந்த செவிலி தாயும் தான். வீட்டில் எந்த பூனை பிரசவித்தாலும் சரி, பிரசவம் பார்ப்பது நரி தான். லாவகமாக குட்டிகளை வாயில் கவ்வி பிரித்தெடுப்பதாகட்டும், பிரசவித்த தாயை நக்கி ஆறுதல் கொடுப்பதாகட்டும், நரிக்கு ஈடு இணை கிடையவே கிடையாது. 

வீட்டிற்கு யார் வந்தாலும் வாசலுக்கு முதலில் ஓடுவது நரி தான். அது கத்தும் கதறலில் நாய் கூட தோற்று போகும். அவர்களை வாசலிலேயே நிறுத்தி வைத்து ஓடி சென்று அம்மாவிடம் முறையிடும். அம்மாவின் முகத்தில் சிரிப்பை பார்த்தால் தான் அந்த இடம் விட்டு அகலும். 

இப்படி வீட்டிற்கே காவலாகவும், மகாராணியாகவும் இருந்த நரியின் முடிவு கொஞ்சம் சோகமானதே. ஒரு நாள் இரவு பனிரெண்டு மணியிருக்கும். தெருவில் நாய்களின் அலறல் சத்தம். கூடவே நரியின் ஆவேச சீற்றம். நான் பதறிக்கொண்டு அப்பாவிடம் முறையிட, அப்பா டார்ச் எடுத்துக்கொண்டு சென்று பார்த்தபோது நரி இறந்து விட்டிருந்தது. ஆறு நாய்களின் வெறித்தனமான தாக்குதலில் அது வீர மரணம் அடைந்து விட்டிருந்தது. கிட்டத்தட்ட ஆறு ஏழு வருடமாக தனி ஆட்சி நடத்தி வந்த நரியின் முடிவு அது மறைந்து கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆனப்பிறகும் மறக்க முடியாததாய் தான் இருக்கிறது.

........... தொடரும்

பூனைகளின் ராஜ்ஜியம் – நான் கண்ட மாறுபட்ட குணாதிசயங்கள் (பகுதி - 5)

நரியின் தாய்: 


கிட்டத்தட்ட பத்து வருடங்களாக வீட்டில் தனி ராஜ்ஜியம் நடத்தி பின் வீட்டிலேயே அதன் ஆயுள் முடிந்தது. அதன் ஆயுள் வரை எங்களிடம் அதிக நெருக்கமும் கிடையாது, வெறுத்தும் போகவில்லை. கொடுத்த உணவினை உண்டு விட்டு அமைதியாக மெத்தை மேலோ இல்ல ஏதாவது சாக்கு படுக்கை மேலோ படுத்து தூங்கும். தன்மான உணர்வு அதற்கு ஜாஸ்தி. மீன் சாப்பிடும் பொழுது விரட்டி விட்டால் இரண்டு நாட்கள் வீட்டுப் பக்கம் திரும்பி கூட பார்க்காது. அம்மா மீதும் பெரியம்மா மீதும் அதற்கு கொள்ளை பிரியம். இரண்டு பேரும் எப்பொழுதும் சேர்ந்தே இருக்க வேண்டும் என்று ஆசைப்படும். பெரியம்மாவை இங்கு வரசொல்லியோ அம்மாவை பெரியம்மா வீட்டிற்கு வர சொல்லியோ சத்தமிட்டு அழைத்துக்கொண்டே இருக்கும். அவர்கள் இருவரும் சந்தித்து பேசிக் கொண்டால் அவர்களுக்கிடையில் காலடியில் படுத்துக்கொள்ளும். குட்டிகளை அன்போடு பார்த்துக்கொள்ளும். ஆனாலும் குட்டிகள் வயதுக்கு வந்த உடன், அவற்றை தனியாக பிரித்து விடும். பின் அவை யாரோ, இது யாரோ?. அதுவரை ஒரே பெண் பூனையாய் ராஜ்ஜியம் செலுத்தி வந்த அது, நரி பெரிதாகி குட்டி ஈன்றவுடன் கோபித்துக் கொண்டது. குட்டி போடும் பொழுதெல்லாம் வீட்டுக்குள்ளயே குட்டி ஈன்று வந்த அது, நரி குட்டி ஈன்றதும் அதன் இடத்தை மாற்றிக் கொண்டது. பக்கத்து வீடான என் பெரியம்மாவின் வீட்டுக்கு அதன் இருப்பிடத்தை மாற்றியது. குட்டிப்போட்டு சிறிது நாள் கழித்து அவை பெரிதாக ஆரம்பித்ததும் தான் மீண்டும் வீட்டிற்கு அவற்றை அழைத்து வரும். பின் வந்த எல்லா பிரசவ காலங்களிலும் அது இப்படி தான் குட்டி போட்டுக்கொண்டிருந்தது. அது ஒரு நாள் வீட்டிற்கு வரவில்லை என்றாலும் நானும் தம்பியும் புரிந்துக் கொண்டு அங்கு போய் தாயையும் குழந்தைகளையும் பார்த்துவிட்டு வருவோம். அதன் கடைசி காலங்களில் கூட தனது குட்டிகளை பெரியம்மா வீட்டில் ஈன்று விட்டு, இரண்டாம் நாளே வீட்டுக்கு வந்து மரணமடைந்து விட்டது............ தொடரும்

பூனைகளின் ராஜ்ஜியம் – நான் கண்ட மாறுபட்ட குணாதிசயங்கள் (பகுதி - 4)

ப்ளாக்கி: 

ப்ளாக்கி பற்றி ஏற்கனவே சொல்லி இருக்கிறேனே, ஆம், வீட்டிற்கு வந்த முதல் பூனை அது. அது ஒவ்வொரு தடவையும் அதன் துணை குட்டி ஈனும் காலம் எல்லாம் வீட்டை விட்டு சென்று விடும். குறிப்பிட்ட காலம் முடிந்த பிறகு தான் வீட்டிற்கே திரும்பி வரும். வீட்டிற்கு வந்தாலும் யாரையும் தொட அனுமதிக்காது. எப்பொழுதாவது நான் அருகில் சென்றால் மட்டும் அசையாமல் நின்றிருக்கும். அதனை தூக்கி மடியில் வைத்துக்கொண்டால் கொஞ்ச நேரம் அப்படியே தூங்கும். மிகவும் குண்டாக, பார்க்கவே தனி அழகோடு இருக்கும் அதன் மேல் எனக்கேனோ கொள்ளை பிரியம். ஐந்து வருடங்கள் கழித்து வீட்டை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்தது. பின் ஒருநாள் காணாமலே போய் விட்டது. வயதான ஆண் பூனைகள் காட்டில் சென்று தனியாக வசிக்குமென்றும், வேட்டையாடியே உணவினை புசிக்கும் என்றும் வீட்டில் பெரியவர்கள் சொன்னார்கள். அத்தகைய ஆண் பூனைகளை விருது என்று அழைப்பார்களாம்.

                                                                                                                                  ........... தொடரும்

பூனைகளின் ராஜ்ஜியம் – நான் கண்ட மாறுபட்ட குணாதிசயங்கள் (பகுதி - 3)

பூனைகள் பெருக காரணம்: 


இத்தகைய சூழ்நிலையில் தான் ஒரு பெரும் மாற்றம் ஒன்று நிகழ்ந்தது. ஆம், பூனைக்குட்டிகளை வாங்கி சென்றவர், பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை அனாதையாக தெருவில் விட்டுச்சென்றார். அப்படி விட்டுச்சென்ற பூனைக்குட்டி ஒன்று எங்கள் அப்பாவின் கண்ணில் பட, அவர் அதனை கையில் எடுக்க அங்கு வந்த பெண்மணி அதனை தானே வளர்ப்பதாக கூறி வாங்கிச்சென்றார். ஏதோ ஒரு கோபத்தில் வீட்டுக்கு வந்த அப்பா, இனி பூனை குட்டிகளை அந்த ஆளிடம் கொடுக்க கூடாது என்று எல்லோருக்கும் கட்டளையிட்டார். 

அடுத்த தடவை வெள்ளை வெளேரென ஒற்றையாய் ஒரு குட்டி பிறந்தது. துருதுருவென நன்கு வளர்ந்து கொண்டிருந்த அதனை வளர்ப்பதற்கு யாரும் கிடைக்காததால் எங்கள் வீட்டிலேயே வளர ஆரம்பித்தது. அதன் பெயர் நரி. பின்னர் தான் எங்கள் வீட்டில் பூனைக்குட்டிகள் வெளியே போகாமல் வீட்டிலேயே வளர ஆரம்பித்தன. நரி பெரிதாகி அதுவும் குட்டி போட்டது. நரி ஈன்ற குட்டியின் பெயர் சிண்டு. இவை இரண்டையும் பற்றி சிறிது நேரம் கழித்து விளக்குகிறேன். 

எவ்வளவோ குட்டிகள் பின்னர் வீட்டில் வளர்ந்தாலும், அவற்றின் வாரிசுகள் பல்கி பெருகி இருந்தாலும் பல பூனைகள் நோய்கள் வந்து ஒரே நாளில் இறந்தும் போயிருக்கின்றன. ஒரே சமயம் முப்பத்தி மூன்று பூனைகள் வரை எங்கள் வீட்டில் உண்டு. அத்தனைக்கும் தனியாக மீன் வாங்கி சமையல் எனவும், எங்கள் பசுக்களில் இருந்து சுட சுட கறந்த பால் ஒரு நேரம் இரண்டு லிட்டர் வரை என்று அவற்றின் ராஜ்ஜியம் பல்கி பெருகியே இருந்தது. எல்லா பூனைகளுக்கும் பெயர் வைக்கவில்லை என்றாலும், நாங்கள் மிகவும் ரசித்து பெயர் சொல்லி கூப்பிட்டவுடன் ஓடி வரும் பல பூனைகளும் அதில் அடக்கம். அப்படி பட்ட சில பூனைகளையும் அவற்றின் விசித்திர குணாதிசயங்கள் பற்றியுமே இங்கு விளக்க எண்ணுகிறேன்.

                                                                                                                                 ........... தொடரும்
                                                                                                                                                 பகுதி (4)

பூனைகளின் ராஜ்ஜியம் – நான் கண்ட மாறுபட்ட குணாதிசயங்கள் (பகுதி - 2)

பூனைக் குட்டிகள்: 


மடமடவென வளர்ந்து விட்ட பூனைகள் இரண்டும் மிகவும் செல்லமாக வலம் வந்தன. குட்டிப்போடும் பருவம் வந்ததும் பெண் பூனை குட்டி போட்டது. தந்தை போலவே அழகு கறுப்பில் குட்டிகள் இருந்ததால் அப்பாவின் அலுவலக தோழர்கள் அதனை எடுத்துச் சென்றார்கள். ஒரு நிலையில் பூனைக் குட்டியின் தேவைகள் எங்கள் சுற்றத்தார் மற்றும் நட்பு வட்டாரத்தில் குறைய ஆரம்பித்தது. டீ.வியில் மாகாபாரதம் தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிப்பரப்ப ஆரம்பித்த காலம் அது. அப்பாவிடம் அழுது அடம் பிடித்து சொந்தமாகவே டீ.வியும் வாங்கி விட்டிருந்தோம். 

வீட்டில் வளர்ந்து கொண்டிருந்த பூனைக் குட்டிகளை அடுத்து என்ன செய்வது என்ற கேள்வி எழுந்தவுடன், எங்கள் தோட்டத்து பணியாள் ஒரு உதவி செய்ய முன்வந்தார். அதாவது பூனைகுட்டிகளின் தேவைகள் உள்ள வீட்டில் அவரே கொண்டு போய் கொடுத்து விடுவார். அதற்காக அப்பா அவருக்கு ஐம்பது ரூபாய் இனாமாக குடுக்க வேண்டியது. இந்த டீலிங் அப்பாவிற்கு பிடித்திருந்தது. காரணம் குட்டிகளை தெருவில் அனாதைகளாக விட யாருக்கும் மனமில்லை. எனவே இப்பொழுது எங்கள் வீட்டு குட்டிசெல்வங்கள் பிறந்த கொஞ்ச வாரங்களில் எங்கள் தோட்ட பணியாள் கைகளுக்கு மாறிக்கொண்டிருந்தன.

........... தொடரும்

பூனைகளின் ராஜ்ஜியம் – நான் கண்ட மாறுபட்ட குணாதிசயங்கள் (பகுதி-1)

வீட்டிற்கு பூனைகள் முதலடி எடுத்து வைத்த கதை:


அது மகாபாரதம் தூர்தர்சனில் ஹிந்தியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த காலம், காலையிலயே அன்றைய தினமலரில் மகாபாரதத்தின் முழு வசனமும் தமிழில் இடம்பெற்று விடும். அதனை படித்து விட்டு பின் டீ.வி முன்பு மகாபாரதம் பார்க்க அமர்வோம். இப்பொழுது போல் முன்பெல்லாம் எல்லோர் வீட்டிலும் டீ.வி கிடையாது. எங்கள் சுற்றுப்புறத்தில் சஞ்சீவி தாத்தா (அந்த தாத்தாவின் மகன், அதாவது எனது சித்தப்பா, அவருக்கும் எங்களை விட இரண்டோ மூன்றோ வயது அதிகமாக இருக்கும், எனவே அவரை அண்ணன் என்றே அழைப்போம், ஆனால் அவரது அப்பா எங்களுக்கு சஞ்சீவி தாத்தாவாகவே இருந்தார்) வீட்டில் மட்டுமே டீ.வி உண்டு. ஞாயிற்று கிழமையென்றால் ஊரில் பாதி சிறுவர்களும் அவர் வீட்டில் தான் இருப்போம். 

அவர்கள் வீட்டில் தான் ஒரு பெண் பூனை இருந்தது. அது ஒவ்வொரு தடவை குட்டி போடும் போதும் நானும் தம்பியும் அந்த குட்டிகளை ஆவலுடன் பார்ப்போம். அவற்றை மடியில் எடுத்துவைத்து கொஞ்சிக் கொண்டிருப்போம். பின் அடுத்த வாரம் செல்லும் போது அவற்றை காணாது. எங்கே என்று கேட்டால் கேட்பவர்களுக்கு கொடுத்து விட்டோம் என்பார்கள். ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும் அப்பொழுது. 

பின்னர் ஒரு தடவை அந்த பூனை குட்டி போட்டிருந்தபோது அதன் அழகு என்னை வெகுவாக கவர்ந்து விட்டிருந்தது. கரு கரு வென இருந்த அந்த பூனைக் குட்டியின் நெற்றியில் மட்டும் வெள்ளையாக ஒரு நாமம். அதன் நான்கு கால் பாதத்தில் வெள்ளை சாக்ஸ் மாட்டி விட்டது போல் வெண்மை. பின் அடிவயிறு முழுவதும் வெண்மை. இப்படி அது என் கண்களை கவர்ந்து வா என்னை எடுத்துக்கொள் என்பது போல் என்னுடம் மிகவும் ஐக்கியமாகி விட்டிருந்தது. 

வீட்டில் வந்து அப்பாவிடம் கெஞ்சி அதனை தூக்கி வர அனுமதி வாங்கினேன். ஒன்றை குட்டியாய் இருந்தால் அது விளையாட என்ன செய்யும், பாவம் என்ற என் தம்பியின் புலம்பல் ஜெய்க்க, இரண்டு குட்டிகள் எங்கள் வீட்டில் விளையாட துவங்கின. மற்றொரு பூனை குட்டியும் கருப்பு வெள்ளை தான், ஆனால் அதில் வெள்ளை நிறம் கொஞ்சம் அதிகம். ப்ளாக்கி (ஆண்) என்று பெயரிடப்பட்ட அந்த கருப்பு பூனை தான் எனக்கு செல்லம். மற்றொன்றிற்கு (பெண்) ஏனோ பெயரிடவில்லை.


........... தொடரும்
பகுதி (2)